அத்தியாயம்- 5

ந்த நேரத்திலும் ஊர்வசி சூரியனை நன்றியோடு பார்த்ததற்குக் காரணம் இருக்கிறது.  சூரியன் மட்டும் சாபம் தரவில்லை என்றால் ஊர்வசி பூலோகத்துக்கு வந்திருக்கப் போவதில்லை.  அவள் அழகைப் பார்த்த அரக்கர்களுக்கு அவளை அனுபவிக்கும் ஆசை ஏற்பட்டிருக்காது.  அவளைக் கடத்திக் கொண்டு போகும் முயற்சியிலும் இறங்கியிருக்க மாட்டார்கள்.  அவளும் காப்பாற்றுங்கள் என்று கத்தியிருக்க மாட்டாள்.  அபயக் குரல் கேட்டு உதவுவதற்காக புரூரவசு வந்திருக்க மாட்டான்.

அரக்கர்களை தனியொருவனாய் நான்கு திசைக்கும் பந்தாடிக் கொண்டிருக்கும் புரூரவசுவை இமைக்காமல் பார்த்துக் கொண்டி ருக்கிறாள் ஊர்வசி.  அவன் உடம்பின் ஒவ்வொரு உறுப்பிலும் வீரம் முறுக்கிக் கொண்டு நிற்கிறது.  என்ன அழகு! எத்தனை பராக்ரமம்!

தேவலோகத்திலும் இருந்தார்களே ஆண் என்று சொல்லிக் கொண்டு, ஆண் மகனின் இலக்கணம் இதுவென்று இந்திரனை அழைத்துக் காட்டினால் என்ன வென்று கூட ஊர்வசிக்குத் தோன்றியது.  அதை ஆமோதிப்பது போல் அவள் வளர்க்கும் இரண்டு ஆடுகளும் ‘ம்மே’ என்றன.

புரூரவசுவின் கையிலுள்ள ஒரு கதைக்கு  பதில் சொல்ல முடியாத அரக்கர்கள், தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடுகிறார்கள்.  அந்தக் காட்சியைப் பார்த்த ஊர்வசிக்கு , ‘தகதகிட தகதகிட’ என்று மிருதங் கத்தில் கண்ட நடை வாசிக்கும்போது ஆடத் தெரியாதவள் ஆடுவ தாகப் படுகிறது.  அவள் கைகள் இரண்டும் மார்போடு அணைந்தபடி ஸ்வஸ்திக் முத்திரை காட்டி நிற்கிறது.  முகத்தில் பயம் உறைந்து கிடக்கிறது.

அரக்கர்களை விரட்டியடித்த புரூரவசு , ஊர்வசி பக்கம் திரும்பி, ‘இன்னும் பயம் போகவில்லையா?” என்று கேட்கிறான்.

பதில் சொல்லத் தெரியாத ஊர்வசி மார்புக்குக் குறுக்காய்க் கட்டி யிருந்த கையை விலக்கினாள்.  நான் பயப்படவில்லை என்பது போல!

அடேயப்பா!

புரூரவசுவால் கண்களை வேறு பக்கம் திருப்ப முடியவில்லை.  தோல்வியே அறிந்திராத அவன் முதல் முறையாய் தோற்கிறான்.  பெண்களின் அழகின் முன் தோற்பதில் இத்தனை சுகம் இருக்கிறதா?

ஊர்வசிக்கு அவன் கண்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது தெரியாமலில்லை.  ஏனோ அவனிடமிருந்து அழகை மறைக்க வேண்டுமென்று தோன்றவில்லை.

ஆசைதீர விழுங்கட்டும் என்று கண்களால் கால் பெருவிரலைப் பார்த்தபடி நிற்கிறாள்.

