வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி: திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை உயர்வு

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில், திமுக தரப்பில் களமிறக்கப்பட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றிருக்கிறார். அதேநேரம் அவரது வெற்றியை தொடர்ந்து திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த தேர்தல், அதிக அளவிலான பணப்பட்டுவாடா செய்யப்பட்டதன் காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர், சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடர்ந்து எண்ணப்பட்டு வந்த வாக்கு எண்ணிக்கையில் முதல் 6 சுற்றுக்களில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை வகித்து வந்தார். பின்னர் 7வது சுற்று முதல் 21வது சுற்று வரை தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்: 4,85,340 வாக்குகள்

அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம்: 4,77,199 வாக்குகள்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபா லட்சுமி: 26,995 வாக்குகள்

என்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி, வேலூர் மற்றும் ஆம்பூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் திமுகவும், அணைக்கட்டு, கீழ்வைத்தினன் குப்பம், குடியாத்தம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவும் அதிக வாக்குகளை குவித்துள்ளன.

மொத்தம் பதிவான தபால் வாக்குகளில், அதிமுக 509 வாக்குகளும், திமுக 360 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 83 வாக்குகளும் பெற்றுள்ளன.