டில்லி

வரும் அக்டோபர் மாதம் 31 முதல் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் ஆகின்றன.


காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றைச் சென்ற திங்கள்கிழமை அன்று மத்திய அரசு நீக்கம் செய்தது.  அத்துடன் காஷ்மீர் மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்கள் ஆகி உள்ளன.  லடாக் சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நாடெங்கும் எதிர்க்கட்சியினர்  தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம்  வரும் அக்டோபர் 31 முதல் ஜம்மு,காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்கள் ஆகின்றன என அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது நாடு பல சமஸ்தானங்களாகப் பிரிந்து இருந்தது.   அதை இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லப்பாய் படேல் ஒருங்கிணைத்தார்.    காஷ்மீர் பிரதேசம் இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இணைய உள்ள அக்டோபர் 31 ஆம் தேதி படேலின் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.