தவிட்டுக் குருவியொன்று ‘டுக்விக்’ என்கிறது.  அவர்கள்  நின்ற இடம் அழகான சோலை.  பலவகை பூக்களும் பூத்துக் கிடக்கின்றன.  காற்றிலே கதம்ப வாசம் வீசுகிறது.  ஊர்வசியின் காதோரம் அலையும் கூந்தலிடம் அது என்னவோ சேதி சொல்லியிருக்க வேண்டும்.

மெல்ல புரூரவசுவைப் பார்க்கிறாள்.  அந்தப் பார்வையிலே அசுரர்களிடமிருந்து காப்பாற்றியதற் கான நன்றி இருந்தது.

புரூரவசு கண்களால் ‘அருகில் வா’ என்கிறான்.

மகுடிக்கு மயங்கிய பாம்பு போல் புரூரவசுவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறாள் ஊர்வசி.  வழக்கமான அவள் நடையிலே ஒரு கம்பீரம் இருக்கும்.  ‘இன்று சிருங்காரம் தான் இருந்தது. தகதிமி தகதிமி என்று சதி பிசகாமல் நடக்கிறாள்.  இப்போது நான் காதல் மேலா நடந்து கொண்டிருக்கிறேன்?”

அவளுக்குள்ளேயே கேள்வி கேட்டாள்.

‘ஆமாம்’ என்றே பதில் வந்தது.

‘நீ எச்சில் பண்டம் ஊர்வசி, சுத்தமான வீரன் தினம் இந்த எச்சில் உணவையா உண்ண வேண்டு மென விரும்புகிறாய்?  மனசு என்றிருந்தால் காதல் ஏற்படத்தான் செய்யும்.  என்றாலும் காத லுக்குப் பரிசாக எதைத் தரப்போகிறாய் ? இந்திரனும் ஏனைய கந்தர்வர்களும் உன் மேனியில் ஏற்படுத்திய வடுக்களையா? மனசு கேட்டது.

இதுவரை நாணத்தால் சிவந்திருந்த ஊர்வசியின் முகம் விரக்தியில் வெளிறிற்று.  நடை தளர்ந்து நின்றாள்.  மனதிலிருந்த காதல் உணர்வைப் பிடித்து வெளியே தள்ள வழி தேடினாள்.

“இன்னுமா பயம் உன்னைவிட்டுப் போகவில்லை? ஏன் முகமெல்லாம் இப்படி வெளிறியிருக்கிறது? பயப்படாதே.  நான் இருக்கிறேன்.” என்றவன் அருகில் வந்து அவள் கையைப் பற்றினாள்.  என்ன துணிச்சல்!

‘நான் அழுக்கானவள்.  என்னைத் தொடாதீர்கள்’ என்று மனசு ஓலமிட்டாலும் – உதடு மௌனம் காத்தது.

“என்னைத் தோற்கடிக்க எவருமில்லை என்ற இறுமாப்பைத் தகர்த்த உன் பெயரென்ன?” என்று கேட்டான்.அந்த வீரனுக்குள்ளிருந்து இத்தனை மிருதுவான குரலை அவள்  எதிர்பார்க்கவில்லை.

தடுமாறினாள்.  தன்வசம் இழந்தாள்.

“கையை விடுங்கள்” என்றாள்.  அதற்காக விடுவித்துக் கொள்ள முயலவில்லை.

“பெயர் கேட்டேனே?”

“பூலோகத்தில் , முன்பின் தெரியாத பெண்ணை கையைப் பிடித்துதான் பெயர் கேட்பீர்களா?”

“அப்படியானால் நீ…”

“தேவலோக நர்த்தகி , ஊர்வசி.”

ஊர்வசி என்ற ஒற்றை வார்த்தையில் அவன் உயிர் கரைந்தது.

“எனக்கொரு வரம் தருகிறாயா ஊர்வசி?”

“நானே சபிக்கப்பட்டவள்.  நான் வரம் தரவேண்டுமா?”

“முடியாது என்று சொல்லிவிடாதே.”

