காயல்பட்டிணம்

செண்டிரல் வங்கியின் காயல்பட்டிணம் கிளை வாடிக்கையாளர்கள் அதிகப் பணம் எடுக்க வேண்டாம் என ஆட்டோக்களில் விளம்பரம் அளித்துள்ளது.

நாடெங்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  தேசிய குடியுரிமை பதிவேட்டின் முன்னோடியாக இது அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுவதால் இஸ்லாமியர்கள் இடையே இது குறித்து கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில் செண்டிரல் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாளத்துக்கு தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரங்களை அளிக்க வேண்டும்  எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் காயல் பட்டினம் பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   இந்த பகுதியில் இஸ்லாமியர்களிடையே இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  அதையொட்டி இஸ்லாமியர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள தொகைகளை உடனடியாக எடுக்கத் தொடங்கி உள்ளனர்.  கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை இந்த வங்கிக் கிளையில் இருந்து ரூ.80 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது

இதையொட்டி அந்தக் கிளை அங்குள்ள ஆட்டோக்களில் அதிகம் பணம் எடுக்க வேண்டாம் என வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.  ஆயினும் நேற்றும் இதே நிலை தொடர்ந்ததால் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்குப் பதில் வேறு ஆவணங்களும் ஏற்கப்படும் என வங்கி அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பை காயல்பட்டணம் பகுதியில் 50 இடங்களில் பானர்கள் மூலம் விளம்பரம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.