புது டெல்லி:
ருத்துவ பணியாளர்கள் தங்கள் சிரமத்தை சமூக ஊடகத்தில் முன்னிலை படுத்த கூடாது என்று டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. வியாழக்கிழமையான நேற்று ஒரு நாளில் மட்டும் 128 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2376 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 50 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 3வது மாநிலமாக டெல்லி உள்ளது. டெல்லியில் இதுவரை 808 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1518 பேர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வின்றி உழைத்து கொண்டிருந்தாலும், அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவர்கள் தங்கள் பிரச்சினைகளை, சமூக ஊடகங்களில் வெளியிட்டு, ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் அரவிந்த் கெஜிரிவால் தலைமையிலான டெல்லி அரசு, கொரோனா போர்வீரர்கள் தங்கள் பிரச்சினைகளை சமாளிக்க முயற்சிக்க வேண்டும், அதற்கு பதிலாக, தாங்கள் படும் சிரமங்களை சமூக ஊடகங்களில் வெளியிட கூடாது என்றும் அனைத்து சுகாதார வல்லுநர்களுக்கும், துணை மருத்துவ ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த உத்தரவு டெல்லியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து டெல்லி மகிளா காங்கிரஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்காத டெல்லி அரசு, இதுபோன்று சுற்றறிக்கை அனுப்பியதற்கு வெட்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.