அத்தியாயம் – 10         சசி

   உடம்போடு ஒட்டிய ஈரச்சேலை சரக் சரக் என்று மௌனம் கலைக்க நடக்கிறாள் சசி.  கங்கையிலே நீராடிவிட்டு வருகிறாள்.  இந்திரன் இல்லாததால் உடம்பில் ஏற்படுகிற காமக் காந்தல்களை அவள் கங்கையின் துணையோடுதான் கட்டுப்படுத்துகிறாள்.  அப்படியும் காமத்தீ கட்டு மீறி மன்மத தாண்டவம் ஆடத்தான் செய்கிறது.

அளவாக எட்டு வைத்து நடந்தாலும் நடையில் சின்னத் தொய்வு இருக்கத்தான் செய்கிறது.  இந்திரன் தேவலோக அரசனாய் இருந்தவரை தன்னை மரியாதையுடன் பார்த்த பிற தேவர்க ளின் பார்வையில் மாற்றம் எற்பட்டிருப்பதை கவனிக்கிறாள்.

தரை பார்த்தும், முகம் பார்த்தும் பேசி கண்கள் இப்போது அவளது இடையை வெறித்துக் கொண்டும், முகத்துக்கு சற்று கீழே முறைத்துக் கொண்டும் மூச்சிரைக்கிறது.

நாதன் அற்ற அபலையாய் ஆகிவிட்டால் இப்படித்தான்.  நாய்கள் கூட ஆசைப்பட ஆரம்பித்து விடுகிறது.  கணவனை இழந்த எந்தப் பெண்ணும் இரவாகி விட்டால் நிச்சயம் ஆண் தேடத்தான் செய்வாள்.  அது ஏன் நாமாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்திலேயே அலைகிறார்கள்.  கேவலமானவர்கள்.

புருஷனுக்கு புத்தியில்லை.  மற்றவர்களை நொந்து என்ன ஆகப் போகிறது? புருஷனை இழந்த தனிமையை விட பிற புருஷர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ளும் போராட்டமே கொடியது என்பது இந்திரனுக்கு எங்கே புரிகிறது.  அது புரியுமானால் எதற்கு இப்படியெல்லாம் நடக்கிறார்?

அழகான  ஸ்திரீகளை பார்த்தால் – அவர்கள் மேல் மோகங்கொண்டு தழுவி – கடைசியில் சாபம் வாங்கி, சாபம் தீரும் வரை எங்காவது சுற்ற வேண்டியது.  சாபம் தீர்ந்ததும் மீண்டும் இந்திர பதவி, மீண்டும் சாபம்.

இப்படிப் பிரிவதும், இணைவதுமான வாழ்க்கை வாழ்வதற்குப் பதில் நிரந்தரமாகப் பிரிந்து விடலாமா என்று கூட சசி நினைத்திருக்கிறாள்.

இந்திரனுக்கு சாபம் கொடுக்கும் முனிவர்கள் மனசு வைத்தால் இந்தப் பிரச்சனையை எளிதாகத் தீர்த்து வைத்திருக்க முடியும்.  சசியை விட்டு ஒரு பொழுதும் இந்திரன் பிரியாதிருக்கச் செய்திருக்க முடியும்.

அகலிகையை இந்திரன் கௌதமன் வேடத்தில் வந்து கூடினான் என்பதற்காக உடம்பெல்லாம் கண்ணாகட்டும் என்று சபித்தார் கௌதமர்.  இப்படி ஆளாளுக்கு இந்திரனை கேலிச் சித்திரமா சபிக்கிறார்களே தவிர, இதற்கு தீர்வு காண நினைக்கவில்லை.  நினைத்திருந்தால், “உன் மனைவி சசியைத் தவிர பிற பெண்களைத் தீண்டினால் உன் தலை வெடித்துச் சிதறிவிடும்.  வெறும் உடம்பு தான் உயிருடன் இருக்கும்” என்று சபித்திருக்கலாம்.

எதிர்காலத்திலாவது இப்படி ஒரு சாபத்தை – இந்திராணியைப் பொறுத்தவரை வரம் – கணவனுக்கு யாராவது தர வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

பாதையோரத்தில் பூத்துக் கிடந்த பாரிஜாத மலர்க் கொத்து ஒன்றைக் கிள்ளி கூந்தலில் செருகிக் கொண்டே நடக்கிறாள்.  சசி இப்போது தேவர்களின் குரு பிரகஸ்பதியின் ஆஸ்ரமத்தில் வசித்து வருகிறாள்.  அங்குதான் போய்க் கொண்டிருக்கிறாள்.

