புதுடெல்லி: டென்மார்க் நாட்டில் நடைபெறும் 3 நாள் பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்ற முடியாத நிலையில் உள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

அவரின் பயணத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி அளிக்காததே இதற்கு காரணம்.
8 நபர்கள் அடங்கிய குழுவிற்கு தலைமையேற்று செல்ல வேண்டிய கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், மேற்குவங்க அமைச்சர் ஃபிர்ஹாட் ஹகீமிற்கு அம்மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, டெல்லி மாநில அரசை மத்திய அரசு பார்க்கும் மற்றும் அணுகும்விதம் வெளிப்படையாக தெரியவந்துள்ளது மற்றும் ஆம் ஆத்மி மற்றும் பாரதீய ஜனதாவுக்கிடையில் மோதல் அதிகரித்துள்ளது.

கடந்தமாதம் டெல்லி அரசின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்மாநாட்டில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கெஜ்ரிவால் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து டெல்லி முதல்வர் பேசவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

கோபன்ஹேகன் பருவநிலை மாநாடு, அக்டோபர் 9 முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. கெஜ்ரிவால், அக்டோபர் 9ம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.