கீழடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக விரைவில் அறிவிக்கப்படும்! அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்

சென்னை:

கீழடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி பகுதியில் நடைபெற்ற அகழ்வராய்ச்சியில், தமிழர்களின் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்ற வியப்பூட்டும் தகவல்கள்   வெளிப்பட்டு உள்ளன.  கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே  தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தது ஆய்வுகளின்போது கிடைத்த சான்றுகள் தெளிவுபடுத்தி உள்ளன.

இதன் காரணமாக,  கீழடியை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மத்தியஅரசு இதுவரை தமிழகத்தின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்து வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்,  அகழாய்வு நடைபெற்ற கீழடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஏன் இது அறிவிக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக இப்போதே, அறிவித்தால் அங்கு தொல்லியல் பணிகளுக்காக மீண்டும் தோண்ட முடியாது. இதுதவிர வேறெந்தப் பணிகளையும் அங்கு மேற்கொள்ள முடியாது. மேலும், அருகில் உள்ள தொழிற்சாலைகளையும் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ஆனார், 6வது கட்ட அகழ்வாய்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த அகழாய்வுப் பணிகள் முடிவடைந்ததும் இதுகுறித்து ஆலோசிக்கப்படும்.

அங்கு கிடைக்கும் பொரும்களைக் கொண்டு, அங்கு ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோதால் போல, திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால் தமிழக அரசே கீழடியில் தேவையான பகுதியை மட்டும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க முடியும், அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. இதற்காக மத்திய அரசை கேட்க வேண்டியதில்லை.

இப்போதைய சூழலில், கீழடியைப் பாதுகாப்பான பகுதியாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்பது சரியான கோரிக்கையாக இருக்காது என்று தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக கடந்த 20ந்தேதி மக்களவையில்,  மதிமுக உறுப்பினர் கணேசமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்தியஅரசு,  கீழடியை அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் தற்போது இல்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.