அரண்மனையைத் தாண்டி நடக்கும்போது மனசு கனத்தது.  இந்திரன் இங்கிருந்தால் அரண்மனையில் வசிக்கலாம்.  கூந்தலுக்கு நெய் தேய்த்து விடுவதில் இருந்து, கால் விரல் நகத்துக்கு அழுக்கு எடுத்து விடுவதற்கு வரை தனித்தனியே பணிப்பெண் இருப்பார்கள்.  இன்று யாருமில்லை.  பிரகஸ்பதியின் தேவைகளையும் சேர்த்து சசி கவனிக்கிறாள்.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த வாழ்க்கையோ! இந்திரன் விருந்தி காசுரனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்ம  ஹத்தி தோஷத்துக்குப் பயந்து பூலோகத்தில் ஒளிந்து கிடப்பதை அறிவாள்.  எப்போது அந்தத் தோஷம் தீருமோ!

தோஷம் தீர்ந்தால் மட்டும் போதாது.  இந்திரலோகத்தை ஆண்டு கொண்டி ருக்கும் நகுஷன் பதவியை திருப்பித் தர வேண்டும்.  இந்திரனைவிட அதிக மாக ஆட்டம் போட ஆரம்பித்துவிட்ட நகுஷன் நிச்சயம் இந்தப் பதவியை இழக்க சம்மதிக்கப் போவதில்லை

நகுஷன் எந்த ஆசையும் இல்லாதவனாகத்தான் இருந்தான்.  அரசன் மகளான அவன் பற்றற்று காட்டிலே வாழ்ந்து கொண்டிருந்தான்.  பசியெடுத்தால் கனிகளைப் பறித்துத் தின்றுவிட்டு  வெறும் பாறையில் படுத்துத் தூங்கும் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான்.  அவனுக்கு கடவுளைத் துதிப்பதை தவிர எந்த ஆசையும் இருக்கவில்லை.  தவம் செய்வதும், அசுவமேத யாகம் நடத்துவதும் அவனுக்கு அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது.

நூறுக்கு மேல் அசுவமேத யாகமும் செய்து முடித்து விட்டான்.

இறைவனிடம் அவன் எதுவும் தனக்கு வேண்டுமென்று கேட்கவில்லை.  இறைவன் அவனிடம், ‘நகுஷா’ என்ன வரம் வேண்டும் கேள்’ என்றால், யாகம் வளர்க்க நெய்தான் கேட்டிருப்பான்.

அப்படிப்பட்ட நகுஷனுக்கு ஆசை காட்டி இந்திரலோகத்துக்கு அரசனாக்கியது.  தேவர்கள்தான்.  இப்போது தப்பான ஆளை தேர்ந்தெடுத்து விட்டோமோ என்று வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

செய்த தப்புக்கு தண்டனையை அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.  நகுஷனுக்கு இப்போது தேவர்கள் அடிமைகள்.  சாலைகளில் நடக்கும்போது உடம்பில் வெயில் படக்கூடாது என்பதற்காக சூரிய பகவானை குடை பிடிக்கச் சொல்லுமளவுக்கு நகுலனின் அராஜகம் தலை விரித்து ஆடுகிறது.

‘இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையே இன்பங்கள் கொட்டிக் கிடக்க, வெறும் குளிரிலும், பனியிலும் தவமிருந்தேனே.. நான் முட்டாள்.  நல்லவேளை, தேவர்கள் எது இன்பம் என்று அடையாளம் காட்டினார்கள். இல்லையென்றால் தவமிருப்பதே சந்தோஷம் என்று ஏமாந்திருப்பேன்.

