எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காஷ்மீர் அரசு 

ஸ்ரீநகர்

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தியுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது.

கடந்த 5 ஆம் தேதியன்று காஷ்மீர் மாநிலத்தில் விதி எண் 370  விலக்கிக் கொள்ளப்பட்டுச் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் முதல் முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி ஆகியோரும் அடங்குவார்கள். உமர் அப்துல்லா தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஆவார். மெகபூபா முஃப்தி மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவி ஆவார்.

தற்போது காஷ்மீரில் அமைதி நிலை திரும்பி வருவதாக அரசு தரப்பில்  சொல்லப்படுகிறது. ஆயினும் காஷ்மீர் ஆளுநரின் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். ராகுல் காந்தி இதையொட்டி காஷ்மிரில் இன்னும் அமைதி நிலை உருவாகவில்லை எனத் தோன்றுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காஷ்மீர் அரசின் புலனாய்வு நிறுவனங்கள் முக்கிய அரசியல்  தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி உள்ளிட்டோருடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியை பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தற்போதைய நிலையில் உள்ள அரசியல் நிலை மேலும் தொடராமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்த பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் ”கடந்த வருடம் நடந்த பஞ்சாயத்துத் தேர்தல் மிகவும் வெற்றி பெற்றுள்ளது. உள்ளூர் அமைப்புக்களின் தலைவர்கள் மூலம் அரசியல்  ஸ்திரத்தன்மையை அடிப்படையில் இருந்து உருவாக்க அரசு விரும்புகிறது. இது சற்று காலம் ஆகலாம், ஆனால் இதற்கு அரசியல் தலைவர்கள் உதவி தேவை என்பதால் இந்த பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன” என அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.