டெல்லி

காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த ம.பி.காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவை, காங்கிரஸ் தலைமை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கமல்நாத்துக்கும், காங்கிரஸ் இளந்தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில், சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அமைச்சரவையை மாற்றி அமைக்க முதலமைச்சர் கமல்நாத் திட்டமிட்டார். இதற்காக 20 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இந்த சூழலில் காங்கிரஸ் ஆட்சி மீது அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா இன்று காலை பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும்  சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு மத்தியப் பிரதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதையடுத்து, தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ஜோதிராதித்ய சிந்தியாவை காங்கிரஸில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் காரணமாக  மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.