ஊர்வசியின் நாட்டியம் தெரிந்திருக்காது.  மேனகையின் உடம்புக் கதகதப்பை அறிந்திருக்க முடியாது.  சோமபானம் உடம்புக்குள் ஏற்படுத்தும் சூட்சும வித்தைகள் புரிந்திருக்காது’

கண்ணுக்குத் தெரிந்த பெண்களை அவன் விட்டு வைக்கவில்லை.  நகுஷன் என்ற பெயரைக் கேட்டாலே பெண்கள் நடு நடுங்கினார்.  அப்பழுக்கற்ற வீரனாக இருந்த நகுஷனை பல பெண்கள் விரும்பவும் செய்தார்கள்.  பல தேவர்க ளோடு படுக்கை பரிட்சயம் உள்ள நாட்டியப் பெண்கள் நகுஷனே தொடர்ந்து தேவராஜன் பதவியை வசிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.  அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும்போது ‘நகுஷன் வீரத்தில் மட்டுமல்ல, வித்தை யிலும் பெரிய ஆள்’ என்று சொல்லிக் கொண்டார்கள்.

தேவலோகத்தில் ஊர்வசிதான் பேரழகி என்று நினைத்துக் கொண்டிருந்தாள் நகுஷன்.  கூடுதல் நேரத்தை அவளோடு கழித்தான்.  அவளுடைய நாட்டியத்தில் மட்டுமல்ல – அவள் வெற்றிலை மடித்துத் தரும் நளினத்திலும் கிறங்கினாள்.

ஊர்வசியும் அவன் ஆண்மையில் மயங்கிக் கிடந்தாள்.  அவளை மனசுக்குள் காதலித்தாள்.

இந்திரன் அரசனாக இருந்தபோது சசி வசித்த அரண்மனையில்தான் ஊர்வசி வசிக்கிறாள்.  சசியின் பணிபெண்கள் அப்படியே ஊர்வசியின் பணிப்பெண்களாகி விட்டார்கள்.  சட்டம்தான் இயற்றப் படவில்லையே தவிர, ஊர்வசி மகாராணி போலத்தான் வாழ்ந்தாள்.

இரவெல்லாம் ஊர்வசியோடு கழித்துவிட்டு கங்கையிலே நீராட வருகிறான் நகுஷன்.  எதிரில் ‘சசி’ வருகிறாள்.  பார்த்தான் நகுஷன். ‘யாரிவள் பேரழகி’ என்ற கேள்வி அவன் மனதில் விழுந்தது.

ரதத்தை விட்டு இறங்கி அவளைத் தொடர்ந்தான்.

தனக்குப் பின்னால் அபாயம் நடந்து வருவதை அறியா ‘சசி’ கூந்தலில் ஒட்டியிருந்த ஈரத்தை கைகளால் சிதறடிக்கிறாள்.  நகுஷன் தன் மனசு சிதறி விட்டதைப் போல் உணர்கிறான்.

சசியின் பெருமைக்குரிய பின்னழகு நகுஷன் மனசில் நெருப்புக் குச்சியை கிழித்துப் போட்டுக் கொண்டே இருக்கிறது.  அவளுடைய இடுப்பு வளைவில் நகுஷன் பலமுறை வழுக்கி விழுந்தான்.

கூந்தலை அள்ளி முடி போட்டுக் கொண்டாள்.  அப்போது ஏற்பட்ட உடம்பு அசைவு நகுஷனுக்குள்  சுரம் எற்படுத்தியது.  அவளுடைய முடிந்த கூந்தலுக்குள் நகுஷனின் மூச்சுக் காற்று தத்தளித்தது.

சாலையோரம் கிடந்த பாரிஜாதப் பூ ஒன்றைக் கிள்ளி கூந்தலில் செருகிக் கொண்டாள்.  இந்தச் செடியில் பூத்த இத்தனை பூக்களில் இது மட்டும் தவம் செய்த பூ.  புண்ணியம் பண்ணியிருக்கிறது.

சசி பிரகஸ்பதியின் ஆஸ்ரமத்துக்குள் நுழைவதைப் பார்க்கிறான் நகுஷன்.

பிரகஸ்பதியை நினைத்தால் சற்று பயமாகத்தான் இருக்கிறது.  இந்தப் பதவி கிடைத்ததற்கு ஆரம்பக் காரணம் பிரகஸ்பதியின் கோபம்தானே.

பிரகஸ்பதிக்கு தரவேண்டிய மரியாதையை இந்திரன் தந்திருந்தால் அவர் கோபித்திருக்கமாட்டார்.  தான் பெரியவன் என்ற மமதையில் – பிரகஸ்பதி வரும்போது எழுந்து மரியாதை செய்யாமல் இருந்தான் இந்திரன்.  பிரகஸ்பதி என்னை மதிக்காத இடத்தில் இருக்க மாட்டேன் என்று வெளியேறினார்.

