அத்தியாயம்-9

திலோத்தமை

ஒயிலாக முல்லைக் கொடிபோல் நிற்கிறாள் திலோத்தமை.  கண்கள் என்ற பெயரில் இரு குறுவாள்களும், கன்னம் என்ற பெயரில் நேர் பாதியில் நேர்த்தியாய் வகுந்த இரு மாங்கனித் துண்டுகளையும் வைத்திருக்கிறாள்.  அவள் நெற்றியில் கற்றையாய் விழுந்து புரளும் கூந்தல், கார்மேகமும் வெண்ணிலாவும் ஓடிப் பிடித்து விளையாடும் காட்சியை நினைவுபடுத்துகிறது.

அவள் அழகு வாய் மூட மறந்து நிற்கும் எல்லா தேவர்களின் நரம்புகளையும் மீட்டிக் கொண்டிருக்கிறது.  இத்தனைக்கும் அவள் அழகை முழுமையாய் பார்த்தவர் ஒருவர் கூட இல்லை.

நெற்றியைப் பார்த்தவர் அங்கேயே நிற்கிறார்.  நீண்ட கைவிரல் நகத்தைப் பார்த்தவர் அதையே பார்க்கிறார்.  இதைவிட மேலான ஒன்றைப் பார்க்க வேண்டும் என்கிற பிரக்ஞை யாருக்குமே இல்லை.  நல்ல வேளை-தேவர்களுக்கு மனிதர்களைப்போல் இமைக்கிற தொல்லை இல்லை.   அப்படி இருந்திருந்தால் இமைகளைப் பிய்த்து எறிந்திருக்கவும் செய்வார்கள்.

திலோத்தமையின் அழகு எதையும் செய்ய வைக்கும்.  சாதாரண அழகா அது? அவள் திரண்ட ஒய்யாரம் இந்திராணிக்குமில்லை.  மன்மதன் மனைவி ரதிக்கும் இல்லை.  பிரபஞ்சத்திலுள்ள உயர்ந்த பொருட்களின் சிறந்த பகுதியில் ஒரு துளி என்று சேமித்துச் செய்யப்பட்ட சிருஷ்டி அல்லவா அவள்!

அவளையே வெறித்துக் கொண்டிருக்கும் தேவர்களை அவள் ஒரு புழுவைப் பார்ப்பதுபோல்தான் பார்க்கிறாள்.  எப்படிப் பார்த்தால் என்ன? திலோத்தமை தன்னைப் பார்க்கிறாள் என்பதே ஆனந்த மல்லவா!

வீதியில் நடந்து செல்லும் கணிகையின் கண்களைப் போல் அலைகிற காற்று திலோத்தமையின் மேனியை தழுவிக் கிடந்த ஆடையை கலைக்கிறது.  வாயு பகவானுக்கு இந்த வகையில் அதிர்ஷ்டம்தான்.  நெஞ்சில் காமத்தீ மூண்டு விட்டால் அந்தப் பொழுதே ஆசை தீர தழுவிக் கொள்ளலாமே!

தேவர்களின் கண்களை உறுத்துகின்ற திரண்ட அழகை மறைக்க வேண்டுமென்று திலோத்த மைக்குத் தோன்றவில்லை.  கைகள் இருப்பது கலைகிற ஆடையை சரி செய்வதற்கும்தான் என்ற அறிவை அவள் இன்னும் பெறவில்லை.

ஈரக்கைகளை பிசைந்து கொண்டு நிற்கிறார் தேவசிற்பி விஸ்வகர்மா.  திலோத்தமையின் உடலை வடித்தது இவர் என்பதால் திலோத்தமைக்கு தாய் முறை வரவேண்டும்.  அவள் அழகு விஸ்வ கர்மாவின் கண்களையும் உறுத்துகிறது.  அவர் நீரில் ஒரு காலும் நெருப்பிலே ஒரு காலும் ஊன்றி யது போல் தத்தளிக்கிறார்.

