ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் இன்று கவலைப்பட ஏதுமில்லை ஆனால் நாளை பற்றி எனக்குத் தெரியாது என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கூறி உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் திடீர் என ராணுவப்படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டு பயணிகள் அவரவர் இடத்துக்குத் திருப்பி  அனுப்பப்பட்டுள்ளனர். வெளிநாட்டுப் பயணிகளின் காஷ்மீர் சுற்றுலாவை ரத்து செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் ஆளுநர் தலைமையில் ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது.

எதிர்க்கட்சி தலைவர்களான மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் ஆளுநரை சந்தித்துள்ளனர்.காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் செய்தியாளர்களிடம், “தற்போது மத்திய அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசுக்கு இப்போது எவ்வித திட்டமும் மனதில் இல்லை. இப்போது எதுவும் நடக்காது என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

அதே நேரத்தில் நாளை என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது. அது என் கையில் இல்லை. தற்போதுள்ள நிலையின் படி காஷ்மீர் மாநிலத்தில் எல்லாமே கட்டுக்குள் உள்ளது. எனவே காஷ்மீர் நிலை குறித்து பொதுமக்களோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களோ பயம் கொள்ள வேண்டாம்.” எனத் தெரிவித்துள்ளார்.