ஸ்ரீநகர்:

காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புக்கு நிதியாக வந்த ரூ. 36.34 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் கடந்த 2016ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 90 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி வருவதை தேசிய புலனாய்வு ஏஜென்சி (ஏஎன்ஐ) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் கடந்த 2 ஆண்டுகளில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக ரூ. 36.34 கோடியே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளாகும்.

இந்த நிதி புர்கான்வானி மறைவுக்கு பழிக்கு பழியாக காஷ்மீரில் கலவரத்தை தூண்ட பிரிவினைவாத அமைப்பு தலைவர்களுக்கு வந்ததது என்றும், ஹவாலா மற்றும் சட்டவிரோத நன்கொடை மூலம் வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் இன்று பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.