“எனக்காக உயிரைப் பணயம் வைத்த உங்களுக்கு எப்படி மறுப்பு சொல்ல முடியும்? என்னால் என்ன வரம் தர முடியும்? என்னிடம் எல்லோரும் விரும்புகிற இந்த உடம்பு வேண்டுமா?”

“உன் மனசு வேண்டும்.”

“என் மனசையா கேட்கிறீர்கள்?” கேட்கும்போதே அவள் கண்ணிலிருந்து கண்ணீர் சாடியது.

“ஏன் ஊர்வசி…தப்பாக கேட்டுவிட்டேனா?”

“யாரும் கேட்காததை கேட்டுவிட்டீர்கள்.  என்னிடம் பழுதுபடாமல் இருப்பது அது மட்டும்தான்.  இப்படியொரு வீரபுருஷனுக்கு அதைத் தருவது சந்தோஷம்தான்.  ஆனால் நான் தேவலோக தேவதாசி?”

“நீ சரியென்று சொல் ஊர்வசி.  இந்த பூலோகத்துக்கு மகாராணி ஆக்கிவிடுகிறேன்.  எனக்கு பத்தினியாக சம்மதம்தானே?”

“ஒருவனுக்க மட்டுமே முந்தி விரிக்கவேண்டும் என்று ஏங்காத வேசியர் கிடையாது வீரரோ?”

“என் பெயர் புரூரவசு ..”

“அதைவிட வீரர் என்ற பெயர் அழகாய் இருக்கிறது.  பொருத்தமாகவும் இருக்கிறது..”

” பூலோகத்திலேயே இருந்து விடுகிறாய் அல்லவா?”

“முடியாது என்றால்?”

“என் உயிர் உன்னோடே வரும்.”

“நாம் படுக்கையில் சந்தோஷமாக இருக்கும் நேரத்தைத் தவிர, என்முன் எப்போதுமே நீங்கள் நிர்வாணமாக வரக்கூடாது என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால் சம்மதம்”என்றாள்.

“இந்த விசித்திரமான நிபந்தனைக்குத் தலையாட்டிய புரூரவசு, “ஊர்வசி, நீ விரும்பினால் விடை சொல்லலாம்.  ஏன் இப்படி ஒரு நிபந்தனை?” என்று கேட்டான்.

ஊர்வசி தர்ம சங்கடத்தில் நெளிந்தாள்.  அதைப் பார்த்த புரூரவசு  “சொல்லித்தான் ஆக வேண்டுமென்றில்லை ஊர்வசி.  அதை மறந்து விடுவோம்.  அதோ பார்.  எத்தனை அழகாய் தடாகத்தில் பூத்துக் கிடக்கிறது தாமரைப் பூக்கள்.  அதன் அருகில் நீரிலே காலை நனைத்தபடி பேசி கொண்டிருக்கலாம் வா, உனக்கு பிடிக்கும்தானே!”

“இனி எனக்கென்று தனிப்பட்ட விருப்பம் கிடையாது வீரரே.”

“அப்படியா” என்றவனின் ஒரு கை அவள் இடையை வளைத்துக் கொண்டது.

தடாகத்தை நோக்கி நடந்தார்கள்.  அவனுடைய இன்னொரு கை இடுப்பிலே கட்டியிருந்த ஆடை நழுவாமல் பிடித்திருந்தது.

இந்திரன் தூங்கி பல இரவுகள் ஆகிவிட்டன.

ரம்பையும், மேனகையும், திலோத்தமையும் தாங்கள் கற்ற வித்தையெல்லாம் காட்டித்தான் பார்க்கிறார்கள்.  இந்திரனுக்கு ஊர்வசியின் ஆட்டத்தைப் பார்த்ததுபோல் இல்லை.

பூலோகத்தில் புரூரவசுவை திருமணம் செய்து கொண்டு தங்கிவிட்ட ஊர்வசியை இந்திரலோகத்துக்கு மறுபடியும் வரவழைக்க என்ன வழியென்று யோசித்தான்.

