புதுடெல்லி, 
காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே உகந்தது என்று சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு கருத்து தெரிவித்து உள்ளது.
கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஜூலை மாதம் 9–ந் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத் தளபதியும், தீவிரவாதியுமான புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து காஷ்மீரில் வன்முறை வெளியாட்டம் தொடந்து வருகிறது.
இதுபற்றி ஜம்மு காஷ்மீரை சேர்ந்த தேசிய கருஞ்சிறுத்தை கட்சி தலைவர் பீம்சிங்  சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், தற்போது நடைபெற்று வரும் பிரச்சினையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், காஷ்மீரில் உடனே கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டி மத்திய அரசு உத்தரவிட கோரியும்,  காஷ்மீர் பிரச்சினையாள் ஏற்பட்ட இழப்புகளுக்கு பல்வேறு  நிவாரணங்களைக் கோரியும் பீம்சிங் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று காலை  தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமை யிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி, மற்றும் நீதிபதி ஏஎம் கான்வில்கர், டிஒய் சந்திரசூட் ஆகியோர் மனுமீது விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, காஷ்மீர் குறித்து பேசிய நீதிபதிகள், இப்பிரச்சினை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. எல்லாவற்றையும் நீதித்துறை அளவுகோள்களின் அடிப்படையிலேயே கையாள முடியாது, அரசியல் மட்டத்திலேயே இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்  என்று சுப்ரீம் கோர்ட்டு நம்புவதாக கூறியது.
காஷ்மீரில் தொடரும்  வன்முறைக்கு இதுவரை 67 பேர் பலியாகி உள்ளனர்.  மேலும் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் நூற்றுக்கணக்கான பேர் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.