சென்னை:

மிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையை உருவாக்குவதில் முதன்மையானவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில், சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ராஜா, தமிழகத்தில் கழகங்கள் என்பது திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே என்று, அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் கிடையாது என்று கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

எச்.ராஜாவின் புதிய கண்டுபிடிப்பு குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தமிழகத்தில் திமுக தலைமையில், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல கட்சிகள் இணைந்துள்ளது. அதுபோல அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தமாகா, புதிய தமிழகம் உள்பட பல கட்சிகள் இணைந்துள்ளன.

விஜயகாந்தின் தேமுதிக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்,  டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் போன்ற கட்சிகள் எந்த கூட்டணியிலும் சேராமல் 3வது அணி அமைப்பது குறித்து விவாதித்து வருகின்றன.

இந்த நிலையில், வார இதழுக்கு பேட்டியளித்துள்ள ராஜாவிடம் செய்தியாளர் தற்போதைய  பாஜக அதிமுக கூட்டணி, புல்வாமா தாக்குதல் உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். அதற்கு அவர் அளித்துள்ள பதில்கள் வருமாறு….

கேள்வி: பாஜ ஆட்சியில் பயங்கர வாதம் குறைந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தீர்கள். இப்போது, புல்வாமாவில் நடந்துள்ள பயங்கரவாதத் தாக்குதலுக்கு என்ன பதில்?

பதில்: ஒரே ஒரு சம்பவம்தான் நடந்திருக்கிறது. இதற்கு, உரிய பதிலடி கொடுக்கப்படும். அதை வெகு விரைவில் நீங்கள் பார்ப்பீர்கள்.

கேள்வி: மீண்டும் ஒரு ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா?

பதில்: அதை என்னால் சொல்ல முடியாது. அது மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு.

கேள்வி: கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்று பல ஆண்டுகளாக கோஷம் போட்டு வந்தீர்கள்… தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். உங்களின் கோஷம் என்னாச்சு?

பதில்:  அது தி.க., தி.மு.கவுக்கு மட்டும்தான் பொருந்தும்…   அ.தி.மு.க அதில் வராது. 

கழகம் என்பது ஒரு குறிப்பிட்ட கட்சி கிடையாது. தேச விரோத, இந்து விரோத, கடவுள் விரோதச் சித்தாந்தங்களைத்தான் கழகம் என்கிறோம்… என்று புதிதாக ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

கேள்வி: அதிமுகவை ஊழல் கட்சி என்று அமித்ஷா கூறினாரே… தற்போது அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே?

பதில்:  அமித்ஷா சொன்னது காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியை. அவர்,  அ.தி.மு.க-வைச் சொல்லவில்லை என்று பல்டியடித்தார்.

கேள்வி: ஜெயலலிதா, சசிகலா இருவரும் குற்றவாளிள் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறதே?

பதில்:  நாங்கள் கூட்டணி பேசுவது, எடப்பாடி தலைமையிலும் ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பி லும் இருக்கும் அ.தி.மு.க-வுடன்தான்.

ஜெயலலிதா குற்றவாளி அல்ல. சசிகலா, இப்போது அ.தி.மு.க-வில் இல்லை. நாங்கள் என்ன தினகரன் கட்சியுடனா கூட்டணி வைக்கிறோம்? என்று எதிர் கேள்வி கேட்டார்.

கேள்வி: உங்கள் கட்சியுடன் அ.தி.மு.க கூட்டுச் சேர்வதால், அ.தி.மு.க ஆதரவு சிறுபான்மையினர் வாக்குகள் பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறதே?

பதில்:  இந்துக்கள் அதிகம் இருக்கும் மூன்றாவதுப் பெரிய மாநிலம் தமிழ்நாடு. இங்கு உள்ள 89 சதவிகித மக்கள், இந்துக்கள். நாங்கள் அ.தி.மு.க-வுடன், தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தபோது, அந்தக் கூட்டணி ஜெயித்தது. எனவே, சிறுபான்மையினர் வாக்குகள் பாதிக்கப்படாது.

கேள்வி: பி.ஜே.பி-யை அ.தி.மு.க-வின் தம்பிதுரை கடுமையாக விமர்சித்து வருகிறாரே, என்ன பிரச்னை?

பதில்: பி.ஜே.பி பற்றி அவதூறாகப் பேசவே இல்லை என்று தம்பிதுரையே சொல்லிவிட்டாரே. ஆறிய புண்ணை எதற்கு மீண்டும் கிளற வேண்டும் என்று கூறி டாப்பிக்கை மாற்றி விட்டார்

கேள்வி: ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பேசினீர்கள்… தற்போது ஸ்டெர்லைட் பிரச்னையில் பி.ஜே.பி-யின் நிலைப்பாடு என்ன?”

பதில்: உச்ச நீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவே எங்கள் முடிவும். மத்திய அரசோ, மாநில அரசோ நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டியது அவர்களின் கடமை என்று தற்போதைய நிலைமைக்கு தகுந்தவாறு மாற்றிப்சேனிர்.

கேள்வி: அப்படியென்றால், சபரிமலைக்கு பெண்கள் செல்லாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பைச் செயல்படுத்திய கேரள அரசை ஏன் எதிர்க்கிறீர்கள்?

பதில்: இது, மதம் சார்ந்த பிரச்னை. இந்து மதத்துக்குள் சண்டை வரவேண்டும் என்று திட்டமிட்டே இந்த வழக்கைத் தொடர்ந்தனர். அப்படியென்றால், மசூதிக்குள் பெண்களை அனுமதிக்கலாமே.

கேள்வி: கஜா புயல் போன்ற பேரிடர் பாதிப்புக்கு தமிழகத்துக்கு மத்திய அரசு ஏதும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

பதில்: இதெல்லாம் எதிர்க்கட்சிகள் கிளப்பும் புரளி. கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஆறு லட்சம் வீடுகளில் மூன்று லட்சம் வீடுகள், பிரதம மந்திரி திட்டத்தில் கட்டித்தரப்பட உள்ளன. ஐந்தாண்டு களில், மோடி அரசு தமிழகத்துக்குக் கொடுத்த நிதி, ஐந்து லட்சத்து நாற்பத்து இரண்டாயிரம் கோடி ரூபாய் என்று பட்டியலிட்டார்.

கேள்வி: அதிமுக முதல்வரகளில்  யார் சிறந்த முதல்வர் – ஜெயலலிதாவா, ஓ.பன்னீர்செல்வமா, எடப்பாடியா?

பதில்: அது நமக்குத் தேவையே இல்லை. மோடி மீண்டும் பிரதமர் ஆவதை யார் ஆதரித்தாலும், அவர்கள் எங்கள் கூட்டணியில் இருப்பார்கள். தற்போதைய அ.தி.மு.க அரசு, மோடியை ஆதரிக்கிறது என்று பட்டும் படாமலும் பேச்சை முடித்துக்கொண்டார்.

 கேள்வி: சிவகங்கையில் போட்டியிடுகிறீர்களா?

பதில்: கட்சித்தலைமை சொன்னால், எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுவேன்.

இவ்வாறு ராஜா கூறினார்.

நன்றி: ஜூனியர் விகடன்