கந்தர்வர்களை அழைத்து, “நீங்கள் என்ன செய்தாலும் சரி, ஊர்வசி இங்கு வந்தாக வேண்டும்.” என்றான்.

மன்னவன் கட்டளை, மறுக்கவா முடியம்?

கந்தவர்கள் பூலோகத்துக்குப் புறப்பட்டனர்.

குரு நாடு, அந்தப்புரத்திலே கணவன் புரூரவசுவின் வருகைக்காகக் காத்திருக்கிறாள் ஊர்வசி.

கால்களில் கடல் முத்துக்களால் ஆன சிலம்பு, கைகளிலே யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட வளையல், இடையிலே மேகலை, கழுத்திலே புரூரவசுவுக்குப் பிடித்தமான கொன்றைப்பூ மாலை என்று என்னதான் அலங்காரத்துடன் இருந்தாலும் அவள் உதட்டில் பிறந்த புன்னகைதான் அத்தனைக்கும் மகுடமாய் இருந்தது.

மஞ்சத்திலே அவள் சாய்ந்திருந்த கோலம் – தூங்கலாம் என்ற உத்தேசத்துடன் வருபவனையும் பசியெடுக்க வைக்கும்.

வாசலுக்கு வெளியே நின்று ஊர்வசியின் வாசனைத் தைலம் தடவிய தேகத்தையே வெறித்துக் கொண்டிருந்தான் கந்தர்வத் தலைவன் சித்ரரதன்.

தேவலோகத்தில் இருந்தவரை ‘ஊர்வசி’ என்ற ஒற்றைச் சொல்லால்தான் அழைத்துப் பழக்கம்.  இன்று குருநாட்ட மன்னனின் மனைவி, தேவலோக இந்திராணி போல் பூலோகத்தின் மரியாதைக்குரியவள்.

“மகாராணி”என்று அழைக்கிறான்

‘இந்தக் குரலை இதற்கு முன் எங்கேயோ கேட்டிருக்கி றோமே என்று யோசித்தப்படியே திருப்புகிறாள்.  சித்ரரதன் நிற்கிறான்

இதுவே தேலோகத்தில் என்றால் தாம்பூலம் மடிததுத் தந்து வரவேற்றிருக்க வேண்டும்.  வந்தவன் கை தொடக்கூடாத இடத்தை எல்லாம் உரிமையாகத் தொடும்.

மகர யாழின் தோற்றத்தைப் போல் அமர்ந்திருந்த ஊர்வசி அதே நிலையில் இருந்தபடியே, “என்ன” என்கிறாள்.  குரலிலே மிடுக்கு இருக்கிறது.

“நம் அரசர் இந்திரன் உங்களை அழைத்து வரச் சொன்னார்.”

“உன் அரசனிடம் போய், நடனமாட இனி ஊர்வசி அமராவதி நகருக்கு வரமாட்டாள் என்று சொல்.  உன் அரசனைப் போன்றவர்களால் பத்தினிகள் கணிகைகள் ஆனதுண்டு.  என் மன்னனைப் போன்றவர்களால் கணிகையும் பத்தினியாக முடியும் என்கிற தகவலையும் மறக்காமல் போய்ச் சொல்” என்றாள்.

“நீங்கள் இல்லாமல் தேவலோகம் போக முடியாது அரசி.”

“இங்கேயே தங்கி விடுங்கள்.  அவரிடம் சொல்லி அரண்மனையில் ஏதேனும் வேலை போட்டுத் தரச் சொல்லுகிறேன்.  நீதான் பாடுவதில் சமர்த்தனமாயிற்றே.  அவர் துயில் கொள்வதற்கும், திருப்பள்ளி எழுவதற்கும் பாடலாமல்லவா?”

