நான் அனைவருக்குமான முதல்வர், பிரதமரின் உதவி தேவை: கெஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி முதல்வராக பதவியேற்ற ‍அர்விந்த் கெஜ்ரிவால், அனைத்து மக்களுக்குமான முதல்வராக செயல்படுவேன் என்று கூறியுள்ளதோடு, டெல்லியின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் ஆதரவும் உதவியும் தேவை என்றும் கூறியுள்ளார்.

முதல்வராக பதவியேற்ற பின்னர் அவர் பேசியதாவது, “தேர்தலில் கிடைத்த வெற்றி எனது வெற்றி அல்ல. உங்களின் வெற்றி. டெல்லியின் மகனான நான் முதல்வராகியுள்ளேன். இதனால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை. எனக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கும் போடாதவர்களுக்கும் சேர்த்தே உழைப்பேன். நீங்கள் யாருக்கு ஓட்டளித்தீர்கள் என்பது பற்றி கவலையில்லை.

டெல்லியில் உள்ள 2 கோடி பேரும் எனது குடும்பத்தினர் போன்றவர்களே. அவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அனைவருக்குமான முதல்வராக செயல்படுவேன். யாரிடமும் பாரபட்சம் கிடையாது. கடந்த 5 ஆண்டுகளில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படாமல் வளர்ச்சிக்காக பாடுபட்டேன். டெல்லியின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் ஆசி மற்றும் ஆதரவு தேவை. தேர்தலுக்கு முந்தைய பூசல்களை மறந்து விடுவோம்.

என்னை விமர்சித்தவர்களை நான் மன்னித்து விட்டேன். புதிய வகை அரசியலை நாடு பார்த்துள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு டெல்லி முன்மாதிரியாக உள்ளது. டில்லியை உலகின் முதன்மை நகராக மாற்றுவேன்.

பதவியேற்பு விழாவிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால், அவர் வேறு பணிகளில் பிஸியாக இருக்கிறார். வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. டெல்லியில் படிக்கும் மாணவர்களிடமும், சிகிச்சைக்காக வருபவர்களிடமும் கட்டணம் வசூலிக்க முடியாது” என்று அதிரடியாகப் பேசினார் கெஜ்ரிவால்.