காஷ்மீர் பத்திரிகை சுதந்திரம் – உச்சநீதிமன்றம் சென்ற காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர்!

--

ஸ்ரீநகர்: காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் அனுராதா பாஸின், காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது; காஷ்மீரில் இணைய சேவைகள் மற்றும் தகவல்தொடர்பு சேவைகள் ரத்துசெய்யப்பட்டு, பத்திரிகை நிருபர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவர்கள் இடம்பெயர்வதே மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. எனவே, பத்திரிகை சுதந்திரத்தை காக்கும் வகையில், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அரசியல் சாசனப் பிரிவுகள் 14 மற்றும் 19 ஆகியவற்றில் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே, காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் தங்களின் பணியை சுதந்திரமாக மேற்கொள்ளும் வகையிலும், சிறப்பு அதிகாரம் 370 ரத்துசெய்யப்பட்ட பின்னர், அங்கு நிலவும் சூழல்களை உண்மையான முறையில் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கான சுதந்திரம் கிடைக்கும் வகையிலும் உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்ட பின்னர், பள்ளத்தாக்கில் மொபைல் ஃபோன் நெட்வொர்க், இணைய தொடர்புகள், சாதாரண முறையிலான தொலைபேசி வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தடைசெய்யப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து காஷ்மீர் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியரின் ரிட் மனு முக்கியத்துவம் பெறுகிறது.