‘ஊர்வசி இப்படி பேசியிருக்க வேண்டாம்தான்.  அவளுக்குள் இருந்த ஆறாத ரணம் இப்படி பேசத் தூண்டிற்று.  இதே சித்ரரதன் முன்னாலும் எத்தனையோ இரவுகள் அவன் விரும்பியபடியெல்லாம் நடனமாடியிருக்கிறாளே!

திரும்பி வந்தால் ஊர்வசியோடுதான் வருவோம் என்று சூளுரைத்துச் சென்ற கந்தர்வர்கள் வெறுங்கையோடு வந்து, இந்திரன் முன் வெட்கித் தலை குனிந்து நின்றனர்.

“என்ன நடந்தது சித்ரரதா?” இந்திரன் கேட்டான்.

“நாம் போய் அவளுக்கு அடிமை வேலை செய்ய வேண்டுமாம்.”

“அத்தனை தூரம் போய்விட்டதா?” என்ற இந்திரன் ஊர்வசியைக் கொண்டுவந்து நாட்டியமாட வைக்க என்ன வழி என்று யோசிக்கிறான்.  அவன் கைகள் பாச்சிகையை உருட்டுகின்றன.

அஸ்வினி தேவர்கள் இந்திரன் எதிரிலிருந்தத மதுக் கோப்பையில்  மது குறையாமல் பார்த்துக் கொண்டனர்.

“தேவலோகத்தின் பிரதான உணவான அமுதம் உன் இதழ்களைப் போல் சுவையாக இருக்குமா!”   என்று ஊர்வசியிடம் கேட்டான் புரூரவசு .

பதில் எங்கே சொல்ல விட்டான்.

சமுத்திரத்திலே மூழ்கி முத்துக் குளிப்பவர்கள் முத்து அகப்படுமா என்று கைகளால் துழாவுவதைப் போல் புரூரவசுவின் கைகள் ஊர்வசியின் ஆடைக்குள் துழாவிக் கொண்டிருந்தன்.

மேலாடை முழுவதையும் இழந்துவிட்ட ஊர்வசி புரூரவசுவின் மார்பையே ஆடையாக்கிக் கொண்டாள்.

ஏற்கெனவே அவர்கள் இருவருக்குள்ளும் எரிந்து கொண்டிருந்த நெருப்பு இந்தத் தழுவலால் இன்னும் அதிகரித்தது.  அவர்கள் உடுத்தியிருந்த ஆடைகள் கேட்பாரற்றக் கிடந்தன. காற்று அவைகளை தன் காலால் உதைத்து விளையாடியது.

ஒவ்வொரு படிக்கட்டாகக் கடந்து – சொர்க்கத்தின் கதவை அப்போதுதான் தட்டத் தொடங்கியிருப்பார்கள்.  ஊர்வசி பெற்ற பிள்ளையைப் போல் பாசமுடன் வளர்த்து வரும் இருண்டு ஆடுகளும் தீனமாய்க் கத்திற்று.

ஊர்வசி பிடித்து எறிய இன்ப நூலேணி அறுந்து விழுந்தது.

“ஐயோ! என் ஆடுகளுக்கு என்னாயிற்று? போய் பார்த்து விட்டு வாங்களேன்.”

ஒரு நாழிகை நேரமாய் பயணித்து இன்னும் ஒரு சில இமைப் பொழுதுகளில் சொர்க்கம் வசப்பட்டு விடும் நிலையில் எழுந்துபோக எவனுக்கு மனசு வரும்?

புரூரவசு சொர்க்கத்தின் கதவையே தொடர்ந்து தட்டிக் கொண்டிருந்தான்.

ஊர்வசிக்குக் கோபம் வந்தது.

உயிரினும் மேலான ஆடுகளை எவனோ திருடன் கவர்ந்து போகிறான்.  அதை மீட்காமல் இன்பம் பெரிதென்று கிடக்கிறாரே.  நல்லதுக்கோ, கெட்டதற்கோ – வாயில் வார்த்தை வந்துவிட்டது. “நீயும் ஒரு வீரனா?” என்று கேட்டுவிட்டாள்.

