சென்னை:

ஜெ.மறைவுக்கு பிறகு எடப்பாடி தலைமையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பதவி ஏற்று ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில், ஓராண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

தமிழக முதல்வராக கே.பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி பதவியேற்றார். அவரது தலைமையிலான அதிமுக அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கில் ஓராண்டு நிறைவு விழா நேற்று நடந்தது.

விழாவில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், நடிகர்கள் கமல், ரஜினியின் அரசியல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

அரசியல் பற்றி தெரியாதவர்களுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும். முதல்வர் பழனிசாமிக்கு உறுதுணையாக இருப்போம். அரசு குறித்து சிலர் கருத்து தெரிவித்து  கருத்து கந்தசாமியாக உள்ளனர் என்று கூறினார்.

மேலும், இந்த ஓராண்டு ஆட்சியில் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக பேசிய ஓபிஎஸ், இது  நம்மை எதிர்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டார். 3 அதிர்ச்சிகள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று பேசிய அவர்,

ஜெயலலிதாவின் நல்லாட்சியைக் கட்டிக் காத்து ஓராண்டை கடந்தது முதல் அதிர்ச்சி.

அவரது திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்தது 2-வது அதிர்ச்சி.

எதிர்ப்புகளை முறியடித்து 5 ஆண்டுகளை நிச்சயம் நிறைவு செய்யப்போவது 3-வது அதிர்ச்சி என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

திமுகவை கபளீகரம் செய்ய சில கழுகுகள் பறக்கின்றன. அதை வேட்டையாட, விசுவாச தொண்டர்கள் வேடர்களாக நிற்கிறோம் என்றவர்,   மக்களின் கஷ்டத்தை பற்றி கவலைப்படாதவர்கள் சிஸ்டத்தை பற்றி பேசுகின்றனர். சிலர் கருத்து கந்தசாமியாகவே மாறிவிட்டனர்.

அரசியல் பற்றியே தெரியாமல், அரசியல் பேசுபவர்களுக்கு மக்கள் பூஜ்யம் போடப்போவது உறுதி. நாங்கள் என்றும் முதல்வர் பழனிசாமிக்கு உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.

முன்னதாக  விழாவுக்கு தலைமையேற்று பேசிய  பேரவைத் தலைவர் பி.தனபால் , ‘‘தமிழகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணையோடு முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. அனைத்து துறைகளிலும் தமிழக அரசு வெற்றிநடை போடுகிறது. இந்த அரசின் சாதனைகள் தொடர வாழ்த்துகள்’’ என்று கூறினார்.