டில்லி

மோடிக்கும் நாட்டிலுள்ள மற்ற மக்களுக்கும் இடையே நடக்கப் போவதுதான் அடுத்த தேர்தல் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

டில்லியில் காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி எழுதிய ஆங்கிலப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நடந்தது.  இதில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக வின் யஷ்வந்த் சின்ஹா, மற்றும் மனீஷ் திவாரி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.  இந்த விழாவில் மூவரும் சிறப்புரை ஆற்றினார்கள்.

விழாவில் கெஜ்ரிவால் பேசும் போது யஷ்வந்த் சின்ஹாவை கைகாட்டி, “மக்கள் தாங்கள் தொலைத்த சுதந்திரத்தை பெற வரும் தேர்தலில் போராட உள்ளனர்.  வரும் 2019 தேர்தலில் கட்சிகளுக்கு இடையில் எந்த மோதலும் இல்லை.  உங்கள் தலைவர் அதுவும் அந்த மாபெரும் தலைவருக்கும் நாட்டிலுள்ள மற்ற மக்களுக்கும் இடையேதான் மோதல் நடக்கப் போகிறது.   இதற்கு அனைத்து எதிர்கட்சிகளுக்கும் சேருகிறதா இல்லையா என்பது வெறும் கணக்குக்கு மட்டுமே உதவும்.   மக்கள் அனைவரும் இந்த அரசை எதிர்க்க தயாராகி விட்டனர்.  மக்கள் உணவை விட சுதந்திரத்தையே உயிருக்கும் மேலாக மதிக்கிறார்கள்.

நாடெங்கும் மக்கள் மத்தியில் பயம்தான் பெருகி உள்ளது.   பயம் என்பது கிறித்துவர்களுக்கோ இஸ்லாமியர்களுக்கோ மட்டும் அல்ல,  வியாபாரிகள், தொழில் முனைவோர், பங்கு சந்தையில் உள்ளோர் என அனைவருக்கும் பயம் ஏற்பட்டுளது.  இந்த நேரத்தில் நாடு எவ்வாறு தனது செயல்களை செய்ய முடியும்.   மீண்டும் சொல்கிறேன் இந்த தேர்தல் பா ஜ கவுக்கும் எதிர்க் கட்சிகளுக்குமான தேர்தல் இல்லை, பா ஜ க வுக்கும் நாட்டு மக்களுக்குமான தேர்தல்” என கூறி உள்ளார்.

மனீஷ் திவாரி தனது உரையில்,  காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழலுக்கு எதிராக செயல்படும் எனவும், முதன் முதல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்த போது காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்ததையும் நினைவு கூர்ந்தார்.   அத்துடன் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்ததற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

யஷ்வந்த் சின்ஹா தனது உரையில் மகாபாரதத்தில் வரும் சல்லியன் பாத்திரத்துடன் பிரதமர்  மோடியை ஒப்பிட்டு பேசி மக்களை சிரிப்பில் ஆழ்த்தினார்.  தன்னை வேலை தேடுபவர் என அருண் ஜெட்லி கூறியதற்கும் பதில் அளித்தார். அவர், “நான் மாபெரும் சுதந்திர போராட்ட வீரரான பாபு குன்வர் சிங் பிறந்த மாநிலத்தில் இருந்து வருபவன்.   அவர் தனது 80ஆம் வயதில் 1857ஆம் வருடம் நடந்த முதல் சுதந்திர போராட்டத்தில் கலந்துக் கொண்டார்.  அரசு சேவைகளுக்கு வயது வரம்பு இல்லை.  அரசுப் பணிகளுக்கு மட்டுமே வயது வரம்பு உண்டு.  இதை அந்த மனிதர் புரிந்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.