Random image

‘கத்துவா வழக்கு:’ பஞ்சாப் மாவட்ட நீதிபதிக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டில்லி:

காஷ்மீர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக் கில், வழக்கை விசாரித்து வரும் பஞ்சாப் மாவட்ட  நீதிபதிக்கு, உரிய பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் ஆஜரான பெண் வழக்கறிஞருக்கு மிரட்டல் வந்ததை தொடர்ந்து  அவருக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது வழக்கை விசாரணை செய்து வரும் நீதிபதிக்கும் பாதுகாப்பு வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச்ச சேர்ந்த 8வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் 3 போலீசார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான  வழக்கில் காவல்துறையினர் சரியாக செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையில், வழக்கின் விசாரணை காஷ்மீரில் இருந்து பஞ்சாபுக்கு, பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினர் வேண்டுகோளை ஏற்று உச்சநீதி மன்றம் மாற்றியது. இந்த வழக்கு தற்போது பஞ்சாபில் உள்ள பதான் கோட்  மாவட்ட நீதிமன்றத்தில்  நீதிபதி தேஜ்விந்தர் சிங்  முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கத்துவா வழக்கை விசாரித்துவரும் நீதிபதிக்கும், வழக்கறிஞருக் கும்  உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்  என பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கத்துவா மாவட்டச் சிறையிலிருந்து பஞ்சாப் மாநில சிறைக்கு மாற்ற உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், வழக்கின்  விசாரணை முழுவதும் வீடியோ காமிரா மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளது.