ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வெளி மாநில  சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 5 ஆம் தேதியன்று விதி எண் 370 மற்றும் 35 ஏ விலக்கப்பட்டு காஷ்மீர்  மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.    அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.   மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக முன்னாள் காஷ்மீர் முதல்வர்கள் உள்ளிட்ட பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் தொலைப்பேசி மற்றும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டன.    அனைத்து பகுதிகளிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   இந்த கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி பத்திரிகையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையொட்டி ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் தொலைப்பேசி மற்றும் இணையச் சேவை தொடங்கப்பட்டது.     அரசு அலுவலகங்கள் இயங்கத் தொடங்கின.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வெளி மாநில சிறைகளில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   குறிப்பாக சோபியான் மாவட்டத்தில் இந்த கைது நடவடிக்கைகள் அதிக அளவில் நடந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.   அந்தப் பகுதி காவல் நிலையங்களில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குறித்த தகவல் அறிய மக்கள் காத்திருக்கின்றனர்.

இது குறித்து அம்மாநில காவல்துறை அதிகாரி தில்பக் சிங் வன்முறையில் ஈடுபட முயன்ற 800  இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 3000 வழக்குகள் பதியப்பட்டதாகவும் அவர்களில் 150 பேர் வெளி மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.    அத்துடன் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் ஏராளமான ஆட் கொணர்வு மனு பதியப்பட்டு வருகிறது.