அத்தியாயம் – 18                                                                 லோபமுத்ரை

மைக்க மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் அகத்தியர்.  அந்தப் பார்வையிலே கர்வம் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தது.

இவள் எனக்கானவள்.  எந்த லோகத்தில் தேடினாலும் கிடைக்காத பேரழகி.  இனி என் பத்தினி.

குள்ள உருவத்தைக் காரணம் காட்டி என்னை மணக்க மறுத்த பெண்கள் எல்லோரும் இவள் அழகைப் பார்த்து பொறாமைத் தீயில் வெம்புவார்கள்.

கட்டை விரல் உயரம் கூட இல்லாதவனுக்குக் கல்யாணம் ஒரு கேடா என்று கூடிக் கூடிப் பேசிச் சிரித்த ஆண்கள் குமுறி நெஞ்சம் வெடிப்பார்கள்.

இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பதற்காகவே அகக்தியர் லோபமுத்ரையை கவிதை களாலும் சொல்லிவிட முடியாத பேரழகுடன் படைத்தார்.  உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளின் உயர்ந்த உறுப்புகளைக் கொண்டு சிருஷ்டித்தார்.

சிருஷ்டித்ததும் குழந்தையில்லாமல் வாடிய விதர்ப்பராஜனிடம் லோபமுத்ரையைத் தந்து விட்டார். ” திருமண வயது வந்ததும் எனக்கு ஓலையனுப்பு விதர்ப்பா.  நான் வந்து மாலை சூடி அழைத்துப் போகிறேன்” என்றார்.

குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் சந்தோஷமாய் தலையாட்டினான் விதர்ப்பன்.  பிள்ளை வளர்ந்தது.  பேரழகுடன் வளர்ந்தது.  வளர்த்த பாசம், லோபமுத்ரையின் மணாளனாய் அகத்தியரை மனசால் கூட நினைக்க விட வில்லை.

வதர்ப்பன் மனசிலே ரகசியத் திட்டம் உருவாகியிருந்தது. “காதும் காதும் வைத்தாற்போல் அரசர்களை அழைத்து சுயம்வரம் நடத்திவிடலாம்..” என்று நினைத்திருந்தான்.

வெண்ணெய் திரண்டு வருகிற வேளை தாழி உடைந்த கதைபோல – திட்டத்தை நிறைவேற்ற நாள் பார்த்துக் கொண்டிருக்கும்போது அகத்தியர் வந்து விட்டார்.  லோபமுத்ரையைப் பார்த்தும் விட்டார்.

இமைக்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் காவி கட்டிய குள்ள மனிதனைப் பார்த்ததும் – சீண்டிப் பார்க்க வேண்டும் போல இருந்தது லோப முத்ரைக்கு.  அருகிலே தந்தை இருப்பதால் அடக்கிக் கொண்டாள்

அகத்தியர் லோபமுத்ரையை இன்னும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.  அவள் பருவ வனப்பு நதிக்கரை பயிர்களைப் போல் மிகச் செழிப்பாகக் காணப்பட்டது.  மானின் விழிகளால் அவள் மிரட்சியாய் பார்க்கும்போது – ஐம்புலன்களை அடக்கிய வித்தை கைநழுவிப் போய்விட்ட உணர்வு தலை தூக்கியது.

அகத்தியரிடமிருந்து பார்வையைத் திருப்பிய லோபமுத்ரை தந்தையிடம் போய், ‘யாரப்பா முனிவன் வேஷத்தில் வந்திருக்கும் இவர்?” என்று கேட்டாள்.

விதர்ப்பன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான்.

விதர்ப்பனின் தவிப்பைக் கவனித்த அகத்தியர், “உன்னைத்தான் கேட்கிறாள் விதர்ப்பராஜனே.  பதில் சொல்.  இவள் குரல்கூட நாரதர் கையிலுள்ள தம்புரா நாதம் போல் சுருதி சுத்தமாய் இருக்கிறது..” என்றார்.