இதை அறிந்த அசுரர்கள் ஆனந்தப்பட்டார்கள்.  தேவர்களை அழிக்க இதுதான் ஏற்ற சந்தர்ப்பம் என்று குதூகலித்தனர்.  துடுப்பு இல்லாத படகு போலாகி விட்டது தேவர்கள் நிலை.

தங்களை காப்பாற்றிக் கொள்ள தேவர்களுக்கு அவசரமாய் ஒரு குரு தேவைப்பட்டார்.  அசுர வம்சத்தில் பிறந்தவன் என்றாலும் ‘விஸ்வரூபன்’ மகாவீரனாக இருந்தான்.  எனவே அவனை தேவர்கள் குருவாக வரச்சொல்லி கெஞ்சினார்கள்.  தேவர்களின் எண்ணத்தை ஏற்றான்.  அசுரர்களையே எதிர்த்தான்.  பதவி தந்தவர்களுக்கு விசுவாசம் காட்டினான்.

விஸ்வரூபன் யாகம் செய்தான்.  அதற்கு அவிர்பாகம் கொடுக்கும்போது இந்திரன் அசுரர்களுக்கு தரக்கூடாது என்றான்.  விஸ்வரூபன் கேட்க வில்லை. “என்ன இருந்தாலும் அசுரர்கள் என் தூ£தையர்.  எனவே தரத்தான் செய்வேன்” என்றான். தந்தான்.

கோபம் கொண்ட இந்திரன் விஸ்வரூபனைக் கொன்றான்.  இதை அறிந்த விஸ்வரூபனின் தந்தை துவஷ்டா ஆவேசப்பட்டு, வெல்ல முடியாத வீரனான விருத்திகாசுரனை படைத்து போருக்கு அனுப்பினார்.

இந்திரன் ததீசி முனிவரின் அஸ்தியில் தயாரிக்கப்பட்ட வஜ்ரா யுதத்தால் விருத்திகாசுரனை கொன்றான்.  பிரமஹத்தி தோஷம் துரத்தியது.  ‘மானஸசரஸு” நதியில் தாமரைத் தண்டின் அடியில் போய் ஒளிந்து கொண்டான்.

இப்போது தோஷம் நீங்கிவிட்டது.  வெளியேதான் வர முடியவில்லை.  அங்கேயே இருந்து அழுகிப் போக வேண்டியதுதான்.  வெளியே வந்தால் தொலைத்துக் கட்டும் உத்தேசத்தில் இருக்கிறான் நகுஷன்.

சசி இந்திரனனின் மனைவி என்ற விஷயம் இன்னும் நகுஷனுக்குத் தெரியாது.  தெரிந்தால் பூலோகத்துக்குப் போய் இந்திரனை தேடிக் கண்டு பிடித்து அவனைத் தொலைப்பதுதான் முதல் வேலையாக இருக்கும்.

“யாரங்கே?” என்றான் நகுஷன்.

குபேரன் ஓடி வந்தான்.  கந்தலாடை கட்டியிருந்தான்.  உடம்பில் செழுமை கொஞ்சமுமில்லை.  வறியவன் போல் – தரித்திரதாரிபோல் இருந்தான்.

தேவலோகத்திலுள்ள எல்லா தேவர்களையும் இப்படி உருமாற்றிதான் வைத்திருந்தான்.

“சொல்லுங்கள் மகாராஜா?”

“பிரகஸ்பதியின் ஆஸ்ரமத்திற்குள் ஒரு பெண் நுழைவதைப் பார்த்தேன்.  அவள் யார்?”

“ஏன் மகாராஜா?”

” கேட்டதற்குப் பதில் சொல் அடிமையே…”

குபேரன் பயப்பட்டதுபோல் நடித்தான்.  உண்மையில் அவனுக்குள் சந்தோஷம் ஏற்பட்டது.  ஊரெல்லாம் உள்ள பெண்களை சீண்டுகிற இந்திரன், தன் மனைவியை யாராவது சீண்டினால் பொறுக்கமாட்டான்.  ஆவேசமாகி விடுவான்.

