கஜகஸ்தான்: தனித்துவ கொரோனா வைரஸை விட ஆபத்தான “கண்டறியப்படாத நிமோனியா” பெரும் பரவலைக் கஜகஸ்தான் சந்தித்து வருவதாக சீன அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையைக் கஜகஸ்தானில் உள்ள அதிகாரிகள் மறுத்துள்ளனர். வியாழக்கிழமை, கஜகஸ்தானில் உள்ள சீன தூதரகம் மத்திய ஆசிய நாட்டில் வாழும் குடிமக்களுக்கு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. அதன்படி இதுவரை கஜகஸ்தானில் பரவி வரும் நிமோனியாவிற்கு 1,700 பேர் வரை இறந்துள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது. மேலும், “கஜகஸ்தான் சுகாதாரத் துறை மற்றும் பிற நிறுவனங்கள் இதுகுறித்து ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன என்றும், இந்த நிமோனியா உண்டாக்கும் வைரஸ் பற்றி ஏதும் கண்டறியப்படவில்லை,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கஜகஸ்தான் நாடு முழுவதும் ஜூன் மாத மத்தியில் இருந்து இருந்து அடையாளம் தெரியாத நிமோனியாவினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்து வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் அதிகாரிகள் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான புதிய நோயாளிகளைப் பதிவு செய்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெளியான ஒரு அறிக்கையில், கஜகஸ்தான் சுகாதார அமைச்சகம் “காரணம் குறிப்பிடப்படாத வைரஸ் நிமோனியா” இருப்பதை ஒப்புக் கொண்டது. ஆனால் அது புதிய நோயா அல்லது பெருந்தொற்றா எனத் தெரியவில்லை என்று மறுத்துள்ளது. “இந்த அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, கஜகஸ்தான் குடியரசின் சுகாதார அமைச்சகம் இந்த தகவல்கள் முற்றிலும் தவறானது என மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று மருத்துவ ரீதியாகவோ அல்லது தொற்றுநோயியல் ரீதியாகவோ கண்டறியப்பட்டாலும், ஆய்வக சோதனை மூலம் உறுதிப்படுத்தப்படாதபோது, நிமோனியாவைப் பதிவு செய்வதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் “குறிப்பிடப்படாத” நிமோனியா வகைப்பாடு  வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டது. தூதரகத்தின் கூற்றுப்படி, இந்த எண்ணிக்கை உயர்வு அதிராவ், அக்டோப் மற்றும் ஷிம்கென்ட் ஆகிய பகுதிகளில் அதிகரித்து காணப்படுகிறது. இதுவரை பதிவு செய்துள்ள தகவல்களின்படி, கிட்டத்தட்ட 500 புதிய நோயாளிகள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட மோசமாக பாதிக்கப்படவர்கள் உள்ளனர். இதுவரை இந்த ஆண்டு இந்த நோயினால் 1,772 பேர் வரை இறந்துள்ளனர். அவர்களில் சிலர் சீனர்கள் என்று தூதரகம் தெரிவித்துள்ளது. அந்த 1772பேரில் சுமார் 628 பேர் ஜூன் மாதத்தில் இறந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், “இந்த நோய் கோவிட் -19 ஐ விட மிகவும் ஆபத்தானது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட தகவல்களை மேற்கோள் காட்டி கஜகஸ்தானின் முக்கிய செய்தி நிறுவனமான காசின்ஃபார்ம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தலைநகர் நர்சுல்தானில் நிமோனியா நோயாளிகளின் எண்ணிக்கை இதே காலத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஜூன் மாதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. “ஒவ்வொரு நாளும் 200 பேர் வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த சில நாட்களில் நிமோனியா நோய் கண்டறியப்பட்ட சுமார் 300 பேர் ஒரு நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் வீட்டிலேயே சிகிச்சைப் பெறுகிறார்கள்” என்று நர்சுல்தான் சுகாதாரத் துறையின் தலைவர் காசின்ஃபார்ம் தெரிவித்துள்ளார்.
இப்பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியே செல்லவும், கூட்டமுள்ள பகுதிகளில் நடமாடுவதைத் தவிர்க்கவும்  சீனத் தூதரகம் எச்சரிக்கை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளாக, முகக்கவசமணியவும், கிருமி நாசினிகளை உபயோகப்படுத்தவும், அடிக்கடி கை கழுவுதல் மற்றும் அறைகளில்  சுத்தமான காற்றோட்டமுள்ளவாறு பராமரிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.  இந்த பரவல் குறித்து கடந்த வார வெள்ளிக்கிழமை, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாங்கள் மேலும் தகவல்களைப் பெற முயற்சித்து வருகிறோம்.  தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், இரு நாடுகளின் பொது சுகாதாரப் பாதுகாப்பைப் பேணவும் கஜகஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவதை சீனா நம்புகிறது.” என்றார்.
கஜகஸ்தான் சுகாதார அமைச்சகம் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் அலெக்ஸி சோய் கடந்த வார வியாழக்கிழமை ஒரு மாநாட்டில் நாடு முழுவதும் பெருகி வரும் நிமோனியா நோயாளிகளின் எண்ணிக்கைக் குறித்து கவலைத் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிமோனியாவில் பல்வேறு வகையான பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் நிமோனியா ஆகியவையும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது – இதில் சிலவை “காரணம் அறியாதவையும்” அடங்கும். கடந்த ஆண்டு இதே காலம், 7,964 ஆக இருந்த நிமோனியா நோயாளிகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 32,724 ஆக உள்ளது. 2019 ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, நாட்டில் பதிவுசெய்யப்பட்ட நிமோனியா நோயாளிகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 300% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன என்று அமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்புடைய இறப்பு சதவிகிதம் 129% வரை அதிகரித்துள்ளன.

கோவிட் -19 இன் பாதிப்புக்கு எதிராக கஜகஸ்தான் தொடர்ந்து போராடி வருவதால் தூதரகம் இந்த எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, கோவிட்-19 இதுவரை 53,021 பேரை பாதித்துள்ளது.  264 பேர் இறந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜகஸ்தானின் முதல் தலைவரும், நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய தலைவருமான நர்சுல்தான் நாசர்பாயேவ் அவர்களுக்கு கடந்த மாதம் கோவிட் -19 இருப்பது உறுதியானது.
இரண்டாவது சுற்று கொரோனா பதிப்பைக் கட்டுப்படுத்த ஜூலை 5 முதல் கஜகஸ்தானில் நாடு தழுவிய ஊரடங்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் வியத்தகு முறையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளின் கீழ், சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டன. சாலைப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என சீன அரசு நடத்தும் ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. கலாச்சார மையங்கள், விளையாட்டு திடல்கள், சினிமா அரங்குகள் மற்றும் அழகு நிலையங்கள் இன்னும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். நாட்டின் சுகாதார அமைச்சரின் கூற்றுப்படி, மருத்துவ ஊழியர்கள், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் அவசரகால பொருட்களுக்கான தேவை இப்போது அதிகரித்து வருகிறது. நிலைமை மோசமடைந்துவிட்டால், கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கலாம் என்று அதிகாரிகள் பரிந்துரைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Thank you: CNN
Author: Jessie Yeung, Philip Wang and Martin Goillandeau, CNN