பளிங்குத் தரையில் முத்துக்களை சிதறவிட்டதுபோல் ஓசை கேட்கிறது.  திலோத்தமைதான் சிரித்திருக்கிறாள்.  அவள் பிரம்ம ஞானம் முழுவதையும் இப்போது பெற்றுவிட்டாள்.  யார் மனதில் என்ன நினைப்பு ஓடுகிறது என்று முகத்தைப் பார்த்தே அவளால் அறிய முடிகிறது.

பிரம்மா கண்களை மூடி யோகத்தில் இருக்கிறார்.  மூடிய இமைக்குள் திலோத்தமைதான் நிற்கிறாள்.  கண்களை இன்னும் இறுக்கமாய் மூடியவர் ‘உயிர் கொடுத்தவன் தந்தை’ என்ற மந்திரத்தை உருவேற்றிக் கொண்டிருக்கிறார்.  மனக்குதிரைக்குக் கடிவாளமிடுவது அத்தனை எளிதா?

தென்திசை பார்க்க நிற்பது சிவன்.  அவர் கண்களும் திலோத்தமையைத்தான் பார்க்கிறது. நெற்றிக் கண்ணும் திறந்திருக்கிறது.  அதில் தீஜூவாலை எதுவுமில்லை.

சிவனின் மூச்சுக் காற்றில்தான் அதிக வெப்பம்!

இதே கோலத்தில் எவ்வளவு நேரம்தான் தேவர்களுக்கு விருந்தாகிக் கொண்டிருக்க முடியும்? திலோத்தமை கால் சலங்கை  சப்திக்க நடக்கிறாள்.

அவள் நடை ஒய்யாரம் தேவலோக வாசிகள் மனதை தரையில் விழுந்த மீனாய் துடிதுடிக்க வைக்கிறது.  திலோத்தமை மேற்குத் திசையில் நடக்கிறாள்.  மேற்கு பார்க்க சிவனுக்கு இன்னொரு முகம் தோன்றிற்று.  திலோத்தமையை பார்க்காமல் சிவனுக்கு முடியவில்லை.  திசைக்கொரு முகத்தை சிருஷ்டித்துக் கொண்டார்.

சூரியன் தன் வெளிச்சக் கதிர்களால் திலோத்தமை எதற்காக படைக்கப்பட்டாள் என்பதே எல்லோருக்கும் மறந்து போயிற்று.  அவளை யார் அடைவது என்ற எண்ணம்தான் மனதை வியாபித்திருந்தது.

திலோத்தமையால் தேவர்கள் படுகிற பாட்டை பிரம்மா பார்க்கிறார்.  ஒரு பக்கம் சந்தோஷமாக இருக்கிறது.  மறுபுறம் அச்சம் குடிகொள்கிறது.  பயத்திலிருந்து விடுபட சிவனிடம் யோசனை கேட்கலாம் என்றால் அவரும் சித்தம் கலங்கி நிற்கிறார்.

பிரம்மாவின் தவிப்பைப் பார்த்த நாரதர் அந்த யோசனை சொல்கிறார்.  உடனே அதைச் செயல் படுத்தும் முயற்சியில் இறங்கினார் பிரம்மா.

சிவன் மனைவி உமை, மால் மனைவி லட்சுமி, இந்திரன் மனைவி சசி என்று எல்லா தேவர்களின் துணைவியரையும் வரவழைத்தார்.  பற்றி எரிகிற மூங்கில் காட்டில் பலத்த மழை பெய்தால் என்ன நடக்கும்? மனைவியரைப் பார்த்தும் பிடாரன் கை பாம்பாய் தேவர்கள் அடங்கிவிட்டனர்.

தேவர்களைப் பிடித்து கட்டியாகிவிட்டது.

இப்போது பிரம்மாவிடம் மகிழ்ச்சி மட்டும் மிச்சமிருந்தது.  தேவர்களை முக்கண்ணனை, நீலவண்ணனை, தன்னை சிறங்கடித்த அழகு கந்தன், உபகந்தனையா விட்டு  வைக்கப் போகிறது?

