Random image

கவனிக்கப்படாத காவியப்பூக்கள் – சுசோபனா – துரை நாகராஜன்

அத்தியாயம் – 17                                                                           சுசோபனா

குதிரையின் முதுகில் துவண்டுபோய் படுத்திருந்தான் பரிக்ஷூத். தாகத்தால் வறண்ட நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டியிருந்தது.

தூரத்திலே பறவைகளைக் கண்டப்பிறகுதான் அவன் கண்களில் உயிர் வந்தது.  பறவைகள் கண்ட திசையில் குதிரையைச் செலுத்தினான்.

வெக்கைக் காற்று மறைந்து சில்லென்று காற்று வீசியது.  மருத மரங்களும், கடம்பா மரங்களும் காற்றில் கிளை அசைத்து அவனை வரவேற்றன.

மரச் சோலைகளுக்குப் பின்னால் பெரிய தடாகம் இருந்தது.  குவளை மலர்களும், தாமரையும் அதில் விரிந்து கிடந்தன.  மரங்கொத்திப் பறவையொன்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

குதிரையை மரநிழலில் நிறுத்தியவன் தடாகத்தை நோக்கி வேகமாய் நடந்தான்.  வயிறார தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வேட்டையாடலைத் தொடங்குவது என்று நினைத்துக் கொண்டான்.

‘எனக்கும் பசிக்கிறது’ என்று குதிரை கனைத்து ஞாபகப்படுத்தியது.  குதிரையைத் திரும்பிப் பார்த்தவன், ‘இரு உனக்கும் தாமரைத் தண்டுகள் திண்ணத் தருகிறேன்.’ என்று நயன பாஷையில் பேசினான்.

தடாகத்தின் அருகில் சென்று தண்ணீர் குடிக்கலாம் என்று நீரை கைகளில் அள்ளினான். அப்போது அந்த அதிசயம் நடந்தது.  தண்ணீருக்குள்ளிருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள்.

அந்தப் பெண் மின்னலைப் போல் வெளிச்சமாக இருந்தாள்.  நனைந்த மேனியில் சூரியன் விழுந்து அவள் மேனியின் பளபளப்பை இன்னும் அதிகமாக்கிக் கொண்டிருந்தது.  முற்றாக நனைந்து போயிருந்த மாராப்பு சேலை அவள் மேனியின் கட்டமைப்பை சத்தம் போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தது.

வேகமாய்  நீரில் நடக்க சேலை தடுக்கும் என்பதால் நீர்பரப்புக்கு மேலே ஆடையைத் தூக்கிப் பிடித்திருந்தாள்.  அதனால் தெரிந்த தொடையழகு அவனுக்குள் தீ மூட்டி வேடிக்கை பார்த்தது.

எற்கெனவே தாகத்தில் இருந்தவன், எதிர்பாராமல் ஏற்பட்ட வெப்பத் தாக்குதலால் மீன் கொத்திப் பறவையின் அலகில் மாட்டிய மீன்போல துடித்துக் கொண்டிருந்தான்.

நீரை அள்ளி அள்ளிக் குடிப்பதாய் நினைத்து காற்றை அள்ளிக் குடித்துக் கொண்டிருந்தான்.

தண்ணீர் குடிக்க வந்தவனின் இந்தத் தடுமாற்றம் நம்மைப் பார்த்துதான் என்று அவளுக்குப் புரியாமலில்லை.  அழகாய் ஒரு சிரிப்பு சிந்தினாள். அவன் முழுசாய் தன்னை தொலைத்து விட்டு நின்றான்.

நீரிலிருந்து கரையேறிவள் சின்னதாய் ஒரு பாட்டை முனங்கியபடி வெகு உற்சாகமாய் நடந்தாள்.  பூக்களைப் பறித்துக் கொண்டும், ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும் நடக்கும் அவள் பின்னால் சென்று கொண்டிருந்தான் பரிக்ஷூத்.

“யார் நீங்கள் ..? எதற்காக என்னையே தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள்?”

“நானாக வரவில்லை பெண்ணே, உன் அழகும், நீ பாடும் பாட்டும் என்னைக் கட்டி இழுத்துக் கொண்டு வருகிறது.”

