கருந்தமலை மாயோன் காவியம்பாகம் 9

ராக்கப்பன்

ராவுத்தர் அய்யா கதை

 

வழக்கமான ஒரு காலை பொழுது, வெயில் சுட்டெரித்து  கொண்டிருந்தது. வழக்கம்போல ராக்கப்பன், திருக்கோஷ்டியூர் திருக்கோயிலுக்கான பால் வழங்கிவிட்டு வீடு திரும்பியிருந்தார். நடை களைப்பில் அயர்ந்த நேரம், சிறு கூட்டம் மெல்ல நகர்ந்து வருவதை ராக்கப்பன் கண்டார்.

அப்படி வந்தவர்களில், ராக்கப்பன் வயதொத்த ஒரு இஸ்லாமிய நபர், ராக்கப்பன் வீடு முற்றத்தில் மயங்கி விழுந்தார். பதறிய ராக்கப்பன், தண்ணீர் கொடுத்து அவரோடு வந்தவர்களை ஆசுவாசப்படுத்தினர். வந்தவர் இப்ராஹிம் ராவுத்தர் என்று தம்மை அறிமுக படுத்திக்கொண்டார். நீண்ட பயணத்தில் தன் குடும்பத்தாருக்கு மட்டுமே உணவு இருந்ததாகவும் அதனால் தான் உண்ணாமல் பயணித்ததாகவும், அந்த களைப்பில் மயங்கி விழுந்ததாக இப்ராஹிம் தெரிவித்தார். பசியினால் மயக்கம், உணுவு பற்றாக்குறை என்பதெல்லாம் ராக்கப்பனுக்கு புதிதாக பட்டது. எண்ணம் கருந்தமலை சென்று வந்தது. உணவோடு வாழந்த மனிதன் உணவை தேடி ஓடுவதென்ன ? என்ற கேள்வி ராக்கப்பன் மனதில் எழாமல் இல்லை!

வந்தவர்களுக்கு உணவு தயார் செய்ய சொல்ல வீட்டுக்குள் நுழைந்த ராக்கப்பன், அழகி  உணவு தயார் செய்து இலையிட தயாராய் இருப்பதாய் கண்டு மனம் மகிழ்ந்தார். தாயுள்ளம், சொல்லாமல் பசியறிந்தால் அழகி. அறிந்தோர், தெரிந்தோருக்கு உணவளிக்கவில்லை. யாரென்று தெரியாதவருக்கும் பசியை பகையாக்கி உணவு சமைத்தார்கள்.

கேழ்வரகு கஞ்சியும் வெள்ளாடு சுட்ட கறியும் தேனாய் சுவைத்தது இப்ராஹிம்  குடும்பத்தாருக்கு. அவரோடு மனைவியும் இரண்டு மகனும் ஒரு மகளும் வந்தார்கள். ராக்கப்பன், இப்ராஹிம் உணவு உண்டபின் இதுதான் அவரது பிள்ளைகளா என்றார். இப்ராஹிம் தன் இறைவனை துதித்தபடி இரண்டு சிறுபிள்ளைகள் பயணத்தில் இறந்து போனார்கள் என்றார். இடியாய் விழுந்த செய்தியை நம்பாமல் நம்பினார் ராக்கப்பன். இப்ராஹிம் தங்கள் குடும்பம் குதிரை வணிகம் செய்ததாகவும் மதுரையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தால் தங்கள் வாய்ப்புகள் அனைத்தையும் தொலைத்து வாழ்வு தேடி  வந்ததாக சொன்னார்.

ராக்கப்பனுக்கு எப்படியாவது இப்ராஹிம் ராவுத்தருக்கு உதவவேண்டும் என்பதே எண்ணமாக இருந்தது. குதிரை வியாபாரம் இல்லை என்றால் என்ன, தம்மிடம் இருக்கும் ஆடுகளை விற்று வாழ்வாதாரம் தேட முடியுமா என்று ஆலோசனை வழங்கினார். ராக்கப்பனுக்கும், தன்னிடம் பெருகும் ஆடுகளை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்ததுக்கு ஒரு அருமையான விடை கிடைத்தாக எண்ணினார். வாழ்வில், அனைத்து கதுவுகளும் அடைபட்டாலும் புதிதாக ஒரு வழி திறக்கும் என்பதை அல்லஹா கூறியதை நினைவுகூர்ந்தார். ஆனால், உணவுக்கே வழியற்ற இப்ராஹிம் ராவுத்தருக்கு ஆடு வணிகத்திற்கு ஏது பொருள் முதலீடு. ராக்கப்பனோ உன்னிடம் யார் பொருள் கேட்டது. முடிந்தால் வியாபாரம் முடித்து திரும்பும் போது தமது காளைகளுக்கு பட்டு துண்டு வாங்கி வர சொன்னார். ராக்கப்பனின் தேவையெல்லாம் காளைகளுக்கான பட்டு துண்டுதான். வளமையின் வசந்தம் ராக்கப்பனிடம் தஞ்சம் அடைந்திருந்தது. தேவைகளோ மிக சொற்பம்.