என்னவெல்லாம் ஆட்டம் போட்டு விட்டனர் கந்தனும் உபகந்தனும், பூலோகம், நாகலோகம், தேவலோகம் மூன்று லோகங்களையும் அடிமையாக்கிவிட்டனரே.  தவமிருக்கும்போது எத்தனை சமர்த்தாய் இருந்தனர்.  உடம்புச் சதையை பிய்த்து யாகம் எரித்து வழிபட்டனரே.  யாகத்தீயில் எழுந்த புகை தேவலோகத்தையே இருளடைய வைத்து விட்டது.  அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டிருக்க வேண்டும். வரம் கொடுத்தது தப்பாகிவிட்டது.

சாவே வரக்கூடாது என்றல்லவா வரம் கேட்டார்கள்.  ஏதோ நினைப்பில் தந்தேன் என்று சொல்லி யிருந்தால் என்ன ஆகியிருக்கும்? நல்ல வேலை.. அவர்களைத் தவிர வேறு யாராலும் அவர்களுக்கு சாவு வராது என்ற வரத்தை கொடுத்தார்.

அசுரர்கள் ஒற்றுமை அதிக நாள் நீடிக்காது என்ற நம்பிக்கையில்தான் அந்த வரத்தைத் தந்தார்.  ஆனால் பிரம்மாவின் நினைப்பை கந்தனும், உபகந்தனும் பொய்யாக்கி விட்டனர்.  சகோதரர்கள் இருவருக்குள்ளும் பகை வளர்க்க மேற்கொண்ட அத்தனை முயற்சியும் தோற்று விட்டது.

திலோத்தமை கடைசி முயற்சி.  இதிலும் தோற்றுவிட்டால், இரு அசுரப் பதர்களுக்கும் வாழ்நாள் முழுக்க அமையாக இருக்க வேண்டும்.  எத்தனை கேவலம்.

ஆனால் திலோத்தமை சாதிப்பாள். தேவர்கள் நெஞ்சிலே பகை நெருப்பு மூட்டியவள் – பெண்  பித்தர்களான கந்தன் உபகந்தனையா விட்டு வைப்பாள்?

நினைப்பே எத்தனை இதமாக இருக்கிறது.  நல்லபடி நடந்து முடிந்துவிட்டால்..

“திலோத்தமை” என்கிறார் பிரம்மா.

பிரம்மாவின் அழைப்பை கேட்டு திலோத்தமை வருகிறாள்.  கோடைக்கால நதியின் நீரோட்டம் போல் நேர்த்தியான நடை.  அவள் உடம்பின் நறுமணம் பிரம்மாவின் நாசியைத் தாக்குகிறது.

“சொல்லுங்கள் தந்தையே..”

“பூலோகம் போக வேண்டும் பெண்ணே!”

“ஏன்? பூலோக வாசிகளையும் தேவர்களைப்போல் பைத்தியங்கள் ஆக்க வேண்டுமா?”

“அது உன் இஷ்டம் திலோத்தமை. அதற்கு முன் உன்னால் ஆக வேண்டிய வேலை ஒன்றி ருக்கிறது..”

சொல்லும்போது பிரம்மாவுக்குள் எதுவோ தைக்கிறது.  தைக்கட்டும்.  தன்மானத்துக்குக் கொம்பு சீவ இது நேரமில்லை.  தேவர்களால்தான் முடியாது என்று ஆகிவிட்டதே. பெண்ணைத்தானே நம்பியாக வேண்டியிருக்கிறது.  ‘பேடிகள்’ என்ற அவச்சொல் வந்து சேரும்.  அதைப் பார்த்தால் முடியுமா? மூன்று லோகத்தையும் வளைத்துப் போட்டிருக்கும் கந்தன், உபகந்தனிடமிருந்து ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றியாக வேண்டுமே?’

“என்ன செய்ய வேண்டும் நான்?” . திலோத்தமை கேட்கிறாள்.

“விந்திய மலைச் சாரலில் சற்று நேரம் நாட்டியமாட வேண்டும்..”