“பார்த்தால் வீரனாய்தெரிகிறீர்.  தனியாக இருக்கும் கல்யாணமாகாத கன்னிப் பெண்ணிடம் வம்பு பண்ணுவதுதான் வீரனுக்கு அழகா?”

“நீ தனியாக இருக்கிறாயா? யார் அப்படிச் சொன்னது? கண்கள் என்ற பெயரிலே இரண்டு குத்துவாள். புருவம் என்ற பெயரிலே நாணேற்றிய நிலையில் இருக்கும் வில், நெற்றி என்ற பெயரிலே பரசுராமர் கையிலிருக்கும் மழு..”

“போதும், உமது வாயால் கவிஞர்கள் வேலையில்லாமல் சொல்லிவிட்டுச் சென்ற பொய்களைக் கேட்க வரவில்லை.  உமக்கு என்ன வேண்டும்?”

“நீ என்னை திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்க வேண்டும்.”

“நான் யார் என்று தெரிந்தால் இப்படிக் கேட்க மாட்டீர்”

“கல்யாணமாகாத கன்னிப் பெண் என்று உன் வாயாலேயே சொல்லிவிட்டாய்.  அதுமட்டும் போதும் நீ யாராகவும் இருந்துவிட்டுபோ.  கவலையில்லை.  என்னை உன் அடிமையாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று மட்டும் சொல்லிவிடாதே.”

” கணவன் என்பவன் அடிமையா? புது தத்துவ விசாரம் சொல்கிறீர்கள்.  நீங்கள் எதையோ பார்த்து பயந்துபோய் இருப்பதாய் தெரிகிறது.  தெளிந்த பிறகு இதுபற்றி பேசலாமே?”

“நான் உன்னால் சித்தம் தடுமாறி இருப்பது உண்மைதான் . நீ எண்ணுகிறபடி பைத்தியம் பிடிக்கவில்லை.  கணவன் அடிமையா என்று கேட்டாய் அல்லவா.. காதலின் சுகமான பொழுதுகளே அடிமையாய் கிடப்பதில்தான் பெண்ணே.”

“அடிமையென்றால் அவர்களுக்கென்று தனி ஆசைகள் உண்டா?”

“மனைவியின் ஆசையை, மனைவியின் அந்தரங்கத் தேவையைப் பூர்த்தி செய்துவிடுவதிலேயே ஒரு ஆண் அதிக இன்பம் அடைகிறபோது அவனுக்கென்று  தனி விருப்பங்கள் அவசியமில்லை பெண்ணே.”

“மனைவியின் ஆசையை, மனைவியின் அந்தரங்கத் தேவையைப் பூர்த்தி செய்துவிடுவதிலேயே ஒரு ஆண் அதிக இன்பம் அடைகிறபோது அவனுக்கென்று தனி விருப்பங்கள் அவசியமில்லை பெண்ணே.”

“அப்படியானால், உங்கள் ஆளுமை என்னை ஒரு போதும் கட்டுப்படுத்தாது என்று உறுதியளிக்க முடியுமா?”

“அதற்காகத்தான் காத்திருக்கிறேன் பெண்ணே. உன் பெயரை நான் தெரிந்துக்கொள்ளலாமா?”

“சுசோபனா.”

“எப்போது நம் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் சுசோபனா?”

“தண்ணீரை எனக்குக் காட்டவே கூடாது.  தண்ணீரை எனக்குக் காட்டினால் அந்தக் கணமே நம் திருமண உறவு முறிக்கப்படும்.  நான் போய் விடுவேன்.  இதற்குச் சம்மதமானால் இந்த மரங்களையும், அதில் பூத்துக்கிடக்கும் மலர்களையும் சாட்சியாக வைத்து இப்போது வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்.”

பரிக்ஷ¦த் சுசோபனாவியின் நிபந்தனையை நினைத்தான்.  தண்ணீரைக் கிழித்துக் கொண்டு அவன்.  வெளியேறிய அந்த இன்பமான காட்சியை நினைத்தான்.  முத்து முத்தான நீர்த் திவலைகள் உடம்பில் படர்ந்திருக்க , கூந்தலிலிருந்து நீர்ச் சொட்டிக் கொண்டிருக்க, உதட்டால் நீர்த் திவலைகளை ஒத்தி ஒத்தி உறிஞ்சிக் குடிக்க வேண்டும் என்று புறப்பட்ட ஆசையை அசைப்போட்டான்.  அவள் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு நெளிந்தான்.

