அமெரிக்க நீதிமன்றத்தில் மோடி மீது வழக்கு தொடர்ந்த காஷ்மீர் ஆர்வலர்கள்

ஹூஸ்டன்

தெற்கு டெக்ஸாஸ் நீதிமன்றத்தில் காஷ்மீரைச் சேர்ந்த ஆர்வலர்கள் பிரதமர் மோடி மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் இந்திய  வம்சாவழியினர் ந்டத்தும் ஹவ்டி மோடி நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துக் கொள்ள உள்ளார்.  இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.  தற்போது டெக்ஸாஸ் மாகாணத்தில் கடும் மழை பெய்து வருவதால் இந்த நிகழ்வு தடைப்படலாம் எனச் செய்திகள் வெளியாகின.   ஆயினும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இந்த நிகழ்வு அவசியம் நடைபெறும் என உறுதி அளித்துள்ளனர்.   இந்நிகழ்வில் சுமார் 50000 முதல் 1 லட்சம்  பேர் வரை பங்கு பெற உள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க செய்தி ஊடகமான ஹூஸ்டன் கிரானிக்கிள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.   அந்த செய்தியில் காணப்படுவதாவது

”தெற்கு டெக்ஸாஸ் அமெரிக்க  நீதிமன்றத்தில் பிரதமர் மோடி மீது வழக்கு  ஒன்று  தொடரப்பட்டுள்ளது,   இதற்கான நீதிமன்ற ரசீது சமூகத்தளத்தில் பரவி வருகிறது. வழக்கு எண் 19 CV  3532 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  வழக்கை அளித்த மனுதாரர் பெயராக  காஷ்மீர் காலிஸ்தான் ரெஃபெரண்டம் ஃப்ரண்ட் (KKRF)  தன்னார்வ அமைப்பு சார்பில் Ms.TFK  மற்றும் Mr.SMS என்று இரண்டு தனி நபர்கள் பெயர்ச் சுருக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கின் எதிர்த் தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியப் படைகளின் தளபதி கன்வல் ஜீத் சிங் தில்லான் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.  அத்துடன் பிரதமர் மோடியின் முகவரியாக ஹூஸ்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தைக் குறிப்பிட்டுள்ளது

இந்த வழக்கு மனுவை அளித்தவர்கள்  இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு ஆபத்து நேரிடும் என்பதால், முழுப்பெயரையும் தற்போது தெரிவிக்காமல் இனிஷியலை மட்டுமே மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் நேரிலேயோ அல்லது காமிரா மூலமாகவோ உறுதியாகச் சாட்சியம் அளிப்போம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 19ம் தேதி நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் வழக்குக்கான மனு பெற்றுக்கொள்ளப்பட்டது என்று முத்திரையும் உள்ளது.   இது தொடர்பாக 15 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு பிரதமர் மோடிக்குச் சம்மன் அனுப்ப உள்ளனர்” என அந்த செய்திக் குறிப்பில் காணப்படுகிறது.