“இதைச் சொல்லத்தானா இத்தனை தூரம் தவீத்தீர்கள்!”

நெளிகிறார் பிரம்மா.

பூலோகத்தைப் பார்க்கிறாள் திலோத்தமை.  தேவலோகத்தின் இறுக்கம் இல்லாமல் இங்குள்ள வர்கள் எத்தனை மகிழ்ச்சியாய் உள்ளனர்! தேவர்கள் மட்டும் ஏன் பயத்தை விழுங்கியவர்கள் போல் இருக்கிறார்கள்.?

விந்திய மலைச்சாரலுக்கு வருகிறாள்.  இங்குதானே பிரம்மா நாட்டியம் ஆடச் சொன்னார். எதற்காக? ஏற்கெனவே பல பெண்கள் நாட்டியமாடிக் கொண்டிருக்கிறார்களே?

பெண்கள் மத்தியில் போதையில் புரண்டு கொண்டிருக்கின்றனரே.. அவர்கள் யார்? முறுக்கிய   மீசையும், திமிறிய தோள்களமாக… சுத்தமான வீரர்களாக இருக்க வேண்டும்.

மது ஆறாக ஓடுகிறது.  இசைக் கருவிகள் மோகன ராகத்தை வாசிக்கின்றன.  சிருங்காரம் சொட்டச் சொட்ட நாட்டியம் ஆடுகின்றனர்.  எல்லோருமே சிருங்கார பாவத்துடன்தான் ஆட வேண்டுமா?

அவள் நின்ற இடம் பூஞ்சோலை.  பல்வகை மலர்களும் பூத்துக் கிடக்கின்றன.  அதன் வாசனை திலோத்தமையை கவர்ந்திழுக்கிறது.  அந்தப் பூக்கள் ‘என்னைக் கிள்ளி உன் கூந்தலில் சூடிக்கொள்ளேன்.  என்கிறது.

திலோத்தமை பூப்பறிக்கிறாள்.  அந்த காட்சியைப் பார்த்து விடுகிறாள் உபகந்தன்.  இப்படியும் ஒரு பேரழகா? இருக்க முடியுமா?

எது கிடைத்தாலும் அண்ணன் தம்பிகள் சேர்ந்தே பகிர்ந்து கொள்வதுதான் இது நாள் வரை பழக்கம்.  முதன் முறையாய் அண்ணனை அழைத்துக் காட்டாமல் மறைந்து விடுகிறான்.  தான் மட்டும் ரசிக்கிற பேராசை.  திலோத்தமையின் அழகை பகிர்ந்து கொள்ள கோழை கூட உடன்பட மாட்டான்!

‘அண்ணன் பார்த்துவிட்டால் – பொக்கிஷம் இருவருக்கும் பொதுவானதாக அல்லவா மாறிவிடும்.  தான் மட்டும் அனுபவிக்க என்ன வழி?’- அருகிலிருக்கும் அண்ணனை பொறாமையாய் பார்க்கிறான்.

அதற்குள் கந்தனும் திலோத்தமையை பார்த்து விட்டான்.  அவனுக்குள்ளும் இதே நிலை.  எதுவாக இருந்தாலும் – உரிமை அதிகமுள்ளவன் பெரியவன்தானே.

“தம்பி உபகந்தா, அதோ பார் என் மனைவி..”

இதுவரை அழகான பெண்களை ‘நம் மனைவி’ என்று சேர்ந்தே உரிமை கொண்டாடியவர்களின் பேச்சில் ஒருமை குடியேறியது.  “நான் அவளை ஏற்கெனவே பார்த்துவிட்டேன்.  அப்போதே என் மனைவியாக வரித்து விட்டேன்.  எனக்கு மனைவி என்றால் அண்ணன் உனக்கு மகளுக்குச் சமமானவள்” என்றான் உபகந்தன்.

ஒருமுறை கண்ணால் பார்த்ததற்கே அண்ணன் தம்பிக்குள் பகை வளர்ந்து விட்டது.  மலர் கொய்து கொண்டிருக்கிறாள்.  திலோத்தமை.  இனி நாட்டியத்துக்கு என்ன தேவை?