“யோசிக்கிறீர்கள் அல்லவா.  இதுதான் ஆண் புத்தி.  காரியம் சாதிக்க கூசாமல் பொய் சொல்வார்கள்.  ஆசைப்பட்டதை அடைந்ததும் தூக்கி எறிவார்கள்.”

“இல்லை சசோபனா, நான் அதுபற்றி யோசிக்கவில்லை.  உனக்காக என் உயிரையும், உடம்பையும் இழக்கச் சித்தமாகி விட்ட பிறகு என் ஆசைகளுக்கா அதிக மதிப்பு கொடுக்கப் போறேன்? சம்மதம் சுசோபனா.”

“வாக்கு மாற மாட்டீர்களே?”

“வேறு கோரிக்கைகள்?”

“இல்லை.  கடைசிவரை இந்த ஒன்றை காப்பாற்றினால் போதும்.”

-சிரித்துக் கொண்டே சொன்னாள்.

திருமணம் நடந்தது.  தண்ணீர் பற்றின பயம் பரிக்ஷ¦த்தை உடும்பைப்போல் பற்றிக் கொண்டது.

 

மழைப் பெய்து விடக்கூடாது என்தற்காகத் தினமும் வருண பகவானுக்கு பூஜை நடத்தினான்.  தன் மந்திரியிடம் சொல்லி தண்ணீர் இல்லாத தேசத்தை சிருஷ்டித்தான்.  சுசோபனாவை அழைத்துக் கொண்டு அங்கே குடியேறினான்.

பரிக்ஷ¦த் தண்ணீர் தாகம் எடுத்தால் குதிரையேறி பல காத தூரம் போய் வந்தான்.  ஒவ்வொரு முறை சுசோபனாவியின் ஒப்பனையைக் காமக் கரம் கொண்டு கலைத்துப் போடுகிறபோதும், நீராடுவதற்காக அவன் தண்ணீர் தூரம் பயணப் பட வேண்டியிருந்தது.  அந்தப் பயணம் இன்னொரு ஒப்பனையைக் கலைப்பதற்கான ஓய்வெடுத்தல் என்பதால் முதலில் ஆனந்தமாகவே இருந்தது.  நாளடைவில் அலுப்புத் தட்டியது.

‘தாகம் எடுக்கிறது.  தண்ணீர் வேண்டும்’ என்று ஒரு நாளாவது சுசோபனா கேட்பாள்.  அவள் போட்ட நிபந்தனையை அவளே மீறுவாள் என்று எதிர்பார்த்து ஏமாந்தான்.

அதிகமாய் தாகம் எற்படுத்தும் உணவு வகைகளைத் தினசரி செய்ய வைத்தான்.  பரிக்ஷ¦த்துதான் தண்ணீருக்காகத் திண்டாடினானே தவிர, சுசோபனா அதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாதவளாக இருந்தாள்.

நீராடுவதுமில்லை.  ஆனால் மேனியில் சுகந்த மணம் இருந்தது.  நித்தம் பத்துவேளை நீராடிய மேனிபோல உடம்பு சுத்தமாய் இருந்தது.

“அந்த வித்தையை எனக்கும் கற்றுத்தருவதுதானே சுசோபனா..”

“எந்த வித்தையை?”

“தண்ணீரே இல்லாமல் வாழும் வித்தையை.”

“இல்லை, அதைச் சொல்ல உரிமையில்லை.”

சுருக்கென்று கோபம் வந்தது பரிக்ஷத்துக்கு.  ஆனால் அந்தக் கோபத்தை வெளிக்காட்ட முடியவில்லை.

‘நீ சொன்னதற்கெல்லாம் தலையாட்டுவேன்’ என்று காதல் மயக்கத்தில் சொல்லியிருக்கிறானே.

சுசோபனாவின் ஒவ்வொரு செயலும் வரம்பு மீறுவதாகப்பட்டது பரிக்ஷ¦த்துக்கு.  உண்மையிலேயே தான் அடிமையாகத்தான் நடத்தப்படுகிறோமா என்ற எண்ணம் அவனை இம்சித்தது.