இந்தப் பேச்சு லோபமுத்ரைக்குப் பிடிக்கவில்லை.  அகத்தியரை வெறுப்புடன் பார்த்தாள்.  தந்தையின் மௌனம் அவளுக்குள் சின்னதாய் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

“விதர்ப்பா ! இவள் குழந்தைப் பருவத்தில் நாம் பேசியது நினை விருக்கிறதல்லவா.” கேட்டார் அகத்தியர்.

“லோபமுத்ரா..” – கூப்பிடும்போதே விதர்ப்பனுக்குக் கண்கள் உடைந்தது.  வீரத்திற்குப் பேர் போன விதர்ப்பனின் கண்ணீர் லோபமுத்ரைக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது.  தந்தையின் கண்ணீருக்கு நாம்தான் காரணம் என்று சூழ்நிலை ஏற்படுத்திய உள்ளுணர்வு எச்சரித்தது.

‘என்னால் தந்தையின் கலகத்தைப் போக்க முடியுமானால் நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்’ என்று தனக்குள் சபதம் எடுத்துக் கொண்டாள்.

“சொல்லுங்கள் தந்தையே, ஏன் நடுக்கம்?”

“இவர்.. இவர்தான் உன்னைத் திருமணம் செய்யப் போகிறவர். இவருக்காகவென்றே நீ சிருஷ்டிக்கப்பட்டவள்.”

இதை கேட்டதும் லோபமுத்ரை திடுக்கிட்டாள்.

“இறைவன்-நான் இவருக்கென்று முடிவு செய்து படைத்தால் மனசு என்ற ஒன்றை எனக்கு எதற்குப் படைக்க வேண்டும்? அங்கே ஆசைகளை ஏன் விதைத்து வைக்க வேண்டும்?” என்று கேட்டாள்.

லோபமுத்ரையின் கேள்விக்குப் பதில் சொல்ல விதர்ப்பனுக்குத் தெரியவில்லை.  கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை உருட்டியபடி இருந்தான்.

அகத்தியர்  பதில் சொன்னார்.

“லோபா, உன்னை பொறுத்தவரை படைத்தது பிரம்மனில்லை.  நான் ஏளனமாய் பார்த்தாயே.. இந்தக் குள்ளன்தான் படைத்தவன்.  உனக்கு மனசும் ஆசையும் படைத்தது நீ என்னை நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.  நீ என்னை நினைக்காமல் கண்டதையும் நினைத்தால் அது உன்னை வளர்த்தவர்கள் மீது உள்ள குற்றம்.”

“நீங்கள் நிர்பந்திக்க நினைக்கிறீர்களா?”

“உன் தந்தையின் எண்ணத்தை உன்னால் தட்ட முடியாது என்பது எனக்குத் தெரியும்.  உன் தந்தையால் என் விருப்பதத்துக்கு எதிராக நினைக்க முடியாது லோபா..”

லோப முத்ரை தந்தையைப் பார்த்தாள்.  அந்த மாவீரன் கையாலாகாதவன்போல் நின்று கொண்டிருந்தான்.

“தந்தையே.. உங்கள் விருப்பம் அதுவானால் அப்படியே ஆகட்டும்..” என்றாள்.

‘தாடியையும், கமண்டலத்தையும் விட்டால் வேறு சொத்து என்று எதுவுமில்லாத முனிவனுக்கு உன்னைத் தர சம்மதமில்லைதான் மகளே.  ஆனால், முடியவில்லையே மகளே மனசு ஓலமிட்டது.  விதர்ப்பன் மனதில் உள்ளதைப் படிக்க, அவள் என்ன அகத்தியன் போல் மகா முனியா?

நாள் பார்த்தார்கள்.

கல்யாணம் நடந்தது.  அலங்கார தேவதையாய் நின்ற லோபமுத்ரையை அரையில் காவியும், நெஞ்சில் உத்திராட்சமும் அணிந்த அகத்தியர் பத்தினி’ ஆக்கிக் கொண்டார்.

