காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்….பிரிவினைவாதிகள் அழைப்பு

ஸ்ரீநகர்:

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

-காஷ்மீர் மாநிலத்தில் 2011-ம் ஆண்டில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 2016-ம் ஆண்டில் ஏற்பட்ட கலவரம், வன்முறை, அமைதியின்மையால் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் 5ம் தேதி வரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பிரிவினைவாதிகள் உள்ளாட்சி தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். பிரிவினைவாதிகள் சையத் அலி கிலானி, மிர்வாயிஸ் உமர் பாரூக் மற்றும் யாசின் மாலிக் ஆகியோர் ஹைதர்போரா பகுதியில் உள்ள சையத் அலி கிலானியின் இல்லத்தில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் கூட்டு எதிர்ப்பு தலைமை என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில்,‘‘ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வாழும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், இங்குள்ள நிறுவனங்களை பலப்படுத்துவதிலும் அக்கறை காட்டாத மத்திய அரசு பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களை திணிக்க நினைக்கின்றது.

மக்கள்மீது முன்னரும் திணிக்கப்பட்ட இதுபோன்ற தேர்தல்கள் ஜம்மு-காஷ்மீர் மீதான டில்லியின் பிடியையும் அதிகாரத்தையும் பலப்படுத்துவதற்குதான் துணை புரிந்துள்ளன. எனவே, இந்த தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் புறக்கணிக்குமாறு பிரிவினைவாதிகள்அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், 25 ஆண்டுகால வரலாறு காணாத வகையில் 65 சதவீத வாக்குகளை பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.