பரிக்ஷ¦த்துதான் அப்படி நினைத்துக் கொண்டானே தவிர, சுசோபனா அவன் மீது உயிரையே வைத்திருந்தாள்.  அவன் ஆசைக்கெல்லாம் வளைந்து கொடுத்தாள்.

பரிக்ஷ¦த்து  சுசோபனாவைக் காதலிப்பதைவிட நூறு மடங்கு அதிகமாய் அவனைக் காதலித்தாள்.

மனித மனம் விசித்திரமானது.  எது கிடைப்பதில்லையோ அதை விரும்பும்.  அதுதான் வேண்டும் என்று முரண்டு பிடிக்கும்.

பரிக்ஷ¦த்தின் மனம் முரண்டு பிடித்தது.  சுசோபனாவை உச்சிப் பொழுதில், நிலா வெளிச்சத்தில் என்று எல்லாப் பொழுதுகளிலும் விதவிதமான ஒப்பனையில் விதவிதமாக அனுபவித்தவனுக்கு அந்த விபரீத ஆசை முளைத்தது.

முதன் முதலாக சுசோபனாவைப் பார்த்தானே.. அதே நனைந்த கோலத்தில் பார்க்க வேண்டும்.  அப்படியே அள்ளி எடுத்து அவள் உடம்பிலுள்ள ஈரத்தை எல்லாம் உதட்டால் துடைக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

சுசோபனாவை அழைத்தான்

எப்போதும் அவனுடைய அழைப்பிலே ஒரு கொஞ்சுதல் தெரியும்.  குழைதல் இருக்கும் .  இப்போது ஆணாதிக்க வெளிப்பாடு தெரிந்தது.  ‘நான்’ என்ற ஆணவத்தின் சாயல் தெறித்தது.

பதில் பேசாமல் வந்தாள் சுசோபனா, குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் எங்கோ கிளம்புவதற்குத் தயாராக நின்றான் பரிக்ஷ¦த்.

“எங்கே போகிறோம்?”

“ஏறிக்கொள்.  நீயே சென்றதும் தெரிந்து கொள்வாய்.”

“ஏன் என்னமோ போல் பேசுகிறீர்கள்? காதல் கொஞ்சுகின்ற கண்களில் எதற்கு கோபத்துக்கு இடம் தந்தீர்கள்?”

“காதல் கொஞ்சுகிற கண்கள் என்று சொல்லாதே, அடிமைத்தனம் மண்டிக் கிடந்த முகம் என்று சொல்.  உனக்குப் பிடித்தது அதுதானே?”

“அடிமையை யாராவது ஆள விடுவார்களா? நான் என் உணர்விலும், உறுப்புகள் ஒவ்வொன்றிலும்  உங்களை ஆளவிட்டிருக்கிறேன்.”

“நீ சொல்வது உண்மையென்றால்.. என் விருப்பத்துக்கு நீ மரியாதை தருவாய் என்பது நிஜமானால்.. கேள்வி கேட்காமல் என்னோடு புறப்படு..”

சுசோபனா ஏறிக் கொண்டாள்.

பரிக்ஷ¦த் சவுக்கை கழற்ற, குதிரை காற்றாய் பறந்தது.

சுசோபனாவை எந்தக் குளக்கரையில் பரிக்ஷ¦த் சந்தித்தானோ அந்தக் குளக்கரையில் வந்து ரதம் நின்றது.

பரிக்ஷ¦த் இறங்கினான் .  கண்களில் மிரட்சி காட்டி நின்ற சுசோபனாவை “இறங்கு சுசோபனா, நீராடலாம்” என்றான்.

“நீராடவா.. நான் இதே குளக்கரையில் உங்களிடம் சொன்ன நிபந்தனையை மறந்து விட்டீர்களா? தண்ணீரை எனக்குக் காட்டவே கூடாது என்றேனே..”

“அதை இத்தனை நாட்களாய் காப்பாற்றி வந்திருக்கிறேன்.  இன்று என் ஆசையை நீ நிறைவேற்று.  ஜல விளையாட்டு நடத்த வேண்டும்.  வா விளையாடலாம்!”

