உர்ஜித் படேல் ராஜினாமா : மோடியை தாக்கும் கெஜ்ரிவால்

டில்லி

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா குறித்த கருத்தில் பிரதமர் மோடியை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக தாக்கி உள்ளார்.

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. ரிசர்வ் வங்கியின் தனித்தன்மையில் அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வந்தன.

ரிசர்வ் வங்கியின் இருப்பு நிதியில் உள்ள பணத்தை மத்திய அரசு கேட்டதாகவும் அதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் மறுத்து விட்டதால் மோதல் அதிகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று சொந்தக் காரணங்களால் விலகுவதாக தெரிவித்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து பல தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், “ரிசர்வ் வங்கியின் இருப்பு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் கோடியை கொள்ளை அடிக்க மோடி உர்ஜித் படேல் அனுமதிக்கவில்லை என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இனி ரிசர்வ் வங்கி இருப்பு நிதியை கொள்ளை அடிக்க வசதியாக மோடிக்கு வளைந்து கொடுப்பவர் ஆளுநராக நியமிக்கப்படுவார்” என தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.