ஐதராபாத்: நிவாரண நிதித் தொகுப்பு என்ற பெயரில் மத்திய அரசு வெளியிட்டுள்ள ரூ.20 லட்சம் கோடிகள் என்ற அறிவிப்பை மிக காட்டமாக விமர்சித்துள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.
கோவிட்-19 வைரஸ் பரவலால், தற்போது நடைமுறையில் உள்ள முடக்கத்தால் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி தரவேண்டிய பொறுப்பிலுள்ள மத்திய அரசு, நியாயமான நிதியைக்கூட தராமல் இழுத்தடித்து வருகிறது.
இந்நிலையில், ரூ.20 லட்சம் கோடிகள் மதிப்பிலான ஒரு விமர்சனத்திற்குரிய நிவாரண நிதித் தொகுப்பையும் அறிவித்துள்ளது. எனவே, இதுகுறித்து காட்டமாக விமர்சனம் செய்துள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.
அவர் கூறியுள்ளதாவது, “மாநிலங்களை பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது மத்திய அரசு. மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி நிவாரண நிதித் தொகுப்பு என்பது ஒரு ஏமாற்று வேலை, துரோகம். எண்களின் பித்தலாட்ட வேலை. மத்திய அரசு அதன் சொந்த மரியாதையைக் கெடுத்துக் கொண்டுள்ளது.
அது வெறுமையான ஒன்று மற்றும் 100% பித்தலாட்டமான ஒன்று. ஒரு மாநில முதல்வர் என்ற முறையில் எனக்கு இது வலி மிகுந்த ஒன்றாக உள்ளது. நான் மிகவும் வருந்துகிறேன். இது நடந்திருக்கக்கூடாது. இதை ஒரு நிவாரண நிதித் தொகுப்பாக நாம் கருத முடியுமா?
இந்த நிதித்தொகுப்பு என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது. இது கொடூரமானது மற்றும் நிலமானிய மனப்பான்மையிலானது. நாங்கள் இதுபோன்ற ஒன்றை கேட்கவில்லை” என்று சாடியுள்ளார்.