“உங்கள் ஆசையை நிறைவேற்றுவதற்காக என் காதலைப் பொசுக்கிவிடாதீர்கள்.”

“காதலர்களுக்கு இஷ்டமானதுதானே புனல் விளையாட்டு.  பிறகு என்ன தயக்கம்?

“தண்ணீரைக் காட்டுவதில்லை என்ற உறுதிமொழியில் தானே என்னை மணந்துக்கொண்டீர்கள்.  உறதிமொழியை நீங்கள் மீறும் போது, நம் உறவும் முறிந்து விடுமே என்று அஞ்சகிறேன்.”

“உறுதி மொழி அளிப்பதும், தேவைப்பட்டால் மீறுவதும் மனிதர்களுக்குப் புதுதில்லையே சுசோபனா! அதிலும் நான் நாட்டை ஆளும் அரசன்.  நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. வா நீராடலாம்.”

“மனித இனத்துக்கு நம்பிக்கைத் துரோகம் சின்ன விஷயமாக இருக்கலாம்.  எங்கள் குலம் அப்படியல்ல.  நாங்கள் வாக்கைக் காப்பாற்றுபவர்கள்.”

“அப்படியானால் நீ மனுஷி இல்லையா?”

“இல்லை..”

“என்னை ஏமாற்ற பொய் சொல்கிறாய்.”

“என்னையே நான் எதற்காக ஏமாற்ற வேண்டும்? நான் யார் என்பதை நம் திருமணத்துக்கு முன்பே சொல்ல வந்தேன்.  நீங்கள் தடுத்தீர்கள்.  இப்போது சொன்னால் உங்களால்  ஜீரணிக்க முடியாது.”

(சுசோபனா தவளை அரசன் ஆயுவின் மகள்.  தண்ணீரைக் காட்டினால் மீண்டும் தவளையாகிவிடுவாள்.  அதனால்தான் தண்ணீரைக் காட்டக்கூடாது என்றாள்.)

“கட்டுக்கதை சொல்லி என்னை ஏமாற்றிவிடலாம் என்று எண்ணுகிறாய்.  இதுவரை நான் ஏமாந்தது போதும்.” என்றான். ஏதோ சொல்ல வந்தவளை எதுவும் சொல்ல வேண்டாம் என்று தடுத்தான்.  அவளைத் தூக்கி தண்ணீரில் எறிந்தான்.  அவனும் குதித்தான்.

குளத்துக்குள் விழுந்தவள் அந்தப் பொழுதே மாயமாய் மறைந்து விட்டாள். பரிக்ஷ¦த் தேடித் தேடி அலுத்தான்.  பிரம்மாண்டமான தவளை ஒன்று துள்ளி ஓடி மறைந்ததைப் பார்த்தான்.

அந்தத் தவளைதான் சுசோபனாவை விழுங்கியிருக்க வேண்டும் என்று முடிவு கட்டினான். தவளையை எங்கு கண்டாலும் கொல்வேன் என்று சூளுரைத்தான்.

சிங்கத்தையும், சிறுத்தையையும், வேங்கையையும் வேட்டையாடியவன் இப்போது தவளைகளைக் கொன்று குவித்தான்.

தவளையை எங்கு கண்டாலும் துரத்தி துரத்தி உயிர் பறித்தான்.

பார்ப்பவர்கள், பரிக்ஷ¦த் மன்னனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று பேசிக்கொண்டார்கள்.  மன்னனின் இந்த நிலைக்குக் காரணம் ஒரு பெண் என்பதை மந்திரி மூலமாக குடிமக்கள் அனைவரும் அறிந்து கொண்டனர்.  ஆவேசமடைந்தனர்.  மன்னனை ஏமாற்றியப் பெண் மட்டும் கிடைத்தால் அவளைக் குழுவிலேற்றி கொல்லவும் தயாராக இருந்தார்கள்.  அவளைக் கண்டபடி தூற்றினார்கள்

பரிக்ஷத் ஆண் மகன் என்ற மமதையில் கல்யாணத்திற்கு முன்பு செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை மீறியதால்தான் சுசோபனா பிரிந்து போனாள் என்ற உண்மையும் அவளைப் போலே எங்கேயோ மறைந்திருந்தது.