“புறப்படலாம் லோப முத்ரை..”

“எங்கே?”

“நம் வீட்டுக்கு..”

“இங்கு என்ன குறைச்சல் .. உங்கள் மனசு நோகும்படி யாராவது நடந்து விட்டார்களா.. யார் அது?”

“மனைவி வீட்டில் கணவன் தங்குவது ஆண்மைக்கு அழகில்லை லோபா..”

“இஷ்டமில்லாத பெண்ணை இழுத்து மனைவியாக்கிக் கொள்வது மட்டும் ஆண்மைக்கு அழகா?”

தருணம் பார்த்து லோபமுத்ரை குத்திக் காட்டினாள். அகத்தியர் பதில் சொல்லத் தெரியாமல் தர்ம சங்கடத்தில் நெளிந்தார்.  ஆனாலும் சங்கடத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், “எதிர் கேள்வி கேட்காமல், கணவனின் விருப்பம் அறிந்து நடப்பவள்தான் நல்ல மனைவி.  அதற்கு களங்கம் வராமல் உன் தந்தையின் வளர்ப்பை மரியாதைப்படுத்துவாய் என்று நம்புகிறேன்.”

சொன்ன அகத்தியர் புறப்படுகிற வேலையில் இறங்கினார்.  வலது கையில் திருதண்டத்தையும், இடக்கையில் கமண்டலத்தையும் தூக்கினார். வேறு என்ன சொத்து.. புறப்பட வேண்டியதுதான்.

ஆனாலும் அடிமனசிலே குதிரை பூட்டிய தேரிலே போய்  ஆஸ்ரமத்தில் இறங்கினால் நன்றாக இருக்குமே என்ற அரிப்பு இருக்கவே செய்தது.

“நம்  வீட்டுக்கு..”

“விதுர்ப்பராஜனே! நான் புறப்படலாம் என்று முடிவு செய்து விட்டேன்.”

“மாமுனிவரே. நாங்கள் புறப்படுகிறோம் என்று சொல்லுங்கள்.  என் மகள் சிறு பெண்.  பிழை புரிந்திருந்தால் மன்னித்தருளுங்கள்.  கணவர் இருக்கும் இடம் தான் மனைவிக்கு சொர்க்கம் என்பதை அவள் அறியமாட்டாள்.  இமைப் பொழுது தாமதியுங்கள்.  அவளையும் அழைத்துச் செல்லுங்கள்.”

“சீக்கிரம் ..” என்றார் அகத்தியர்.  லோபமுத்ரையை அழைத்துக் கொண்டு பிரபஞ்சத்தையே வலம் வரம் வேண்டும்.  இந்த உருவத்துக்குப் பெண் கிடைக்காது என்றார்கள்.  பார்க்கும்படி உலா வரவேண்டும்.

‘லோபமுத்ரை’ விதர்ப்பன் அழைத்ததும் வந்தாள்.  அவள் கண்கள் கலங்கியிருந்தது.  அழுதிருக்க வேண்டும்.  பிரிவு வந்தால் பாசம் அழச் செய்து வேடிக்கை பார்க்குமே.

“ம் வாருங்கள்.. ” என்றாள் லோபமுத்ரை.

“இந்தக் கோலத்திலா வருகிறாய்.  நீ இப்போது வருவது ஆஸ்ரமத்திற்கு.  ரிஷி பத்தினிகளுக்கு விதிக்கப்பட்ட காவி உடையும், ருத்திராட்ச மாலையும் அணிந்துவா லோபமுத்ரை..”

“முனிவர்கள் தங்கள் பலம் பெருக்க, ஆசை அடக்கி, காவிகட்டி தவமிருக்கிறார்கள்? அவர்கள் மனைவியர்க்கு என் இப்படியொரு தண்டனை.. அவர்களின் துறவுக்கோலம் எதை சாதிக்க?”

