டில்லி

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து காஷ்மீர் மன்னர் வாரிசும் காங்கிரஸ் தலைவருமான கரண்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள் அன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 மற்றும் 35 ஏ ஆகியவை நீக்கம் செய்யப்பட்டன.  காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.   லடாக் பகுதி சட்டப்பேரவை அற்ற யூனியன் பிரதேசம் ஆகி உள்ளது.  இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காஷ்மீரின் கடைசி மன்னர் மகாராஜா ஹரி சிங் ஆவார்.  அவர் காஷ்மீரை 1947ஆம் வருடம் இந்தியாவுடன் இணைக்கும் போது மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் எனவும் தனிக்கொடி மற்றும் தனி அரசியலமைப்பு சட்டங்கள் உள்ளிட பல கோரிக்கைகளை வைத்தார்.  அந்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தம் இடப்பட்டு அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் விதி எண் 370 மற்றும் 35 ஏ உருவாக்கப்பட்டது.

தற்போது இந்த விதிகள் நீக்கப்பட்டது குறித்து மகாராஜா ஹரி சிங் மகனும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கரண் சிங், “அரசின் இந்த அறிவிப்பை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது,  இதில் உள்ள ஒரே நல்ல நடவடிக்கை லடாக் பகுதி குறித்ததாகும்.  அதே நேரத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகள் விரைவில் மாநிலமாக்கப்பட வேண்டும்.   அப்போது தான் இந்த மாநில மக்களுக்கு தங்கள் உரிமையை முழுவதும் அனுபவிக்க முடியும்.

முக்கியமான மாநிலக் கட்சிகளை தேச நலனுக்கு எதிரானவை எனக் கூறுவது மிகவும் தவறாகும்.  இதை ஆளும் கட்சியினர் உணர வேண்டும்.  தற்போது வீட்டுச் சிறையில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.  இந்த மாநிலம் எங்கள் மூதாதையரால் உருவாக்கப்பட்டது.  எனவே இங்குள்ள மக்களின் நன்மைக்கு எதிரான எவ்வித நடவடிக்கையையும் என்னால் ஒப்புக் கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.