புரூரவசுவுக்கு சுரீர் என்று சுட்டது.  “ஆடுகளைக் கவர்ந்து விட்டுவிட்டு அந்தத் திருடர்கள் ஓடிவிட்டார்கள். ஆடுகளைப் பிடித்து வந்து மீண்டும் அதே இடத்தில் கட்டிவிட்டு ஊர்வசியை நோக்கி வருகிறான்.

அவள் ஆடையெல்லாம் மாற்றிக் கொண்டு வந்து முல்லைக் கொடியொன்றின் பக்கத்தில் நிற்கிறாள்.

அம்மனமாய் நடந்து வருகிறான் புரூரவசு , அதை ஊர்வசி பார்த்துவிட்டாள்.  ‘சம்போக நேரம் தவிர மற்ற நேரங்களில் நிர்வாணமாகப் பார்த்தால் உன்னைவிட்டு தேவலோகம் போய்விடுவேன்’ என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

குடி கெட்டது.

தலையிலே கை வைத்து உட்கார்ந்து விட்டாள் ஊர்வசி.  அப்போதுதான் அவளுக்கப் புரிந்தது.  ஆடுகளை சமயம் பார்த்துத் திருடியது இந்திரனின் ஏற்பாட்டில் நடந்திருக்கிறது என்பது.

“என்ன ஆயிற்று ஊர்வசி” கணவனை காவு கொடுத்த மனைவிபோல் நிலைகுலைந்து போய் இருக்கிறாய்?”

“உங்களை இழந்துவிட்ட பிறகு எப்படி என்னால் சந்தோஷமாக இருக்க முடியும்?”

“என்னை இழந்தாயா? நன்றாகக் கண்ணை திறந்து பார்.  நான் முழுசாக நிற்கிறேன்..”

“ஆனால் இந்தப் பாவி விதித்த நிபந்தனையை மீறிவிட்டல்லவா வந்திருக்கிறீர்கள்…”

ஊர்வசி கேட்ட பிறகுதான் தான் நிர்வாணமாக நின்று கொண்டிருப்பதை பார்க்கிறான்.

“சாகும்வரை நாட்டியக்காரியாக இருந்து, காமுகன்களுக்கெல்லாம் விருந்தாக வேண்டும் என்பது என் விதி.  நான் பத்தினியாய் வாழ ஆசைப்பட்டால் எப்படி?”

சொல்லும்போது அவன் கன்னங்கள் கண்ணீரால் ஈரமாயிற்று,

“விடை கொடுங்கள் வீரரோ..”

“நான் உன்னைப் பிரியப் போகிறேனா.. நிச்சயம் இல்லை.  நீ என்னை விட்டுப் போய்விடாதே.”

அது வரமோ சாபமோ – சொன்ன வார்த்தையை காப்பாற்றித்தான் ஆக வேண்டும்.  நான் ஒரு அறியாதவள்.  இல்லையென்றால் என் தலையில் நானே நெருப்பள்ளிக் கொட்டுவேனா, அந்த நிபந்தனையை ஏன் விதித்தேனோ பாவி.

தேவலோகத்தில் என்னை அனுபவிக்க வருபவர்கள் எனக்கென்று ஒரு மனசு இருப்பதை எப்போதுமே நினைத்ததில்லை.  என் மாளிகைக்கு வருபவர்கள் உள்ளே நுழைந்ததுமே நிர்வாணமாகிவிடுவது பெரும்பாலும் வழக்கம்.  அப்போது எனக்கு ஏற்படுகிற அருவருப்பு இருக்கிறதே… உங்கள் மீதும் அந்த வெறுப்பு வந்து விடக்கூடாதே என்று சொன்னது -எனக்கே எதிராயிற்று..”