ராவுத்தருக்கும் ஆடுகளை மரைக்காயர்களிடம் கொண்டு சேர்த்தால் போதுமான பொருள் கிடைக்கும் என்பதை உணர்ந்து, வாழ்வுக்கான வழி கிடைத்ததாக எண்ணி அகம் மகிழ்ந்தார். வியாபார பயணத்துக்கு ஒரு குதிரை தேவையாயிற்றே!

ஈகை, இடையர்குல குணமாயிற்றே! அழகி என்ன சளைத்தவளா. பானையோடு வந்தால் அழகி.அது முழுக்க பட்டு துண்டுகள். அதை கொண்டு ஒரு குதிரை வாங்கி ராவுத்தர் தன் வாழ்கை பயணத்தை தொடங்கலாம் என்றார். ராவுத்தர், ராக்கப்பனை மாப்பிள்ளை என்று அழைத்தார். மாமன் சங்கிலி கருப்பரை நினைவு கூர்ந்து இப்ராஹீமை மாமா என்று அழைத்தார் ராக்கப்பன். மதங்கள் கடந்த மனித நேயம்.

இப்ராஹிம் குடும்பத்தார் தற்காலிகமாக  தங்குவதற்கு ஒரு குச்சை கட்டி கொடுத்தார் ராக்கப்பன். பட்டு துண்டுகளோடு சென்ற ராவுத்தர் அழகிய வெள்ளை குதிரையோடு திரும்பினார். ராக்கப்பன் தன் குல தெய்வமான கோட்டை கருப்பர், சங்கிலி கருப்பருக்கு கிடாய் வெட்டி படையலிட்டு தெய்வ உத்தரவு கேட்டு பெற்று, ஆடுகளை வணிகத்திற்கு தன் மாமன் இப்ராஹிம் ராவுத்தருக்கு கொடுத்தார்.

ஆட்டு மந்தையோடு, தன் மூத்த மகனோடு பயணத்தை தொடங்கினர் இப்ராஹிம். துணைக்கு தன் சமூகத்து பணியாளர்களையும் அழைத்துக்கொண்டார். தாம் இதுவரை குதிரை வணிகம் செய்த மரைக்காயர்களுடன் ஆடுகளை வணிகம் செய்யலாமா என்ற சிந்தனையோடு பயணப்பட்டார். காடுகள் ஊடான பயணம், அதிபயங்கரமானதாக இருந்தது. வழித்தடம் புதிதுதான் ஆனால், ராவுத்தர் பயணங்களில் புது அனுபவங்களையும் புது நட்புகளையும் பெற தவறவில்லை.

ஆடுகளோடு பாளையம்கோட்டை சென்றடைந்த ராவுத்தருக்கு மரைக்காயர்கள் அருமையான வரவேற்பு கொடுத்தார்கள். அவர் கொண்டுவந்த புதுவகை காட்டு ஆடுகளுக்கு மிக அதிக தேவை இருந்தது. அவர் எதிர்பார்த்ததை விட அதிக வணிகம் செய்தார். பொருள் கையில் வந்தவுடன் ராக்கப்பன் தான் நினைவில் வந்தார். அவர் கேட்டபடி காளைகளுக்கு பட்டு துண்டுகளை வாங்கினார். அழகியின் பிள்ளைகள் அனைவருக்கும் ஆடைகள் வாங்கினார், அதன் பிறகே தன் பிள்ளைகள் பற்றி எண்ணினார்.

ராவுத்தர், திரும்பும் வழி தடத்தில் இருந்த ஏழை குடிகளுக்கு பொருள் கொடுத்து வந்தார். அதனால், ராவுத்தரின் வருகையை அவர் வழித்தட மக்கள் எப்போதும் எதிர்பார்த்து இருந்தனர். வீடு திரும்பிய ராவுத்தருக்கு, மனம் எல்லாம் மகிழ்ச்சி. ராக்கப்பனின் காளைகளுக்கு பட்டு துண்டுகளை கொடுத்தார். மேலும் குதிரை வாங்கியதற்கான பட்டு துண்டுகளை திரும்ப அளிக்கையில் அது தனது சீதனம் என்றார். ராவுத்தரின் மனைவியான தனது சகோதரியின் வாழ்வுக்கு ராக்கப்பன் கொடுத்த சீதனமாக இருக்கட்டும் என்றார். தனது சகோதரியான வீரத்தாளை நினைத்து சீதனம் கொடுத்ததாக கூறினார்.