கந்தனும் உபகந்தனும் ஒருவரை யொருவர் தாக்கத் தொடங்கி விட்டனர்.  ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிற சத்தம் இடி முழக்கம்போல் கேட்கிறது.  பூலோகமே அதிர்கிறது.  தேவர்கள் மேகத்துக்குப் பின்னால் மறைந்து நின்று இந்தக் காட்சியைப் பார்க்கின்ற னர்.  மனசு மகிழ்ச்சியில் கூத்தாடு கிறது.  ஓரக்கண்ணால் திலோத்தமை யையும் பார்த்துக் கொள்கின்றனர்.

மது புகட்ட ஒருத்தி, மாமிசம் ஊட்ட ஒருத்தி, மடியை அலங்கரிக்க ஒரு கன்னி, பசிக்கிற உதடுகளுக்கு விருந்தாக ஒரு கன்னி என்று இன்பத்தில் மிதந்த இருவருக்கும் திடீரென என்ன ஆயிற்று? கேள்வியைச் சுமந்தபடி நிற்கிறாள் திலோத்தமை.

உக்கரமான தாக்குதல்! இருவரும் ஒரே மாதிரியான போர்ப்பயிற்சி பெற்றவர்கள் என்பதால் ஒரே மாதிரியாகவே தூக்குகின்றனர்.  சந்தனுக்கு நெஞ்சில் அடிவிழுந்தால் அதே நேரம் உபகந்தன் நெஞ்சில் அடிவிழுகிறது.  உபகந்தன் வைத்த குறி தவறும்போது கந்தன் வைத்த குறியும் தவறுகிறது.

சற்றைக்கெல்லாம் கந்தனும் உபகந்தனும் ஒரே நேரத்தில் பிணமாகச் சரிகின்றனர்.  மது ஓடிய விந்திய மலைச்சாரலில் உதிரம் ஓடுகிறது.  நாட்டியமாடிய பெண்கள் என்ன ஆனார்கள்?

மூன்று லோகத்தையும் அடிமைப்படுத்தி வைத்திருந்த வீரர்கள் வீழ்ந்து விட்டார்கள்.  இந்திரனுக்கு மறுபடியும் பறிபோன பதவி கிடைக்கப் போகிறது.  வெகுநாளாய் நின்று போயிருந்த ஊர்வசி நடனத்தைப் பார்க்கலாம்.

அதிர்ந்து நிற்கிறாள் திலோத்தமை.

“பயப்படாதே திலோத்தமை” என்ற குரல் கேட்கிறது.  திரும்பிப் பார்த்தால் பிரம்மா புன்னகையோடு வருகிறார்.

சாவு நடந்த இடத்தில் இவருக்கு எப்படித்தான் சிரிக்க வருகிறதோ!

“உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் திலோத்தமை..”

“வரம்? எதற்கு…”

“நான் நினைத்தப்படியே அவர்களைச் சாகடித்து விட்டாயே..”

“நான் சாகடித்தேனா..இல்லையே.. நாட்டியம் கூட இனிதான் ஆடவேண்டும்…”

“உன் அழகைப் பார்த்ததும் – உன்னை யார் அடைவது என்ற போட்டியில், இருவருமே இறந்துவிட்டனர்.  உன்னை பூலோகத்துக்கு நான் வரச் சொன்ன காரியம் நடந்தேறிவிட்டது.”

“இவர்கள் மரணத்துக்கு என் அழகு காரணமா? அழகு என்ன உயிர் குடிக்கிற விஷமா?”

“அப்படி ஏன் நினைக்கிறாய்? தேவர்களுக்கு மீண்டும் சந்தோஷத்தை பெற்றுத் தந்தது உன் அழகுதான் என்று கர்வப்படு.  நீ இல்லை என்றால் நாங்கள் நிரந்தர அடிமைகளாகியிருப்போம்..”

