காஷ்மீர்: ராணுவத்தினர்மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: வீரர்கள் 3 பேர் காயம்!

 

காஷ்மீர்

காஷ்மிரில் ராணுவத்தினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் ராணுவ வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் ஹன்ட்வாரா நகர் அருகே கிர்லாகுன்ட் பகுதி உள்ளது. இங்கு ராணுவ நிலை உள்ளது. ராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.இந்த நிலையில் இன்று காலை ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலை ராணுவ வீரர்கள் எதிர்பார்க்கவில்லை.

இதனால் தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். இதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதை தொடர்ந்து அவர் விமானம் மூலம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்துவதற்குள் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்களை தேடி வேட்டையாடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிறகு ராணுவ நிலைகள் மீது நடத்தப்படும் 2-வது தாக்குதல் சம்பவமாகும்.கடந்த மாதம் பாரமுல்லா அருகே தீவிரவாதிகள் ராணுவ நிலைகள் மீது நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர். 5 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

கார்ட்டூன் கேலரி