காஷ்மீர் பதற்றம் – பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பொதுமக்கள்..!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டு கடும் பதற்றம் நிலவிவரும் சூழலில், காஷ்மீர் மக்கள் தங்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் வாய்ப்புகள் என்று சொல்லப்பட்டு, காஷ்மீரில் ஆயிரக்கணக்கான கூடுதல் படைகளை குவித்துள்ளது மத்திய அரசு. அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35ஏ சட்டப்பிரிவு நீக்கப்படலாம் என்ற செய்திகளும் பரபரப்பாக உலா வருகின்றன.

இதனையடுத்து காஷ்மீர் மாநிலத்திற்கு அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களின் பயணத்தைப் பாதியில் ரத்துசெய்துவிட்டு ஊர் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் பயணிகளும் கடும் பதற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில், பல காஷ்மீரிகள் தங்களின் பெருந்தன்மையையும், தயாள குணத்தையும் நிரூபிக்கும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். யாத்ரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பதற்றமடைய வேண்டாம் என்றும், தங்களின் வீடுகளுக்கு வந்து தாராளமாக தங்கலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும், உணவும் தங்குமிடமும் தாங்களே இலவசமாக வழங்குவதாய் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் அவர்கள் அரசின் நோக்கத்தை மறைமுகமாய் சாடியுள்ளனர் என்பது தெரியவருகிறது என்கின்றனர் பல சமூகவலைதள வாசிகள்.