தூத்துக்குடி:

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற காயல்பட்டினம் அரசு மருத்துவர், கொரோனா தொற்று குறித்தும், தான் டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை அரசுக்கு தெரிவிக்காமலும் தொடர்ந்து நோயாளிகளுக்கு  சிகிச்சை அளித்த வந்துள்ளார்.

இந்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டிய மருத்துவரே, இந்த செயலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது, அந்த மருத்துவவரை கண்டுபிடித்து அழைத்துச் சென்ற சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர், அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி உள்ளனர். இந்த மருத்துவர் இன்று காலை வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். தற்போது அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளதால்,  அவரால் சிகிச்சை பெற்ற மற்ற பொதுமக்களுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அந்த பகுதி மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.

ஏற்கனவே நெல்லை மாவட்டம் மேலப்பாளையம், தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், மேலும் பல ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் டெல்லி மாநாட்டில் பங்குபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 19 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த  கோடீஸ்வரன் நகரை சேர்ந்த 5 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தை சேர்ந்த டாக்டர் உள்பட 2 பேர் மற்றும் பேட்மாநகரை சேர்ந்த 2 பேர், தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர், கயத்தாறை சேர்ந்த ஒருவர் என்று 6 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களின் ரத்தம், சளிகள் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்  தங்கியிருந்த வீடுகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை தனிமைப்படுத்தி, கிருமி நாசினி தெளிப்பு பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.