கரூர்:

ரூர் மாவட்டத்தில் சின்னம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்ததோடு மட்டுமில்லாமல் அவருக்கு தனது வீட்டில் இருந்தே உணவு எடுத்துச்சென்று ஆட்சியரே நேரில் பரிமாறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் சின்னம்மநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வயதான பெண்மணி  ராக்கம்மாள். இவருக்கு தற்போது 80 வயதா கிறது. ஏற்ககனவே கணவர் ராமர் இறந்துவிட்ட நிலையில், ஆதரவின்றி சிறிய குடிசையில் வாழ்ந்து வந்த அவரை சந்தித்த கரூர் கலெக்டர், அவருக்கு தனது வீட்டில் இருந்த உணவு வரச்செய்து, அவருடன் அமர்ந்து வாழை இலையில் உணவருந்தினார்.

மேலும், அவருக்கு முதியோர் உதவி தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். கலெக்டரின் கருணை குணம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முதியோர்களுக்கு அரசின் உதவித்தொகை சரிவர கிடைப்பதில்லை என்று அந்த பகுதி இளைஞர்கள், குறைதீர்ப்பு நாள் கூட்டத்தின்போது, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அதை படித்து பார்த்த அவர், அந்த மனுவின் மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, நேற்று ராக்கம்மாளை சந்திக்க  சின்னம்மநாயக்கன்பட்டிக்குச் சென்றார்.

அவரது அந்த முதிய பெண்மணியின் ஏழ்மையை அறிந்து வருந்திய கலெக்டர் அன்பழகன், அவருக்காகத் தனது வீட்டில் இருந்து செய்து கொண்டுவந்திருந்த உணவை பரிமாறி அவருடன் அமர்ந்து சாப்பிட்டார். பின்னர், ராக்காம்மாளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான ஆணையை அவரிடம்  கொடுத்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த ராக்கம்மாள,  ஆட்சியர் அன்பழகனை மனதார வாழ்த்தினார். இந்த சம்பவம் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கூறிய கருர் கலெக்டர் அன்பழகன் முதுமை நிலையில் உடலுழைப்பு செய்து பிழைப்பு நடத்த இயலாத ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கி வருகிறது. இதைப்பெற தகுதி வாய்ந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும்,  தகுதி வாய்ந்த நபர்களுக்கு உடனே உதவி தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும் என்றும் கூறினார்.