முன்னாள் ராணுவ வீரர் மகளை பாஜக எம் எல் ஏ கடத்தினாரா? : பெண் மறுப்பு

ம்மு

முன்னாள் ராணுவ வீரர் மகளை பாஜக சட்டமன்ற உறுப்பினர் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் சம்மந்தப்பட்ட பெண் அதை மறுத்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஆர் எஸ் புரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாஜக வை சேர்ந்த ககன் பகத்.   இவர் மீது ராஜிந்தர் சிங் என்னும் முன்னாள் ராணுவ வீரர் தனது மகளை கடத்தியதாக குற்றம் சாட்டி உள்ளார்.    இது குறித்து ஜம்மு நகர காவல்துறை சூப்பிரண்ட் விவேக் குப்தாவிடம் அளிக்கப்பட்ட புகாரில் இதை சிங் தெரிவித்துள்ளார்.

அந்த புகாருக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சிங் தனது தந்தை, மற்றும் அவருடைய கிராம மக்களுடன் ஜம்மு பிரஸ் கிளப் எதிரே தர்ணா போராட்டம் நடத்தினார்.  அப்போது அவர், “எனது மகள் பஞ்சாபில் படித்து வருகிறார்.  அவரை நான் கடந்த ஜூன் 21 ஆம் தேதி எங்கள் வீட்டுக்கு அழைத்து வருவதற்காக பஞ்சாப் சென்றேன்.  ஆனால் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி அவரை ககன் பகத் கடத்தியதாக அறிந்தேன்.” என தெரிவித்தார்.

இதற்கு ககன் பகத், “இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்.   என்னை அவமானப்படுத்தவே அவர் இவ்வாறு கூறுகிறார்.  இது  எனது அரசியல் எதிரிகளின் சதி  ” என பதில் அளித்தார்.   அத்துடன் ராஜேந்தர் சிங் மீது மானநஷ்ட வழக்கு ஒன்றை ககன் பகத் தொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளர்.  அந்த சந்திப்பில் அவர், “என்னை சட்டமன்ற உறுப்பினர் ககன் பகத் கடத்தவில்லை.  அவர் ஒரு நல்ல மனிதர்.   நான் எனது நண்பர் வீட்டில் இருக்கிறேன்.  என் விருப்பத்துக்கு மாறாக என்னை ஒரு படிக்காத வாலிபருக்கு திருமணம் செய்ய என் தந்தை விரும்பினார்.

அதனால் நான் எனது ஹாஸ்டலில் இருந்து வெளியேறினேன்.   நான் திருமணம் செய்துக் கொள்ளாவிடில் என்னை கொலை செய்வதாக என் குடும்பத்தினர் மிரட்டினார்கள்.

என் குடும்பத்தினர் அனைவரும் பிடிபி கட்சியை சேர்ந்தவர்கள்.   அதனால் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது பழி சுமத்துகின்றனர்   மேலும் நான் என் தந்தை போராட்டம் நடத்திய தினத்தன்று காலையில் என் தந்தையுடன் தொலைபேசியில் பேசி உள்ளேன்.   அப்போது அவர் இந்த போராட்டம் பற்றி தெரிவிக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.