சொன்னவள் எழுந்து நடக்கிறாள்.  போக மனமில்லைதான்.  வாக்கை காப்பாற்றவில்லை என்றால் வாழ்க்கையில் வேறு என்ன இருக்கிறது… தலை நிமிர்த்துகிற மாதிரி?

கண்ணீரோடு நடக்கிறாள்.

“ஊர்வசி  ஊர்வசி” என்று அழைத்துக் கொண்டே பின் தொடர்கிறான் புரூரவசு.

“தேவலோகத்தில் யாரோடு படுக்கையில் புரண்டாலும் உங்களோடு இருப்பதாகத்தான் நினைப்பேன்.  மனசுக்குள் உங்களுக்கு மட்டும் தான் இடம்.  நான் உங்களோடுதான் அங்கேயும் வாழ்ந்து கொண்டிருப்பேன்.  நம் பிள்ளை ஆயுவை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.  அம்மா இல்லை என்ற சோகம் தெரியாமல் அவனை வளருங்கள்.”

இந்திர சபையிலே இன்று விழா!

எந்த விசேஷமும் இல்லை.  ஊர்வசி வந்து விட்டாளே.  அவளை ஆட வைத்து ரசிப்பதுதான் விழாவின் நோக்கம்.

நாட்டிய அரங்கில் தேவர், கந்தர்வர், வித்யாதரர், கின்னரர், கிம்புருடர் என்று நிரம்பி வழிந்தது கூட்டம்.

முத்தும், மணியும் கொட்டி அலங்கரிக்கப்பட்ட பொன் ரதம்போல் வந்து நிற்கிறாள் ஊர்வசி.  நட்டுவனார் சித்திரசேனன் கிண்ணாரம் தட்டி – புஷ்பாஞ்சலி பாடுகிறான். ஆடுகிறாள் ஊர்வசி.

கால் சலங்கை கதறிற்று. மேகலை உருக்குலைந்திற்று.  சூடியிருந்த பூக்களெல்லாம் சிதறிற்று.

எத்தனை பொன் இழந்தாலும் சரி – இன்று இரவு ஊர்வசி அளகாபுரியின் அந்தப் புரத்தைத்தான் அலங்கரிக்க வேண்டும் என்ற முடிவோடு வந்திருக்கிறான் குபேரன்.

இந்திரனுக்கு சோமபானம் தரும்போது அதில் மயக்கும் ரசம் கலந்து படுக்க வைத்துவிட அஸ்வினி தேவர்களை குபேரன் விலைக்கு வாங்கிவிட்டதாகவும் பேச்சு அடிப்பட்டது.  இது இந்திரன் காதுக்கும் எட்டியிருக்கவேண்டும்

அவன் இன்று மதுவைத் தொடவே இல்லை.

அதுதான் ஊர்வசியை பார்த்தாலே போதை ஏறுகிறதே.

இப்போதெல்லாம் யார் ரசிப்பதற்கு என்று தெரியாமலே தினமும் ஒப்பனை செய்கிறாள்.  நாட்டியம் முடிந்து ஒப்பனை அறைக்கு வந்ததும் இன்று இவர்தான் என்று யாரோ ஒருவனை அழைத்து வந்து சித்திரசேனன் காட்டுகிறான்.  ஊர்வசிக்கு எவனெவனோடெல்லாமோ ஒவ்வொரு இரவும் கசக்கிறது.

தேவலோகத்தில் நர்த்தகியாய் இருந்த காலத்தில் பசித்தவர்களுக்கெல்லாம் விருந்தானவள்.  பூலோகத்தில் சிலகாலம் பத்தினியாய் வாழ்ந்தவள்.  தேவர்களின் சதிக்குத் தப்ப முடியாமல் மீண்டும் தேவலோக நர்த்தகியானாள்.  புரூரவசுவுக்க என்றாகியிருந்த அவளின் முந்தானை நடைபாதைக் கம்பளமாயிற்று.