காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கருத்து தெரிவித்துள்ள தலிபான் அமைப்பு,  இந்தியாவிற்கு எதிராக ஜிகாத்  குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என்று விளக்கம் அளித்து உள்ளது.
சமீப நாட்களாக சமூக வலைதளங்களில், காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி களுடன் இணைந்து தாலிபன்களும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் பரவின.

அத்துடன் காஷ்மீர் பிரச்சனை முடியாத வரை இந்தியாவுடன் நட்பாக இருக்க முடியாது என தாலிபன் செய்தி தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித்  பேசியதாகவும், தலிபன்கள் ஆப்கனை கைப்பற்றிய பிறகு காஷ்மீரை கைப்பற்றுவோம் என பேசியதாகவும், டெல்லியை கைப்பற்றுவோம் என்று கூறியதாகவும்  தகவல்கள் பரவியது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தலிபான் இயக்கம், அப்படியொரு திட்டம் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. தலிபான்களின் அரசியல் பிரிவான இஸ்லாமிக் எமிரேட்சின் செய்திதொடர்பாளர் சுஹைல் ஷகீன் டிவிட் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “காஷ்மீரில் ஜிஹாத்தில் தலிபான் சேருவது குறித்து ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை தவறானது…. இஸ்லாமிய அமீரகத்தின் கொள்கை மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாது என்பதை தெளிவுப்படுத்துகிறோம். ” என தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக பாகிஸ்தான் செய்யும் மறைமுக அரசியலுக்கு தலிபான் அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது. ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் இணைக்க வேண்டாம் என பாகிஸ்தானுக்கு  தலிபான்கள் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

லகையே உலுக்கியெடுத்த 2001 செப்டம்பர் நியூயார்க் தாக்குதல்களை நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அப்போது ஆட்சியில் இருந்த தலீபான்கள் புகலிடம் அளித்தனர்.
இதனையடுத்து 2001-ம் ஆண்டு, அக்டோபர் 7-ந் தேதி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த தலீபான்களை தூக்கி எறிந்து, மக்களாட்சியை மலர வைத்தது. இதனை தொடர்ந்து அங்கு 19 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் நிலை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வந்தது.
இந்தநிலையில் தான், ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா விரும்பியது. இதையொட்டி தலீபான்களுடன், அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்தியது. பல முறை அந்த பேச்சுவார்த்தை முறிந்து போனது. நீண்ட இழுபறிக்கு பின்னர், கடைசியில் ஒரு வழியாக அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் பிப்ரவரி 29-ம் தேதி  அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.