ஸ்ரீநகர்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்படாது என்றும், அதுகுறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் பெரியளவில் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறைக்கு தகவல்கள் வந்ததாக கூறப்பட்ட நிலையில், அமர்நாத் யாத்ரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அங்கு பல்லாயிரக்கணக்கான துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு எப்போது என்ன நடக்குமோ? என்ற பதற்றம் நிலவி வருகிறது. மேலும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்ற வதந்திகளும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்நிலையில், காஷ்மீர் ஆளுநரை முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அவர் இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு, “சிறப்பு அதிகாரம் ரத்துசெய்யப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தீவிரவாத தாக்குதல்களை தடுக்கவே கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 35ஏ சட்டப்பிரிவை ரத்துசெய்யும் திட்டமெல்லாம் இல்லை” என்று பதிலளித்தார் ஆளுநர் மாலிக்.

இந்த வதந்திகளை உள்துறை அமைச்சகமும் திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.