பாரமுல்லா

ராணுவத்தில் சேர தற்போது காஷ்மீர் இளைஞர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்

கடந்த 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தற்கொலைப் படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.    இதற்கு ஜெய்ஷ் ஈ முகமது என்னும் பாகிஸ்தான் தீவிர வாத இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டது.    காஷ்மீரில் ராணுவத்துக்கு எதிராக மக்கள் நடந்துக் கொள்வதாக பல ஊடகங்கள் செய்தி அளித்து வந்தன.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள  கண்டமுல்லா ராணுவ முகாமில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடந்தது.   தற்போது காஷ்மீரில் கடும் குளிர் நிலவுகிறது.   சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது.

காஷ்மீர் இளைஞர்கள் இந்த குளிரையும் மழையையும் பொருட்படுத்தாமல் ராணுவத்தில் சேர ஆர்வமுடன் முகாமுக்கு வந்துள்ளனர்.  புல்வாமா தாக்குதல் முடிந்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில் ராணுவத்தில் சேர சுமார் 2000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முகாமுக்கு வந்துள்ளனர்.