சென்னை:
கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய ‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரனுக்கு 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 தமிழ்க்கடவுள் முருகனின் கவசமான கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தும் நோக்கில்  வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் மீது ஏராளமான புகார்கள் பதிவி செய்யப்பட்டது. மத நல்லிணக்கத்தை குலைப்பதாக அவரது வீடியோ உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இதில், வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன், என்பவரை மத்தியகுற்றப்பிரிவு போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் மாறுவேடத்தில் புதுச்சேரி  அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண்டைந்தார். அவரை தமிழ்நாடு போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
ராயபுரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இல்லத்தில் சுரேந்தர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 30ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.