நகுஷன், இந்திரன் இருவரில் யாராவது ஒருவர் நிச்சயம் தொலைவார்கள்.  இந்திரன் தொலைந்தால் தனக்கு இந்திர பதவி கிடைக்கலாம்.  நகுஷன் தொலைந்தால் தன்னிடமிருந்து நகுஷன் பறித்து வைத்திருக்கும் அளகாபுரிக்காவது அரசனாகலாம்.

“மகாராஜா, அது இந்திரன் மனைவி இந்திராணி!” பெயர் சசி.

“இத்தனை பேரழகியை மனைவியாக வைத்துக் கொண்டா பெண்வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்!”

“அது இந்திரனின் உடன் பிறந்த குணம் மகாராஜா,”

“நீ போகலாம்” என்றான் நகுஷன்.

நகுஷன் சசி மயக்கத்தில் இருப்பது தேவலோகம் முழுவதும் பரவியது.  நாரதர் மூலமாக பூலோகத்தில் இருந்த இந்திரன் காதுக்கும் எட்டியது.

‘இதைக் கேட்டதும் இந்திரனின் ரத்தம் கொதிக்கும் தாமரைத் தண்டை விட்டிறங்கி வெளியே வருவான் என்ற நாரதரின் நம்பிக்கை பொய்யானது.

“உன் மனைவியை இன்னொருத்தன் விரும்புகிறான் என்கிறேன்.  கையாலாகாதவன் போல் இருக்கிறாய்..”

எங்கே தான் துவக்கிய கலகம் கலகலத்துப் போகுமோ என்ற ஐயம் நாரதருக்கு.

“நகுஷனை எப்படி வெல்லப் போகிறோம் என்று தெரியாமல் தவித்தேன்.  அவன் என் மனைவியை விரும்புகிறான்.  சசிதான் என் ஆயுதம்.  அவளை வைத்தே நகுஷனை வெற்றி கொள்வேன்.”

“நகுஷன் உன்னை விட பெண் பித்தனாக இருக்கிறான்.  அவனால் சசிக்கு ஆபத்து நேர்ந்தால்?”

“போரில் எதிரியை வீழ்த்துவது மட்டும்தான் நோக்கமாக இருக்க வேண்டும்.  ஆயுதம் பழுதாகுவதைப் பற்றி கவலைப்படக்கூடாது நாரதரே!”

“நாராயணா…” கலகம் வேலை செய்கிறது.

“நாரதரே… தாங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.  நான் ஒரு ஓலை தருகிறேன்.  அதை எப்படியாவது என் மனைவி சசியிடம் சேர்த்துவிட வேண்டும்!”

“நிச்சயம் செய்கிறேன் இந்திரா..”

நகுஷன் சசியைப் பார்த்த நாள் முதல் மற்ற பெண்களை தொடுவதை நிறுத்தினான்.  குறிப்பாக ஊர்வசியைப் பார்க்கப் போகவில்லை.  நகுஷன் வராத காரணம் தெரிந்ததும் ஊர்வசிக்கும் சசி  மேல் பொறாமை ஏற்பட்டது.

சசி மட்டும் நகுஷனின் ஆசைக்கு சம்மதித்தால் மீண்டும் நாட்டிய மகளாக வேண்டியது தான்.  நகுஷனுக்கு மட்டுமே ஆடிய கால்கள் இனி சபையில் ஆட வேண்டும்.

‘சசியும் தன்னைப்போல் பெண்தானே.  அதுவும், இந்திரன் இல்லாமல் வாடிப் போயிருப்பவள்.  வாடிய பயிர் மழை பெய்தால் வேண்டாம் என்றா மறுக்கும்’

ஆனால் சசி மறுத்தாள்.  நகுஷனின் ஆசைக்குப் பணிய முடியாது என்று சொல்லிவிட்டாள்.

‘உன் கணவன் எத்தனையோ பெண்களை வைத்திருக்கும்போது நீ என்ன மட்டமா’ என்றுகூட கேட்டுப் பார்த்தான் நகுஷன்.

“அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கிறது” என்றாள். சசி.

