காஷ்மீர் சட்டசபை தொகுதிகள் மறுவரையறை – பணிகளைத் துவக்கிய மத்திய அரசு!

புதுடெல்லி: யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் சட்டசபை தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணியைத் துவக்கியுள்ளது மத்திய அரசு.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தப் பணிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து அதிரடியாக நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டசபை தொகுதிகளை மறுவரையறை செய்வது தொடர்பாக, மத்திய சட்டத்துறை செயலாளர், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எழுதிய கடிதத்தில், “ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ன் படி, தொகுதி மறுவரையறை செய்யும் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமையும்.

இதில், தலைமை தேர்தல் ஆணையர் அல்லது அவர் நியமிக்கும் உறுப்பினர், மாநில தேர்தல் கமிஷனர் ஆகியோர் இடம்பெறுவார்கள். இந்தக் குழுவில் தலைமை தேர்தல் ஆணையர் இடம்பெற வேண்டும் அல்லது மற்ற தேர்தல் ஆணையர்களில் ஒருவரை நியமிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இக்குழுவில், தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவை நியமிக்க, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.