ராவுத்தரின் பயணங்கள் தொடர்ந்தது. தனது வணிகத்தின் தேவைக்காக புதூர் அருகாமையில் தன் சமூகத்திற்காக ஒரு சிறு குடி உருவாக்கினார். அதனோடு ஒரு சந்தையையும் உருவாக்கினார். ராவுத்தரும் அந்த புது குடியிருப்புக்கு வீடு கட்டி குடிபெயர்ந்தார். ஆனால், ராக்கப்பன் ராவுத்தர் நட்பு தொடர்ந்தது.

ராவுத்தர் குதிரை மீதாக வரும் அவரது பயணங்களை அவரது வழித்தடத்தில் உள்ள ஏழை எளியோர் வியந்து பார்த்தனர். ராவுத்தரும், ஆடுகளின் தேவைகள் அதிகமாக ராக்கப்பன் போன்று பலரிடமும் ஆடுகளை வாங்கினார், வழக்கம் போல் மரக்காயர்களிடம் விற்று வந்தார்.

வழக்கம் போல, தனது பயணத்தை தொடங்கிய ராவுத்தர், ஆட்டு மந்தைகளோடு பட்டமங்கள நாட்டை அடைந்தார். பட்டமங்கள கண்மாயை கடக்கும் போது தன்னோடு வந்தவர்களை முன்போக சொல்லி தங்குவதற்கும் உணவிற்கும் ஏற்பாடு செய்ய சொன்னார். அவர்களும் முன் சென்றுவிட்டார்கள். ராவுத்தரோடு அவரது மகன் மட்டுமே இருந்தார்.கண்மாயின் நடுவே வரும்போது ஒரு சிறு பெண்பிள்ளையின் அழுகுரல் கேட்டது. அந்த கண்மாய்க்காடுகளில் சுள்ளி பொறுக்கும் பெண்டுகள் வருவார்கள் என்பதை ராவுத்தர் அறிந்திருந்தார். ஏதோ ஆபத்தின் விளைவாக பெண் அழுகிறாள் என்பதை உணர்ந்து, அழுகுரல் திசை நோக்கி ராவுத்தர் சென்றார்.

அவர் கண்முன்னால் கண்ட காட்சியை அவரால் நம்ப முடியவில்லை. பத்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்பிள்ளையை சுற்றி ஒரு பெரும் ஓநாய் கூட்டம் நின்றிருந்தது. அந்த பெண்பிள்ளை தனது மகளாக அவர் கண்களுக்கு தெரிந்தது. சிந்தனை செய்யும் முன்னாள், செயல் படத்தொடங்கினார். அந்த பெண்ணிடம் வேகமாக சென்ற ராவுத்தர் அந்த பெண்ணை அருகிலிருந்த மரத்தின் மேல் ஏற்றினர். தாமும் மரம் ஏறினால் தன் குதிரை பலியாகும் என்று எண்ணிய ராவுத்தர், குதிரையோடு ஓநாய்களுடன் சண்டையிட்டார். தன்னோடு இருந்த வெட்டறுவாள் எத்தனை ஓநாய் தலைகளை வெட்டியது என்பதை அவர் அறியவில்லை.

அவர் எண்ணமெல்லாம், பெண்பிள்ளையை காக்க வேண்டும் என்பதாக இருந்தது. அவருடைய போராட்டம் தொடரும் போதே, தம்முடைய ஆட்கள் வரும் குதிரை குளம்புகள் சத்தம் அருகாமையில் கேட்க தொடங்கியது. அதே வேளையில், ஒரு பெரும் கூட்டம் ஒன்று பெரும் ஆர்பரிப்புடன் அவர் திசையை நோக்கி வருவதை உணர்ந்தார்.அனேகமாக, அது அந்த பெண்ணோடு வந்தவர்கள் அழைத்து வரும் ஊர் கூட்டமாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்தார்.

பெண்பிள்ளையை காக்க வேண்டும் என்றிருந்த ராவுத்தர் தன்னை காக்க வேண்டும் என்று துளியும் எண்ணவில்லை. ஊர் கூட்டம் எழுப்பிய ஒலியில் ஓநாய் கூட்டம் ஓடி மறைந்தது. அதேவேளையில், ராவுத்தரும் சரிந்தார். அதுவரையிலும், அவ்வழி தடத்தில் பயணிக்கும் ஒரு செல்வம் மிகுந்த ஈகை குணம் கொண்ட ராவுத்தர் என்று அறிந்த அம்மக்கள், தம் கண் எதிரே ஒரு சிறுமியை காப்பதற்காக உயிர் தியாகம் அளித்து உடல் சரிந்ததை கண்டு மனமுடைந்தனர். ஆனால், ராவுத்தர் அய்யாவாக அனைவர் மனங்களிலும் காக்கும் கடவுளாக எழுந்தார்.

பட்டமங்கள நாட்டார் கூடி குதிரையோடு ராவுத்தருக்கு சிலையெடுத்து பட்டமங்கள கண்மாய் கரையில் கோவில் கண்டார்கள்.