நகுஷனுக்கு சசியை பலாத்காரமாக அடைய அதிக நேரம் பிடிக்காது .  அவன், சசியைக் காதலித்தான்.  எனவே அவள் எந்த விதத்திலும் மனம் நோகக்கூடாது என்பதில் குறியாக இருந்தான். அவளுக்காக எதை செய்யவும் தயாராக இருந்தான்.

ஆனால் இந்திரனிடமிருந்து வந்த ஓலை சசியின் மனதைக் கீறி ரணப்படுத்தியது.  இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவா அவள் கங்கை நதியே கதியென நம்பி இருந்தாள்.

நாரதர் கொடுத்த ஓலையைப் படித்தாள் சசி.  ‘பிரியமான சசிக்கு, உன் ஆசை இந்திரன் எழுதிக் கொள்வது உன்னைப் பிரிந்த ஒவ்வொரு பொழுதும் கசக்கிறது.  தாமரைத் தண்டையே தழுவிக் கிடக்கும் நான் உன் தழுவலில் லயித்துக் கிடக்க நீதான் மனசு வைக்க வேண்டும்.  நகுஷன் உன்னை விரும்புவதாக அறிந்தேன்.  உன் அழகைக் கொண்டு நீ கர்வப்படுகிறாயோ இல்லையோ.. நான் கர்வப்படுகிறேன்.  உன் அழகால் எப்படியாவது அவனை வீழ்த்திவிடு. நான் மீண்டும் இந்திரலோக அரசனாவது உன் கையில் தான் இருக்கிறது தேவி.’

“ஏன் சசி தேவி உன் முகம் அப்படி மாறுகிறது? அப்படி என்ன எழுதப்பட்டிருக்கிறது?”

நாரதர் கேட்டார்.  அவருக்கு என்ன எழுதப்பட்டிருக்கும் என்று புரியாமலில்லை.

ஓலையை அவரிடம் படிக்கத் தந்த சசி, படித்து முடித்ததும் கேட்டாள். “இதற்கு என்ன அர்த்தம் நாரதரே! அர்த்தம் புரிந்துதான் எழுதினாரா?”

“நகுஷனை வீழ்த்த உன்னை ஆயுதமாகப் பயன்படுத்தப் போவதாக என்னிடம் இந்திரன் சொன்னான் சசிதேவி.  மனைவியின் கற்பைவிட, பதவி பெரியதாகப் போய்விட்டது தேவி. எப்படியானாலும் முடிவெடுக்கும்போவது நீதானே..”

“நகுஷனுக்காக காத்திருப்பதாய், நகுஷனிடம் சொல்லுங்கள் நாரதரே.. நீங்கள் போய் சொல்வது கேவலம் என்று நினைத்தால் வேண்டாம்.

சசிக்குள் அடக்க முடியாத ஆக்ரோஷம்.  எதிரில் இப்போது இந்திரன் வந்தால் பார்வையாலேயே பொசுக்கி விடுவாள்.

இப்படியொரு புருஷனுக்கு மனைவியாக இருப்பதை விட – விதவையாகலாம் என்று நினைத்தாள் சசி.  இந்திரனை அழிக்கத்தான் நகுஷனைப் பயன்படுத்த உத்தேசிக்கிறாள்.  அதற்காகத்தான் வரச்சொல்லி விட்டிருக்கிறாள்.

நாரதர் அதை தப்பாகப் புரிந்து கொண்டார்.  தான் புரிந்ததை தேவர்களிடம் சொல்லவும் செய்தார்.

தேவர்கள் எல்லோரும் ஒன்று கூடி சதி வலை விரித்தனர். நகுஷனிடம் தூது போனார் நாரதர்.

“நகுஷா, சசிமேல் நீ வைத்திருந்த அளவற்ற காதலை சசி புரிந்துக்கொண்டு விட்டாள்.  அவள் உனக்காகத்தான் காத்திருக்கிறாள்.  முனிவர்கள் பல்லக்கு சுமக்க அந்தப் பல்லக்கில் போய் நீ இறங்கினால் அவள் மிகவும் சந்தோஷப்படுவாளாம்” என்றார்.

இவ்வளவுதானே.

முனிவர்கள் பல்லக்கு சுமக்க – நகுணன் சசியைப் பார்க்கப் புறப்பட்டான்.  இக்கணமே சசியைப் பார்க்க வேண்டும் என்று மனசு அதிவேகத்தில் தாவுகிறது.  பல்லக்கு மெல்ல நடக்கிறது.

