கீழடி

மிழகத்தின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை மேற்கொண்ட முதல் 3 அகழாய்வில் கிடைத்த பொருட்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த அகழாய்வில் கிடைத்த அனைத்து பொருட்களையும், முறையாக ஆவணப்படுத்த வேண்டும் என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வலியுறுத்தி உள்ளார். அகழாய்வு நடைபெறும் கீழடிக்குப் பார்வையாளர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் ஓருசில இடங்களைப் பார்வையிடத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

கடந்த ஜூன் 13-ம் தேதி சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 ஆம்  கட்ட அகழாய்வு தொடங்கியது. சுமார் எட்டரை ஏக்கர் நிலத்தில் 52 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்ற இந்த ஆய்வில் சங்கு வளையல், இரும்புக் குண்டு,  உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.  கடந்த செப்டம்பர் 30ம் தேதியுடன் அகழாய்வு நிறைவு பெறவிருந்த நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தார்.

ஆனால்  தொடர்ந்து இந்த  அகழாய்வை நீட்டிப்பதில் அதிகாரிகளுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதையொட்டி  அகழாய்வுப் பணிக்கு வந்தவர்களை, வேலைக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். பணியாளர்கள் வேலை செய்ததற்கான ஊதியம் முழுமையாக வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் அகழாய்வைத் தொடங்கும்போது அழைப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்  இது குறித்துக் கூறுகையில் கீழடியில் கிடைத்துள்ள பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெறுவதால் தற்காலிக தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப் பட்டதாகத் தெரிவித்துள்ளார்.