வாஷிங்டன்

காஷ்மீர் மற்றும் அசாம் இஸ்லாமியர்களை அடியோடு அழிக்க நடைபெறும் தாக்குதல்கள் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது என இனப்படுகொலை ஆர்வலர் கிரிகரி ஸ்டாண்டன் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை குறித்து ஆய்வு செய்யும் குழு ஒன்று அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ளது.  அந்தக் குழு இனப்படுகொலை 10 கட்டமாக நடைபெறுவதாக கூறி இருந்தது.  ஒரு சில ஆர்வலர்கள் இனப்படுகொலை எட்டு கட்டமாக நடைபெறுவதாகவும் கூறுவார்கள்.   இரண்டிலும் இறுதிக் கட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தை அடியோடு அழிப்பது ஆகும்.

சமீபத்தில் காஷ்மீரில் விதி எண் 370 விலக்கப்பட்டதை அடுத்து மாநிலத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதற்கும் அசாம் குடியுரிமை பதிவேடு வெளியீட்டுக்குப் பிறகு அங்கு நடைபெறும் கலவரம் குறித்தும்,  குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்த போராட்டம் குறித்தும் இந்த குழு சிறப்புக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது.   இந்தக் குழுவின் தலைவரும் ஆர்வலருமான கிரிகரி ஸ்டாண்டன் இந்த கூட்டத்தில் உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “இனப்படுகொலை என்பது ஒரு இனத்தை அடியோடு அழிக்க நடைபெறுவதாகும்.   இது எட்டுக் கட்டங்களாக நடைபெறுகிறது.  இதில் முதல் கட்டம் அவர்களை நம்மிடம் இருந்து பிரிப்பது ஆகும்.  இரண்டாவது அவர்களை வெளிநாட்டினர் என கூறுவது.  மூன்றாம் கட்டமானது அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டு அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லாதபடி செய்தல் ஆகும்.

நான்காம் கட்டமானது அவர்களை மனிதத்தன்மை அற்றவர் என அறிவிப்பதாகும்.    அதாவது அவர்களை நம்மை விடத் தாழ்ந்தவர்களாகத் தீவிரவாதிகளாக,  விலங்கைப் போன்றவர்களாகக் காட்டுவதாகும்.   ஐந்தாம் கட்டம் இனப்படுகொலைக்காக ஒரு குழுவை நியமிப்பது.  ஆறாம் கட்டமானது பிரசாரம் மூலம் தனிமைப்படுத்துதல் ஆகும் ஏழாம் கட்டமானது அழிக்கத் தயார்நிலை ஏற்படுத்துவதும் எட்டாம் கட்டம் முழுமையாக அழிப்பதும் ஆகும்.

அமெரிக்கா வாழ் இந்திய இஸ்லாமியர் அளித்துள்ள ஆய்வறிக்கையின் படி தற்போது காஷ்மீர் மற்றும் அசாம் மாநில இஸ்லாமியர்கள் நிலை இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.   இந்திய அரசின் நடவடிக்கைகள் இஸ்லாமியரை முழுவதுமாக அழித்து இனப்படுகொலை செய்ய எடுக்கும் நடவடிக்கைகளாகவே இந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.