சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பணிக்கு, நர்சிங்க படித்து வரும் மாணவ மாணவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்க மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுடன் தொற்றுநோய் பிரிவு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளது. இருமல், சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, தேவைப்படும்போது கொரோனா தடுப்பு பணியில் நர்சிங் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தனியார் நர்சிங் கல்லூரிகளுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது.

அதில், ‘தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள் கொரோனா தடுப்பதற்கான விழிப்புணர்வு பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வார்டுகளில் நர்சுகள் பற்றாக்குறை ஏற்படும்போது, தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியர்களை, அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபடுத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

இந்த முக்கியமான கட்டத்தில் நர்சிங் துறையினர் மட்டுமே கொரோனாவை தடுப்பதில் முக்கிய அங்கம் வகிக்க முடியும்.

எனவே, தேவைப்படும் பட்சத்தில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களை அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய அனுப்பி வைப்பதற்கு தயார் நிலையில் இருங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.