ஸ்ரீநகர், 
காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 7 வீரர்கள் பலியாகினர்.
அவர்களிடம் இருந்த 16 பணயக் கைதிகள் இந்திய ராணுவத்தினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
நேற்று காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 அதிகாரிகள் உள்பட 7 பேர் வீர மரணம் அடைந்தனர்.
பாகிஸ்தான் ஆதரவோடு, பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லை பகுதிகள் வழியாக இந்தியாவுக்கு ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே உரி எல்லைப்பகுதியில் ஊடுருவி இந்திய ராணுவ வீரர்களை கொன்றனர். இதற்கு அதிரடியாக இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை கொன்று குவித்தது.
இதைத் தொடர்ந்து  காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் விழிப்புடன் ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
kasmi1r
இதற்கிடையில், பாகிஸ்தானை சேர்ந்த  பயங்கரவாதிகள் சிலர் ஜம்மு புறநகர் பகுதியான ‘நக்ரோட்டா’வில் உள்ள ராணுவத்தின் 16–வது படைப்பிரிவு முகாம் மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.
அதிகாலை 5.30 மணி அளவில்,  இந்திய போலீஸ் சீருடையில் அங்கு வந்த பயங்கரவாதிகள், முகாமிற்குள் நுழையும் முயற்சியாக, அங்கு காவலுக்கு நின்ற வீரர்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும், இயந்திர துப்பாக்கியால்  சரமாரியாகவும் சுட்டனர்.
பின்னர் அப்பகுதியில் இருந்த 12 வீரர்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள்  உள்டப  என 16 பேரை அவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.
இதன் காரணமாக ராணுவத்தினர் அவர்கள்மீது தாக்குதல் நடத்த தாமதம் ஏற்பட்டது. பின்னர்  இந்திய  வீரர்கள் அதிரடி தாக்குதலில் இறங்கினர்.  இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
சுமார் 13 மணி நேரம் இந்த துப்பாக்கி சண்டை நீடித்தது. இறுதியில் 3 பயங்கரவாதிகளும் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.   பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் இருவரும், வீரர்கள் 5 பேரும் வீர மரணம் அடைந்தனர்.
பணயக் கைதிகளாக பிடிபட்ட அத்தனை பேரையும் ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர்.
பயங்கரவாதிகள் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உடனடியாக மூடப்பட்டது.
அதேபோல் ஜம்மு மாவட்டத்தின் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன.
இந்த நிலையில், காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையோரம் அமைந்த ராம்கார் செக்டார் பகுதியில் சாம்லியால் என்னும் இடத்தில் உள்ள நீர் நிலை அருகே சில பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். ஆனால் அவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
நக்ரோட்டா ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடியை ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், சந்தித்தார். அப்போது காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து அவர் விரிவாக விளக்கினார்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த ஆண்டு,  இதுவரை 3 முறை இந்திய ராணுவ முகாம்மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ஏற்கனவே ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம், செப்டம்பர் மாதம் காஷ்மீர் உரி ராணுவ முகாம் ஆகியவற்றில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.