வேலூர் நாடாளுமன்ற தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் திமுகவின் பலம் மக்களவையில் 24-ஆக அதிகரித்துள்ளது

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த தேர்தல், அதிக அளவிலான பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து எண்ணப்பட்டு வந்த வாக்குகளில், முதல் 6 சுற்றுக்களில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை வகித்தார். அதன் பின்னர் திடீரென முன்னேற்றம் கண்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

தற்போதைய நிலவரப்படி, அனைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்கு இயந்திரத்தை தவிற மற்ற அனைத்து வாக்கு இயந்திரங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி உறுதியாகியுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெறுவதன் மூலம், மக்களவையில் அக்கட்சியின் பலம் 24-ஆக அதிகரித்துள்ளது.