சென்னை: திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் வெண்டிலேட்டர் வாங்க மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்காக கரூர் மாவட்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் உபகரணங்கள் வாங்க தமது தொகுதி நிதியிலிருந்து ரூ.1 கோடியே 3 லட்சத்தை ஒதுக்க மாவட்ட ஆட்சியருக்கு, திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி பரிந்துரை செய்தார். அவரது நிதி பரிந்துரையை ரத்து செய்து கரூர் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதை எதிர்த்து செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதனால் நிதி பயன்படுத்தப்பட வில்லையா என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

கொரோனா சூழலில், செந்தில்பாலாஜியின் சட்டமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும், பயன்படுத்தாமல் அதை நிராகரித்து  ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டனர்.