‘வேகமாய் போங்கள்… வேகமாய் போங்கள்…’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான்.

குறுமுனிவர் அகத்தியரால் வேகமாய் நடக்க முடியவில்லை.  கட்டைக் கால்களால் எட்டித்தான் வைக்கிறார்.  வேகம் வரவில்லை.  இதனால் கோபம் வந்த நகுஷன், அவர் தலையில் ‘குட்டி’  ‘வேகமாய் நட குள்ளமுனி’  என்றான்.

இந்த பாவியை சுமக்கும்படியாயிற்றே என்பதே அகத்தியருக்குள் கோபக்கனலை மூட்டி விட்டிருந்தது.  இப்போது, அவன் தலையில் குட்டவே – மனுஷரால் தாங்க முடியவில்லை. “பாம்பாகப் போ” என்று சபித்து விட்டார்.

முனிவர் சாபம் தப்புமா? நகுஷன் பாம்பாக மாறி பூலோகத்தில் போய் விழுந்தான்.  இது தேவர்கள் தீட்டிய திட்டம் என்பது அகத்தியருக்கும் தெரியாது.  நகுஷனும் அறியமாட்டான்.

இந்திரன் மீண்டும் தேவலோக அரசனாகி விட்டான்.

பதவியேற்புக்கு முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் வந்திருந்தனர். ‘சசி’ மட்டும் வரவில்லை.

காரணம் கேட்டான் இந்திரன்.  எல்லோருடைய பதிலும் “தெரியாது தேவராஜனே” என்றிருந்தது.

‘தேவலோகத்துக்கு வந்ததும், நேரே தன்னை வந்து பார்க்காமல் அரச சபைக்கு போய்விட்டாரே என்கிற கோபமாக இருக்கும்.  பூலோகத்திலிருந்து கொண்டு வந்த அமுதத்தை விட சுவையான பனங்கற்கண்டு சாப்பிடக் கொடுத்தால் கோபம் எல்லாம் மறைந்து விடும்’ என்று நினைத்தான்.  பதவியேற்பு விழ முடிந்ததும் சசியைத் தேடி வந்தான்.

பிரகஸ்பதியின் ஆஸ்ரமத்திற்கு வெளியே நின்று ‘இந்திராணி, நான் இந்திரன் வந்திருக்கிறேன்’ என்றான்.

“எதற்கு?” என்றாள் சசி.  குரலில் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை.

“முதலிலேயே உன்னைப் பார்க்க வரவில்லை என்பதற்காக கோபத்தில் இருக்கிறாயா தேவி?  அதுதான் பதவி ஏற்றதும் ஓடி வந்துவிட்டேனே.  வா தேவி, அரண்மனைக்கு போகலாம்”

“யாருக்கு முந்தி விரிக்க? எனக்கு இந்திர லோகம் அலுத்து விட்டது.  பிரம்ம லோகத்துக்கு அரசியாக வேண்டும் என்ற ஆசை எனக்குள் நீண்டகாலமாக இருக்கிறது.  பிரம்மலோகத்திலிருந்து பிரம்மனை துரத்துவதற்கான ஏற்பாட்டில் நீங்கள் இறங்குங்கள். அதற்கு நான் யாரோடு படுத்து எழ வேண்டுமோ அவரையும் அழைத்து வாருங்கள்..” என்றாள்.

இந்திரன் பதில் சொல்லவில்லை.  தலையை தொங்கப் போட்டுக் கொண்டே நடந்தான்.  தான் எழுதிய கடிதம்தான் சசியை இப்படி பேசவைத்தது என்று இந்திரனுக்குப் புரிந்தது.  எங்கு போகிறோம் என்ற பிரக்ஞை இல்லாமல் நடந்தான்.  சசியின் பேச்சு இந்திரனின் கன்னங்களை அறைந்து கொண்டே இருந்தது.

‘இந்திரன் மானஸ்தன் என்றால், உயிரை விடுவான்.  தேவர்களுக்கும் சாவு உண்டு என்ற சரித்திரத்தை எழுதுவான்.’ என்று நினைத்த சசி காலம் பதில் சொல்லட்டும் என்று பிரகஸ்பதியின் ஆஸ்ரமத்திலேயே காத்திருந்தாள்.