“கணவரின் தவபலத்தில் மனைவிக்கு, பெரும் பங்கு உண்டு லோபமுத்ரை.  கணவர் யாகம் வளர்க்க சமித்து சேகரித்து தருவதால் அவளும் யாகம் வளர்த்து பெருமை பெறுகிறாள்.”

“காவி உடையில் சென்று சேகரித்தால்தான் சமித்து எரியுமா? இப்படி பட்டாடை கட்டி பொன்னகை உடம்பெல்லாம் பூட்டிக் கொண்டு சமித்து சேகரித்தாலும் எரியுமென்றுதான் நினைக்கிறேன்.  என் எண்ணத்தில் பிழையிருந்தால் தாங்கள் மன்னிக்க வேண்டும்.”

இந்தப் பணிதல் உண்மையானதல்ல, வேஷம் என்பதை அகத்தியர் அறிந்தே வைத்திருந்தார்.  அன்னியர் முன்னால் பொய்யான பணிதலை உண்மையாக்க நினைத்தார்.

“போகட்டும், இப்படியே புறப்படு..” என்றார்.

“தங்களுக்கு விருப்பமில்லையென்றால் என் தந்தை எனக்குச் செய்த சீர்வரிசைகளை இங்கேயே விட்டு வருகிறேன்..” என்றாள்.

மாமனார் வீட்டுச் சீரோடு போய் இறங்கும் மரியாதையை இழக்க அகத்தியருக்கு மனசில்லை.  ” உன் இஷ்டம் ” என்றார்.

“ஆஸ்ரமத்திற்கு போனதுமே உன்னை மற்ற ஆஸ்ரமப் பெண்களைப்போல் மாற்றி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்..” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னார்.

இதற்கு ஏதாவது ஒருவிதத்தில் லோபமுத்ரை எதிர்ப்பு தெரிவிப்பாள் என்று பார்த்தார் அகத்தியர்.  அவள் சிரிக்க மட்டும் செய்தாள். அந்தச் சிரிப்பின் அர்த்தம் அவருக்குப் புரியவில்லை.  இத்தனைக்கும் அகத்தியர் முக்காலமும் அறிந்த மாமுனிவர்.

கங்கைக் கரையிலே சுந்தரவனத்தில் அகத்தியரின் ஆஸ்ரமம் இருந்தது.  இன்னும் பல ஆஸ்ரமங்களும் அந்தப் பகுதியில் காணப்பட்டன.

பல வண்ணப் பூக்கள் பூத்துக் கிடந்தன.  தூரத்தில் கடலின் அலையோசை காதுகளை ஈரமாக்கின.  அந்தப் பகுதியே சின்ன சொர்க்கம் போல இருந்தது.

வேத மந்திரங்கள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தது.  யாக நெருப்பில் விடும் நெய் ஏற்படுத்திய  புகை வாசம் நாசிக்கு இதமான சுகந்தத்தை வழங்கிக் கொண்டிருந்தது.

அகத்தியர் வருகை அறிந்ததும் முனிவர்கள் அனைவரும் வரவேற்க வேகவேகமாய் வந்தனர்.  அகத்தியரின் பின்னால் அவரைவிட மிக உயரமாய், அழகே பெண்ணுருக்கொண்டு வந்தது போல் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து இடி தாக்கியதைப் போல் ஒரு கணம் அதிர்ந்தனர்.

லோபமுத்ரையின் அலங்காரம் ரிஷி பத்தினிகளிடையே ஆவலை ஏற்படுத்தியது.  தாங்களும் இப்படி அலங்காரம் செய்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டார்கள்.

லோபமுத்ரையை யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்தது.  அகத்தியரிடம் கேட்கத்தான் யாருக்கும் துணிச்சல் வரவில்லை.

ஆஸ்ரமவாசிகளின் எண்ணத்தை அறிந்து கொண்ட அகத்தியர், “இவள் என் பத்தினி..” என்றார் தாடியைத் தடவியபடியே.