“உங்கள் ஆதாயத்திற்காக என்னை வஞ்சித்து விட்டீர்கள்.  அப்படித்தானே..”

“நிச்சயமாக இல்லை திலோத்தமை. அவர்களின் அராஜகம் எல்லை மீறிப் போனது.  அவர்களை அழிக்கத்தான் பேரழகுடன் உன்னை படைத்தோம்.  எங்கள் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறாய்.  அந்த சந்தோஷத்தின் பரிசாகத்தான் வரம் கேள் என்கிறேன்..”

“உங்கள் வரம் எப்படிப்பட்டது என்பதைக் கண் எதிரில் பார்க்கிறேனே.  காற்றை உணவாய் குடித்து, உடம்பு சதையை எரித்து வாங்கி வரமே இதோ – பிணமாய் கிடக்கிறது.”

பிரம்மா பேச வார்த்தைகள் இன்றி நிற்கிறார்.  அதற்குள் தேவர்களும் வந்து சேர்ந்து விட்டிருந்தனர்.  அவர்களின் கண்கள் திலோத்தமையின் உடம்பைத் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன.

கடுந்தவம் புரிந்து வாங்கிய வரங்கள் சாபங்களாய் ஆனதாகத்தானே சரித்திரம் சொல்கிறது.  அந்த வரலாற்றை மாற்றினால் என்ன? மரவுரி தரிக்கவில்லை.  தவமும் இருக்கவில்லை.  வலிய வந்து வரம் தருகிறேன் என்கிறார் பிரம்மா.  விட்டுவிடலாம்.

“பூலோக வாசிகள் என் அழகால் வதைபடக்கூடாது.  எனவே அவர்கள் கண்களுக்கு நான் தெரியக்கூடாது.  விரும்பியபோதெல்லாம் தேவலோகத்தில் நான் நாட்டியமாட வேண்டும்.  தேவர்களின் மூச்சுக் காற்றும் என்மீது படக்கூடாது.”

“தந்தேன்…” என்கிறார் பிரம்மா.

“ஒருவேளை பட்டுவிட்டால்?” இந்திரன் கேட்டான்.

பதில் சொல்லாமல் திலோத்தமை சிரித்தாள்.  அந்த சிரிப்பு திகிலை ஏற்படுத்தியது.

திலோத்தமை நடந்து வந்தாலே தேவர்கள் அத்தனை பேர் நெஞ்சிலும் காமத்தீ பற்றிக் கொள்கிறது.  அழகை மறைக்க இயலாமல் ஆடை தோற்றுப் போகுமளவுக்கு அவள் நாட்டியமாடினால்?

தேவர்களை சிதைக்க வேண்டும் என்பதற்காகவே தினமும் ஒப்பனை செய்கிறாள்.  தேவர்களின் சித்தம் கதிகலங்க நாட்டியமாடுகிறாள்.

ஓற்றைச் சூருள் கூந்தல் ஆடுகிறது.  உச்சியில் போட்டிருக்கும் ஒய்யாரக் கொண்டை ஆடுகிறது.  கள்ளைவிட போதையான கண்கள் ஆடுகிறது.  அவள் கைவிரல்கள் ஒவ்வொன்றும் ஆடுகிறது.  கச்சை மீறி திரட்சியான கவிதை ஆடுகிறது. கால்களுக்கு மேலே இரு குடங்கள் ஆடுகிறது.  இடுப்பு என்ற பெயரில் தேள் கொடுக்கு ஆடுகிறது.

தழுவத்தூண்டும் பேரழகு தளுக்கு நடை பயில்கிறது.  ‘ஐயோ ஐயோ’ என்று துடி துடிக்கின்றனர்.  தேவர்கள்.  திலோத்த மையைத் தொட்டால் உடம்பு முதுமையாகும் என்ற பேச்சு மெய்யோ பொய்யோ.

பரீட்சைக்கு யாரும் தயாராக இல்லை.

அவள் அழகு – சாவே கிடையாத தேவர்களை .. தினமும் சாகடித்துக் கொண்டிருக்கிறது.