கும்பகோணம்:

திராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு வரும் 28-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்ப்டடுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ரமேஷின் மனைவி கவிதா, வாய்பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி. நீதிமன்ற வாயிலில் கணவரைக் கண்டு அவர் கதறி அழுதபோது…

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் கடந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 30-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர்  மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், தர்மராஜ், விடுதலை சுடர், ரமேஷ், சந்தோஷ், செந்தில்குமார், முருகன், சுவாமிநாதன், சிலம்பரசன், வெங்கட்ராமன் ஆகிய 10 பேரை கைது செய்து கடந்த 1-ந்தேதி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து  10 பேரும் ம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில்  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக 10 பேரையும் திருச்சி மத்திய சிறையில் இருந்து காவல்துறையினர் அழைத்து வந்து கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி 10 பேருக்கும் வருகிற 28-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். பிறகு  திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக அவர்களை காவல்துறையினர் வேனில் ஏற்றினர்.  அப்போது அங்கிருந்த உறவினர்கள், அவர்களை பார்த்து கதறி அழுதனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் என்பவர் மனைவி கவிதா(27). வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் தற்போது 9 மாத கர்ப்பிணியாவார்.

கணவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் மனவேதனையுடன் இருந்த இவர்,  கணவரை நேரில் பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதார். இது பார்ப்பவர்களை நிலைகுலையச் செய்தது.

முன்னதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் செய்தியாள்களிடம், “கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால்  நிலத்தடிநீர் பாழாகிவிட்டது.  இதைத் தடுக்க  காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும், எத்தனை வழக்குகள் போட்டாலும்,  உறுதியுடன் தொடர்ந்து போராடுவோம்” என்று கூறினார்.