லோபமுத்ரை ஆஸ்ரமப் பெண்களை ஆழமாகப் பார்த்தாள்.  எல்லோருமே காவி கட்டி தபஸ்வினி கோலத்தில் இருந்தனர்.  எல்லோருடைய கண்களிலும் விரக்தி மண்டிக் கிடந்தது.  தினம் தினம் எழும் ஆசைகளைப் பொசுக்குவதால் ஏற்படும் வேதனை முகத்தில் படர்ந்திருந்தது.

நம்மைப் போல் இந்தப் பெண்களும் இஷ்டமில்லாமல் இவர்களிடம் வந்து மாட்டிக் கொண்டவர்கள்தான் என்று நினைத்தாள்.  அவர்கள் மீது புரியாத வாஞ்சை ஏற்பட்டது.

தந்தையோடு யானை மீதிருந்து நகர்வலம் செல்லும்போது குடிமக்களைப் பார்க்கும்போது ‘தாய்மை’ என்று சொல்ல முடியாத – ஆனால் அதற்கு நிகரான உணர்வு பீறிட்டு எழும்.  அதே உணர்வு மனதில் இப்போதும் எழுந்தது.

இவர்களுக்கு முடிந்தவரை உதவுவது என்றும் நினைத்துக் கொண்டாள் சிரித்தபடியே அவர்களை நோக்கி நடந்தாள்.

இந்த ஆஸ்ரமம் பிடிக்கவில்லை.  எனக்கு அரண்மனைதான் வேண்டும்.  அங்குதான் வசிப்பேன் என்று பிடிவாதம் பிடித்து விடுவாளோ என்று பயந்திருந்த அகத்தியருக்கு லோபமுத்ரையின் இந்தச் செய்கை சற்று நிம்மதியளித்தது.

இந்த ரிஷி பத்தினிகளைக் கொண்டே லோபமுத்ரையை மாற்றிவிட தீர்மானித்துக் கொண்டார்.

ஆனால், ஆஸ்ரமப் பெண்ணாக லோபமுத்ரையை மாற்ற அகத்தியர் எடுத்துக் கொண்ட முயற்சி எதுவும் பலிக்கவில்லை.  அவள் மனசு புண்படும்படியாகப் பேசவும் அவரால் இயலவில்லை.  விதர்ப்ப தேசத்தைவிட்டு புறப்படும்போது, எந்த விதத்திலும் லோபாவின் மனசு சந்தோஷம் கெடாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்திருந்தார்.

அவசரப்பட்டு வாக்கு தருவது எவ்வளவு பெரிய தவறாகிவிடுகிறது.

ஆஸ்ரமத்திலுள்ள மற்ற முனிவர்களிடையே எழுந்திருந்த எதிர்ப்பையும், எதிர்க்கொள்ள வேண்டிய தர்ம சங்கடமும் வேறு அகத்தியருக்கு ஏற்பட்டிருந்தது.

அத்தனை முனிவர்களின் பத்தினிகளும் லோபமுத்ரையைப்போல் அலங்கோலம் செய்து கொள்ள ஆடை ஆபரணங்கள் கேட்கிறார்களாம். ¢  என்ன வேலை சொன்னாலும் ஒத்துழைக்க மறுக்கிறார்களாம்.  இதனால் அகத்தியர் மேல் ஆஸ்ரம ஆண்கள் கோபமாக இருக்கிறார்களாம்.

அகத்தியரின் பராக்ரமம் அறிந்து யாரும் நேரடியாக எதிர்ப்பை வெளிக்காட்டவில்லை.  ஆனால், அவர்களுடைய நடவடிக்கையிலிருந்தே லோபமுத்ரை மீதான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதை அறிந்து கொண்டார்.

லோபமுத்ரையை ஆஸ்ரமத்தை விட்டே அனுப்பி விடலாமா என்று கூட சில நேரங்களில் நினைத்திருக்கிறார்.  அப்படிச் செய்தால் அகத்தியரின் மூதாதையருக்கு நரகத்திலிருந்து விடுதலை வாங்கித் தரமுடியாமல் போகுமே, அதை நினைத்தால் அவர் கோபம் கமண்டலத்தைக் கண்ட கங்கையைப் போல் அடங்கிவிடும்.

பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து முடித்துவிட எண்ணியிருந்த அகத்தியர் கிரகஸ்தானதிற்கு அவர் மூதாதயர்தான் காரணம்.

ஒரு சமயம் மணிபுரி காட்டு வழியாகப் போய் கொண்டிருக்கும்போது சிலர் வவ்வாலைப்போல் தலைகீழாய் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.  அவர்களிடம் காரணம் கேட்டார்.  அவர்கள், “நாங்கள் உனது மூதாதையர்கள்.  நீ ஒரு பிள்ளை பெற்றுக் கொண்டால் இந்த நரகத்திலிருந்து எங்களுக்கு சொர்க்கம் கிடைத்துவிடும்” என்றனர்.

இதற்காகவே பெண் தேடி அலைந்து – மூக்கறுப்பட்டு – தனக்கு ஏற்ற பெண்ணைத் தானே சிருஷ்டித்து அவளை மணந்தும் கொண்டனர்.

அழகு, நிறம் எல்லாம் அவர் நினைத்தது போலவே இருந்தது.  அவள் மனசும், உயரமும்தான் அவர் கை மீறிவிட்டது.  அதனால் தான் இப்படியொரு தர்ம சங்கடம்.

சிவபெருமான் திருமணத்தால் பெருமை கிடைத்த நமக்கு – நாம் செய்த திருமணம் சிறுமை தேடித் தந்துவிட்டதே என்று நினைக்கும்போது விதி வலியது என்று நினைத்துக் கொள்வதைத் தவிர, அவரால் வேறு எதுவும் செய்ய இயலவில்லை.

என்னதான் மன வருத்தம் இருந்தாலும், கணவனுக்கு உண்டான கடமையிலிருந்து வழுவுவதில்லை என்று சங்கல்பித்தார்.  மனைவியை விரக தாபத்தில் தவிக்க விடுவது போல் பாவச் செயல் எதுவுமில்லை என்பதை அகத்தியர் அறிவார்.

அந்த உத்தேசத்துடன் இரவு லோபமுத்ரையை நெருங்கினார் அகத்தியர்.  அலங்காரப் பதுமையாய் இருந்தாள் லோபமுத்ரை.  காவிக் கோலத்தில் பார்த்தால் லோபமுத்ரை இத்தனை அழகாக இருக்க மாட்டாள் என்று நினைத்தார்.  லோபமுத்ரையை இப்படிப் பார்க்க அவருக்கு ஆசைதான் ஆனால் முனிவர் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று முறை இருக்கிறதே.  ஆஸ்ரம தர்மத்தைக் காப்பாற்ற மனதர்மத்தைப் பொசுக்கித்தான் ஆக வேண்டும். பொசுக்கினார்.  “காவி உடை உடுத்தினால் நீ இன்னும் அழகாக இருப்பாய் லோபா..” என்றார்.

“இருக்கலாம்.  உங்கள் மனசைக் கவர்ந்தது என் அலங்கார கோலம்தானே.  இந்தக் கோலத்தைப் பார்த்துதானே அரண்மனையில் என் மீது மயங்கினீர்கள்.  ஒரு வேளை என் துறவுக் கோலம் உங்களுக்குப் பிடிக்காமல் போய்விடலாம்.  அதை என்னால் தாங்க முடியாது.”

அப்பட்டமாகப் பொய் சொல்கிறாள் என்று அகத்தியருக்குத் தெரிந்துதான் இருந்தது.  என்ன செய்ய முடியும்?

“இந்தக் கோலத்திலும் அழகாகத்தான் இருக்கிறாய்..”

சிரித்தாள் லோபமுத்ரை.  அரண்மனையில் சிரித்த அதே சிரிப்பு. ஆனால் அர்த்தம் புரிந்து விட்டது போலத்தான் இருந்தது.

“லோப முத்ரை.. இந்த இரவை நாம் பயன்படுத்திக் கொள்ளலாமா?”

