காயல்பட்டினம்  : ரூ 10 லட்சம் மதிப்பிலான திட்டம் ஒரு கோடியாக மாற்றம்!

காயல்பட்டினம்

காயல்பட்டினத்தில் ஒரு சாலை அமைக்க போடப்பட்ட ரூ.9.6 லட்சம் மதிப்பிலான திட்டம் ரூ.1 கோடி என மாற்றப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் நகராட்சி பல இடங்களில் குடிநீர் குழாய் அமைத்சாலைகளை தோண்டியதால் சாலைகள் பாழாகின.  அதனால் புதிய சாலை மைக்க கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி 1414 என எண்ணிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதில் பொது நிதியில் இருந்து ஒரு கிமீ தூரமுள்ள பாஸ் நகர் சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.  இந்த திட்டத்துக்கு ரூ. 9.6 லட்சம் மதிப்பிடப்பட்டிருந்தது.

அதே சாலையை அமைக்க மீண்டும் கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை அமைப்பு திட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.    பழைய தீர்மானத்தின் மீது புதிய காகிதங்கள் ஒட்டப்பட்டு சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டு திட்ட மதிப்பீடு பத்து மடங்கு அதாவது ரூ. 1 கோடி என அதிகமாக்கப்பட்டுள்ளது.  ஆனால் தீர்மான எண் 1414 என்பது மட்டும் மாற்றப்படவில்லை.

முன்பு அறிவிக்கப்பட்ட பாஸ் நகர் சாலை மட்டும் என்பதற்கு பதிலாக மேலும் ஐந்து சாலைகள் இணைக்கப்பட்டு 1.5 கிமீ தூரத்துக்கு ரூ. 1 கோடி என அறிவிப்பின்றி மாற்றப்பட்டது.    அந்நகர பிரமுகர் முகமது சாலிகு என்பவர் தார் ரோட்டுக்கு பதில் சிமிண்டு பேவர் பிளாக்குகள் பதிப்பதைக் கண்டு கேள்வி எழுப்பி உள்ளார்.   அவரிடம் தமிழ்நாடு நகர்ப்புற சாலை அமைப்பு இந்த திட்டத்தை அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஒட்டி அவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு அந்த தகவலில் பாஸ் நகர் சாலை என மட்டும் குறிப்பிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.   இது குறித்து ”நான் முதலில் ஏதோ அச்சுப்பிழை அல்லது தொழில்நுட்ப தவறு என நினைத்தேன்.  அதன் பிறகு தான் இதில் ஊழல் உள்ளதாக எனக்கு சந்தேகம் வந்தது.   அதை ஒட்டி கூட்ட நிகழ்வு புத்தகத்தை சோதித்த போது முன்பு இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து தெரிய வந்தது.” என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நகராட்சியின் சிறப்பு அலுவலர் சுரேஷ், ”இது வெறும் சாதாரண எழுத்துப் பிழை.  இதை தேவை இல்லாமல் ஆர்வலர்கள் ஊழல் என கூறி விட்டனர்.  இது எழுத்துப் பிழை தானே தவிர எவ்வித ஊழலும் இல்லை.    முந்தைய தீர்மானத்தை நாங்கள் மாற்றியதால் அந்த எண்ணை மாற்றவில்லை. “ என தெரிவித்துள்ளார்.  நகராட்சி ஆணையர் கார்த்திகேயன் இது குறித்து கருத்து ஏதும் கூறாமல் உள்ளர்.

இது குறித்து காங்கிரஸ் நகராட்சி உறுப்பினர் சங்கர் கணேஷ், “தமிழகம் முழுவதும் இதுதான் நடைபெறுகிறது.  தீர்மானம் இல்லாமல் அல்லது வேறு தீர்மானத்தை மாற்றி புது வேலைகள் நடைபெறுகின்றன.  தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இது வெளிவந்துள்ளது.  இது போல ஏராளமான ஊழல்கள் வெளி வராமல் உள்ளது.    கூட்ட நடவடிக்கை புத்தகங்கள் வெளிப்படையாக அனைவரும் பார்க்கும்படி வைப்பதில்லை.  அதை அனைவரும் பார்க்கும்படி வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.