உத்தரகாண்ட்: கேதர்நாத் யாத்ரீகர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 10 லட்சத்தை எட்டும்

உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற புனித ஸ்தலமான கேதர்நாத் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நாடு முழுவதும் இருந்து யாத்ரீகள் வருகை புரிந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 2013ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கேதர்நாத் பலத்த சேதமடைந்தது. இதற்கு செல்லும் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் அழிந்தது. இவற்றை மீண்டும் புணரமைக்க பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து கேதர்நாத்துக்கு இந்த ஆண்டு வரும் யாத்ரீகள் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இது குறித்து பத்ரிநாத்-கேதர்நாத் கோவில் குழு செய்தி தொடர்பாளர் ஜாம்லோகி கூறுகையில்,‘‘ இந்த ஆண்டு இது வரை கேதர்நாத்துக்கு 7 லட்சம் யாத்ரீகர்களும், பத்ரிநாத்துக்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதற்கு முன்பு இவ்வளவு யாத்ரீகள் வருகை புரிந்தது கிடையாது.

அக்டோபர் இறுதியில் கோவில் மூடப்படுவதற்கு முன்பு யாத்ரீகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2013ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கையால் இந்த புனித ஸ்தலங்கள் மீதான மக்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளது’’ என்றார்.

இதற்கு முன்பு அதிகபட்சமாக 2012ம் ஆண்டில் 5.83 லட்சம் யாத்ரீகள் வருகை புரிந்துள்ளனர். வெள்ள பாதிப்பு காரணமாக 2014ம் ஆண்டில் 40,832 பேர் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர்.