“நான் காவி கட்டினால்தான் நமக்கு முதலிரவு என்றீர்கள்.  மறந்துவிட்டீர்களா?”

“இருட்டில் நிறம் தெரியப் போவதில்லை என்று புரிந்து கொண்டேன். கலைத்துப் போடப் போகிற ஆடை எதுவாக இருந்தால் என்ன?”

“உங்கள் மனமாற்றம் சந்தோஷமாக இருக்கிறது.  எனக்குள் ஒரு ஆசை..”

“எதுவானாலும் சொல் லோபா..”

“அரண்மனையில் பார்த்தீர்களே பொம்மென்ற கட்டில்.. அதிலே முத்தால் அலங்கரித்து.. நறுமணங்களின் அணிவகுப்பு நடத்த அரசகுமாரன் ஒருவனோடு வாழ்வதாய் எனக்குள் ஆசையுண்டு.  இந்தச் சாணம் மெழுகிற தரைப் படுக்கையோடு என்னால் ஒன்ற முடியாது.  அரசனைப் போல் அலங்காரம் செய்து கொள்ளாத உங்களையும் அனுமதிக்க முடியாது.”

“ருத்ராட்சம் அணிந்த என் மார்பு முத்தும் பவளமும் அணிவதா?”

“என்ன தவறு? கணவரின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வது மனைவிக்கு கடமைப்போல, மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு கணவனுக்கு இருக்கிறதல்லவா..”

“நீ சொல்வது சரிதான் லோபமுத்ரை..”

“மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொறுப்பு கணவனைச் சார்ந்தது என்பதை ஒத்துக் கொண்டிர்களே. உங்களைப் பேரரசன் கோலத்தில் கூட வேண்டும் என்பதே என் ஆசை.  என் கணவன் நீங்கள் முனிவனாக வாழ்ந்தாலும் நான் உங்களை அரசனாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.”

“முனிவனுக்கு அடிபணிபவன்தான் அரசன். அரசனைவிட மேலானவன் நான்..”

“என் மனசுக்கு அரசன்தான் மேலானவன்..” என்றாள்.  இதற்கு மேலும் பேசிக் கொண்டிருப்பது அர்த்தமில்லை என்று நினைத்தாளோ என்னமோ. திரும்பிப் படுத்துக் கொண்டாள்.  அரசகோலத்தில் வந்ததால்தான் குழந்தை பெற்றுத்தர சம்மதிப்பாள் என்பதை அவள் மௌனம் சொன்னது.

லோபமுத்ரையை ஆஸ்ரமப் பெண்போல் ஆக்கி விடுவதாக நினைத்த நம் நிலைமை, அரசன் வேஷம் கட்டும்படியாக ஆகிவிட்டதே என்று நினைத்தார் அகத்தியர்.  சக்தியற்ற காவி உடை உடம்பில் காந்தலெடுப்பதாய் உணர்ந்தார்.

மூதாதையரின் தலைகீழாய் தொங்கும் காட்சி வேறு கண் எதிரில் வந்து உறுத்தியது.  வெகு நேரமாக தாடியைத் தடவிக் கொண்டே யோசித்தார்.

படுக்கையை விட்டு எழுந்தார்.  கமண்டலத்தைத் தூக்கிக்கொண்டார். “லோப, விரைவிலேயே உன் மனோரதம் நிறைவேறும்” என்று வெளியேறி நடந்தார்.

லோபமுத்ரை அரண்மனையில் வைத்து சிரித்ததின் அர்த்தம் இப்போது அகத்தியருக்கு நன்றாகவே புரிந்துவிட்டது.

காரியம் சாதிக்க வேண்டுமானால் ஆண் பெண்ணுக்கு அடங்கித்தான் போக வேண்டும். ¢  இதற்கு சாமான்யன் முனிவன் யாருமே தப்ப முடியாது.  அவள் சிரிப்பு சொன்ன சேதி இதுதான்.!