காஷ்மீர் பதற்றம்: பாராளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்கிறார் அமித்ஷா

--

டில்லி:

காஷ்மீரில் நீடித்து வரும் பதற்றம் குறித்து இன்று காலை பிரதமர் இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த  அவசர ஆலோசனைக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் பிரச்சினை குறித்து, நேற்று அமித்ஷா தலைமையில் உயர்மட்டக்குழு கூட்ட ஆலோ சனையை தொடர்ந்து, இன்று பிரதமர் மோடியின் இல்லத்தில் காலை அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனையின்போது காஷ்மீர் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பதும், இன்றைய பார்லி., கூட்டத்தில் என்ன மாதிரியான அறிவிப்பை வெளியிடலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு துறையினருடன் கருத்து கேட்பு முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு செயலர் அஜீத்தோவல் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் முடிவடைந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற இரு அவைககளிலும் விளக்குவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் பிரச்சினையை இன்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ள நிலையில், அமித்ஷா விளக்கம் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.